பிரதமரின் வழக்கமான வம்படி பேச்சால் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, மே 30 ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் காந்தியார் பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர்
நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:
காந்தியார் மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் காந்தியாரைப் பற்றி உலகத்துக்கு தெரிவித்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? ஆனால், உலக நாடுகளுக்கு அவரைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மன்னிக்கவும். காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அந்தப் படத்தை நாம் தயாரிக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருந்த நிலையில், காந்தியார் அவர்களுக்கு சளைத்தவர் அல்ல. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தை சுற்றி வந்த பிறகு இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதள பக்தத்தில், “காந்தி திரைப்படம் வெளியான 1982-ம் ஆண்டுக்கு முன்பு காந்தியாரைப் பற்றி உலகத்துக்கு தெரியாது என பிரதமர் கூறி உள்ளார். இதன்மூலம் காந்தியின் புகழுக்கு பிரதமர் மோடி களங்கம் கற்பித்திருக்கிறார். வாராணசி, டில்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய அமைப்புகளை அழித்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். காந்தியின்தேசியவாதத்தை ஆர்எஸ்எஸ் காரர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இது உணர்த்து கிறது. அவர்களுடைய சித்தாந்தம் உருவாக்கிய சூழல்தான் நாதுராம் கோட்சே மூலம் காந்தியை படுகொலை செய்ய வழிவகுத்தது” என பதிவிட்டுள்ளார்.