புதுடில்லி, ஜூன் 17- மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என்றும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்துமுடிந்த மும்பை வடமேற்கு தொகுதி மக்களவைத் தேர்தலில்ஏக்நாத் ஷிண்டே பிரிவுசிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர் 48வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இத்தேர்தலின் போது, அத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசியை ரவீந்திர வைகரின் உறவினர் ஒருவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விவகாரம் குறித்து காவல்துறை யினர்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியை தனது எக்ஸ்வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி,
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என்றும் அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை என்றும், நமது தேர்தல் நடை முறையில் வெளிப்படைத்தன்மை குறித்துகடுமையான சந்தேகங்கள் எழுப்பப்படுவ தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அமைப்புக்கள் பொறுப்பற்றவைகளாக மாறும் போது, ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாவதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண் டும் என்று டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பிரைமரி எனப்படும் உள்கட்சி தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில், போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற பிரைமரி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும், நல்வாய்ப் பாக ஆவணங்கள் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டி ருந்தார்.
ஒருவேளை ஆவணங்கள் இல்லையென்றால் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் எனவும் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் கேள்வி எழுப்பி இருந்தார்.
ராபர்ட் எஃப் கென்னடியின் இந்த பதிவை மறுபதிவு செய்துள்ள எலான் மஸ்க், “தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்என்றும், மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாகவே உள்ளது’’ என்றும் தெரிவித்துள்ளார்.