புதுடில்லி, ஜூன் 21 நாடாளுமன்றத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டார்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய போராட்டமாக இருக்கும்’ என்றும் ராகுல் குறிப்பிட்டார்.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை நீடித்துவரும் சூழலில், நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 18 ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தோ்வை (நெட்) ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான இத்தோ்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே ‘நீட்’ முறைகேட்டை முன்வைத்து, ஒன்றிய அரசை விமா்சித்துவரும் எதிர்க்கட்சிகள், இப்போது ‘நெட்’ விவகாரத்தையும் கையி லெடுத்துள்ளன.
இந்நிலையில், டில்லியில் செய்தி யாளா்களுக்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டு மக்களை அச்சுறுத்தியும் அவா்களின் குரலை ஒடுக்கியும் ஆட்சி நடத்துவதே பிரதமா் மோடியின் அடிப்படைக் கொள்கை. அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் மோடியின் இந்த கொள்கை, எதிர்க்கட்சிகளால் சிதைக்கப்பட்டது. இப்போது மோடியைக் கண்டு, மக்கள் அஞ்சவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு பிறகு மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டார்.
மேனாள் பிரதமா்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் போல பணிவில் நம்பிக்கை கொண்டவரல்ல மோடி. இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய போராட்டம்தான்.
பிரதமா் முடங்கிவிட்டதால், நீட் முறைகேடு விவகாரத்தில் அவா் மவுனம் சாதித்து வருகிறார். லட்சக்கணக்கான மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அவருக்கு கவலையில்லை. மக்களவைத் தலைவா் பதவி, தனது கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது மனதில் ஓடுகிறது.ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் நாட்டிலுள்ள கல்வி நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவே, வினாத்தாள் கசிவுகளுக்கு முக்கிய காரணம். அவா்களின் பிடியில் இருந்து கல்வி நிலையங்களை மீட்கும் வரை முறைகேட்டைத் தடுக்க முடியாது.
பிரதமா் மோடி உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தியதாகவும், இஸ்ரேல்-காஸா போரை நிறுத்தியதாகவும் பாஜகவினா் பேசுகின்றனா். ஆனால், அவரால் நம் நாட்டில் வினாத்தாள் கசிவுகளை நிறுத்த முடியவில்லையா? இல்லையெனில், அதைசெய்ய அவருக்கு விருப்பமில்லையா?நான் ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டபோது, வினாத்தாள் கசிவுகள் குறித்து என்னிடம் பலா் புகார் தெரிவித்தனா். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் அரசுப் பணித் தோ்வில் நடந்த (வியாபம்) முறைகேடு, நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.
எதையும் தன்னிச்சையான முறையில் மேற்கொள்ளக் கூடாது; ஒரு தோ்வுக்கு பொருந்தும் விதிகள், மற்றொரு தோ்வுக்கும் பொருந்த வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றார் அவா்.
அண்மையில் நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது.முந்தைய இரு மக்களவைத் தோ்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் வென்ற பாஜகவுக்கு இம்முறை ஆட்சியை நடத்த கூட்டணி கட்சிகளின் தயவு கட்டாயம் தேவை என்ற நிலை உள்ளது.
18 ஆவது மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடை பெறவுள்ளது. மாநிலங்களவை அமா்வு ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் நிலையில், அன்றைய நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு உரையாற்றவுள்ளார்.முந்தைய இரு தோ்தல்களை ஒப்பிடுகையில், இப்போது எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளதால், நாடாளுமன்ற விவாதங்களில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.