நிலவை ஆராய்வதற்காகப் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்கலங்களை அனுப்பி வருகின்றன.சீனாவின் விண்வெளி ஆய்வு மய்யமான சிஎன்எஸ்ஏ (CNSA) 2019ஆம் ஆண்டு Chang’e- – 5 விண்கலத்தை நிலவில் தரை யிறக்கியது. இதைத் தொடர்ந்து உலக வரலாற்றில் முதன்முறையாக, இந்தியா நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கியது.
சீனா Chang’e – 6 விண்கலத்தை மே 3ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இது மே 8ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. ஜூன் 2ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் உள்ள அபோலோ பேசின் (Apollo Basin) எனும் இடத்தில் திட்டமிடப்பட்டது போலவே தரையிறங்கியது. தென் பகுதியிலேயே இந்த இடம் தான் சமதளமாக இருப்பதால், இது தேர்ந்தெடுக்கப்பட்டதாக சிஎன்எஸ்ஏ தெரிவித்தது.
உரிய பகுதியில் இறங்கும் முன்னர் 100 மீட்டர் உயரத்தில் பறந்தபடி 3டி ஸ்கானிங் முறையில் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. இதன்மூலம் தரையிறங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரியவந்தது. இதற்குப் பின் செங்குத்தாக, மிக மெதுவாக விண்கலம் நிலவில் இறங்கியது.
இந்த விண்கலம் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து 2 கிலோ மண்ணை ஆய்வுக்கு எடுத்து வர உள்ளது. நிலவின் நிலத்தைத் தோண்டுவதற்கு ஏதுவான இயந்திரக் கைகள் இந்த விண்கலத்தில் உள்ளன. ஜூன் 25ஆம் தேதி இது பூமிக்குத் திரும்பி வரும்படியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.