புதுடில்லி, மே 17- அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தது உச்சநீதிமன்றம். காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி ஒருவர் ஆஜராகவில்லை என்றால், அவரை நீதிமன்ற அனுமதி பெற்றுதான் அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு எதிர்க் கட்சியினர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு கைது செய்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் அனைவரும் கடும் கண் டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறையின் கைது நட வடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், அமலாக்கத்துறையை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும்போது, அவ் வழக்கில் தொடர்புடையோரை அமலாக்கத் துறை கைது செய்வது தவறு என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் ஒருவரை கைது செய்யும் அமலாக்கத் துறையின் சட்டப்பிரிவு 44அய் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று (16.5.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அழைப்பாணை அனுப்பி ஒருவர் ஆஜராகவில்லை என்றாலோ, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்தாலோ அவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறை சட்டப் பிரிவு 44-அய் எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தால் அவரையும் அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நினைத்தால், நீதிமன்ற அனுமதி பெற்றுதான் அவரை காவலில் எடுக்க முடியும் என்றும், இதற்காக சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒருவரை காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து சிறப்பு நீதிமன்றம் ஆய்வு செய்து அமலாக்கத்துறை மனு மீது முடிவுஎடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.