கருஞ்சட்டை
இன்று (10-5-2024) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவா சையை அடுத்து வரும் ஒரு நாளுக்கு ‘‘அட்சய திருதியை” என்று ஹிந்துப் புராணம் கூறுகிறது.
சயம் என்றால் தேய்தல். அட்சய என்றால், அதற்கு எதிர்பதம் வளருதல் என்று பொருளாம். அள்ள, அள் ளக் குறையாத அட்சய பாத்திரம் என்று ‘மணிமேகலை’ காவியத்தில் வரும் அல்லவா!
இந்த நாளுக்காக சொல்லப்படும் ‘மகாத்மியங்கள்’ ஒன்றா, இரண்டா? உண்மையாக இருந்தால் ஒரே ஒரு கதைதானே இருக்கும்.
ஊருக்கு ஊர் ஊத்தைவாயர்கள் உளறுவதற்குப் பெயர்தானே புராணப் பழுதியும், மதச் சமாச்சாரங்களும்.
பூலோகத்தைப் பிரம்மன் படைத்த நாள்தான் இந்நாள். ராமன் வாழ்ந்த திரேதாயுகம். இந்த நாளில்தான் பிரம்மாவால் படைக்கப்பட்டதாம்.
வறுமையில் வாடியவன் குலேசன். அவனுக்கு 27 பிள்ளைகள். வறுமையைப் போக்கிக் கொள்ள அவன் நண்பன் கண்ணனை நாடிச் சென்றான். கண்ணனுக்கு மிகவும் விருப்பமான அவலைக் கொண்டு சென்று கொடுத்தான். அந்த அவலை அவன் தின்று முடித்த போது, குசேலன் வீடு குபீர் மாளிகையாகக் காட்சி அளித்தது. அவனின் மனைவி நகைக் காய்ச்சி மரமாகக் காட்சி அளித்தாள். செல்வம் கொழித்த அந்த நாள்தான் அட்சய திருதியையாம்.
‘‘27 பிள்ளைகளைப் பெற்ற குசேலனுக்கு 20 வயதுக்கு மேற்பட்ட ஏழு தடியன்கள் இருக்கமாட் டார்களா? இந்த ஏழு தடிப் பசங்களை வீட்டில் வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந் தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா?” என்று அறிவார்ந்த கேள்வியைக் கேட்டவர் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (பொன்னி, பொங்கல் மலர், 1948).
அஷ்டலட்சுமி, தான்ய லட்சுமி அவதாரம் எடுத்த நாள்தான் இந்த அட்சய திருதியையாம். இப்படி பற்பல அண்டப் புளுகு மூட்டைகள்! இவற்றையெல்லாம் சொன்னவர்கள் யார்? கடவுளே சொன்னாரா, அவரே எழுதி வைத்தாரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடாதீர்கள். அப்படிக் கேட்டால், அவர்கள் நாத்திகர் கள். நாக்கில் புற்று வந்து சாவார்கள் என்று ‘சபி’ப்பார்கள்.
இதில் அய்தீகம் என்ன என்றால், இந்த நாளில் குன்றிமணி அளவாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் அந்த வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்குமாம்.
கடன் வாங்கியாவது தங்கம் வாங்குகிறார்கள். அன்று வாங்கிய தங்கத்தை அடகு வைத்துதான் தங்கம் வாங்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத் தும் கொடுமைதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
வியாபாரிகள் அட்சய திருதியைப்பற்றி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்வதால், மக்கள் நகைக் கடைகளில் குவிய ஆரம்பிக்கிறார்கள் – இந்தக் கூத்து கடந்த சில ஆண்டுகளாகத்தான் களை கட்டி நிற்கிறது. 2011 ஆம் ஆண்டில் 700 கிலோ, 2012 இல் 720 கிலோ, 2013 இல் 1100 கிலோ, 2014 இல் 1500 கிலோ, 2015 இல் 2500 கிலோ என நகைக் கடைகளில் விற்பனை யானது.
தங்கம் விலை இறக்கைக் கட்டிப் பறக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்னும் அதிக விற்பனைதான்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் குவிந்தது என்பதற்கு ஆதாரம் உண்டா? புள்ளி விவரம்தான் உண்டா?
மத நம்பிக்கைகள் சுரண்டலின் கூடாரம்தான் என்பதற்கு இந்த அட்சய திருதியை ‘திருக்கூத்து’ ஒன்று போதாதா?
‘‘பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை வைத் தாயிற்று. அதனால் என்ன? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகளில் முப்போகம் விளையாதா?” (‘தினமலர்’, 18.8.2009) என்று கேட்டார்களே, அட்சய திருதியை வந்தால், மாதம் மும்மாரி பொழியுமா? நாம்கூடக் கேட்கலாமே!