எம்மியக் கத்தை எதிர்த்திடு வோரை
நாமின்று சில ஞாயங் கேட்டோம்
உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதீகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் ஐயர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை
உங்கள் சடங்குகள் உங்கள் மடங்கள்
இவைகள் இதுவரை என்ன செய்தன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்த தென்ன?
இலட்சம் ஆண்டாய் ஈந்த தென்ன?
ஓர்யுக மாக உருட்டிய தென்ன?
சதுர்யுக மாகச் சாய்த்த தென்ன?
பசியால் மக்கள் பறக்கின் றாரே
நோயால் மக்கள் நொடிகின் றாரே
தொழிலின்றி மக்கள் சோர்கின் றாரே
வாணிபம் கெட்டு வதைகின் றாரே
கல்வி யின்றிக் கலங்கு கின்றாரே
ஆடை யின்றி அலைகின் றாரே
வீடின்றி மக்கள் வெளிக்கின் றாரே
பரதேசம் சென்று பதைக்கின் றாரே
அண்டை வீட்டினர் அரிப்பார் என்றும்
பக்கத் துள்ளார் பழிப்பார் என்றும்
எதிர்த்த வீட்டினர் இளிப்பார் என்றும்
பின்வீட் டார்கள் பிதற்றுவார் என்றும்
சாதியார் சனங்கள் சபிப்பார் என்றும்
நாட்டாண்மைக் காரர் கேட்பார் என்றும்
பெரியதனக் காரர் பேசுவா ரென்றும்
பாவம் வந்து பாயும் என்றும்
நரகம் வந்து நலிக்கும் என்றும்
சனியன் வந்து சாரும் என்றும்
தோஷம் வந்து தொலைக்கு மென்றும்
குருக்கள் வந்து கூவுவா ரென்றும்
கிழவர் வந்து கேட்பா ரென்றும்
பொன்னியக் கத்தைப் பின்பற்றா திருப்பதா?
இதோ பாருங்கள் எமது தோழர்
மன்னும் பெருமைப் பொன்னு சாமியின்
செல்வ ரான சிவசங் கரனும்
கதாஸ்தர் வேலை எதார்த்த வாதி
கோபாலன் பெற்ற குணவதி யான
திருநிறைச் செல்வி கிருஷ்ண வேணியும்
உருவோங் கியசீர்த் திருவேங் கடனார்
பண்புசேர் செல்வி படினாம் பாளும்
கோபாலன் பெற்ற பூபாலன் ஒத்த
நேச மிக்க கேசவன் தானும்
சுயமரியாதைத் தூய இயக்கத்
திருமணம் கண்டு பெருமக் களுக்கு
நன்னெறி காட்ட முன்வந் தார்கள்!
வீரப் பெண்கள் வீரக்கு மாரர்கள்
ஆரும் இன்பால் அகிலத்தில் வாழ்க!
மணமக்கள் பெற்ற குணமிக்க சுற்றத்தார்.
உயர் கூற வந்தவர் தூய
சுயமரியாதை இயக்கம் வாழியவே!
– ‘குடிஅரசு’, மாலை-8. மலர் 24.
ஈரோடு, 9.10.1932