கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு
கோபிமொடச்சூர், மே 23- கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கொளப்பலூர் செட்டியாம் பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் இவருக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற் போது கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று (22.5.2024) கோவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே பழனிச்சாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணையில், கோவில் திருவிழா வில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து பூசாரி பழனிச்சாமி (வயது 45) உள்ளிட்ட 5-க்கும் மேற் பட்டோர் சாப்பிட்டதாகவும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப் படுகிறது. ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் சக்தி எங்கே?
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு – 5 பேர் கவலைக்கிடம்
பெலகாவி, மே 23- கருநாடகாவில் கோவில் திருவிழாவின் போது ‘பிரசாதம்’ சாப்பிட்ட 51 பேர் உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்திலுள்ள பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 51 பேர் உடனடியாக அருகில் உள்ள சாவதட்டி மருத்துவமனை மற்றும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள னர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹூலிகட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உடல்நிலையை கண் காணித்து வருகின்றனர்.