இயக்க மகளிர் சந்திப்புகள் (11)

Viduthalai
5 Min Read

இரண்டு ரூபாய் தாருங்கள்! குழந்தையைத் தருகிறேன்! அதிர வைத்த பெரியார்!
வி.சி.வில்வம்

இயக்க மகளிரில் சத்தமில்லாமல் சாதனை செய்தோர் நிறைய உள்ளனர்! ஏதோ…‌ திருமண வரவேற்பிற்குச் செல்வது போன்றதல்ல; இயக்க நிகழ்ச்சிகளுக்குப் போய் வருவது!

பெரியாரால் பாராட்டு பெற்றவர்!
அதுவும் நாம் பார்க்க இருக்கும் ஜெயமணி அம்மா அந்தக் காலத்திலேயே தெருமுனைக் கூட்டங்களில் பேசியதுடன், குறிப்பாக மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி களைத் தமிழ்நாடெங்கும் நடத்தியவர்! பெரியாரால் பாராட்டு பெறப்பட்டவர்!
கும்பகோணம், சுவாமிமலை அருகேயுள்ள திருவலஞ்சுழி சொந்த ஊர். இப்போது வயது 78 ஆகிறது. நினைவு களில் பிழையில்லாமல் பேசுகிறார்! பேசும் வார்த்தைகளில் பெருமிதமும், உற்சாகமும் தெரிகிறது!

மலேசிய நிகழ்ச்சி!
எம்.எஸ்.நாதன், உலகாம்பாள் இவரின் பெற்றோர்கள். அப்பா ஹோமியோபதி மருத்துவராக இருந்து கேரளா, மும்பை மற்றும் மலேசியா, சிங்கப்பூரிலும் சிகிச்சை செய்தவர். கேரளாவில் மட்டுமே 15 ஆண்டுகள் தொழில் செய்திருக்கிறார்.
இவர் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பெரியார் மலேசியா சென்றுள்ளார். அப்போது எம்.எஸ்.நாதன் அவர்கள் தொழில் நிமித்தமாக மலேசியாவில் இருந்துள்ளார். அங்கு பெரியாரைச் சந்தித்து, அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வாங்க! கருப்புச் சட்டை!
இயக்கத்தில் குடந்தை வட்டாரப் பொறுப்பாளராக இருந்ததுடன், பெரியோர்களுக்குக் கையெழுத்துப் பயிற்சி அளிப்பது, மாணவர்கள், இளைஞர் களுக்குக் கொள்கைப் பயிற்சி அளிப்பது என இயக்கச் செயல்பாடுகளைத் தம் வாழ்வின் அங்கமாகக் கொண்டுள்ளார்!
“என்னைச் சிறு வயதில் ‘கருப்புச் சட்டை’ என்றே அழைப்பார்கள் என்கிறார் ஜெயமணி அம்மா. அனைத்து நிகழ்வுகளுக்கும் தவறாமல் அழைத்துச் செல்வாராம் இவரின் தந்தை. இவருக்கு 6 மொழிகள் தெரியுமாம். தாய் உலகாம் பாள் அவர்களும் இயக்கவாதியாக இருந் துள்ளார்!

‘புரபசர்’ குமார்!
சுவாமிமலை நாராயணசாமி, சின்னையா இருவரின் ஏற்பாட்டில் 1962 இல் கே.ஆர்.குமார் என்பவரோடு ஜெயமணி அவர்களுக்குத் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றுள்ளது! கே.ஆர்.குமார் அவர்களின் சொந்த ஊர் குன்னூர். மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி செய்வதில் புகழ் பெற்றவர். தோழர்களால் “புரபசர்” குமார் என அறியப்பட்டவர்.
“திருமணம் முடிந்ததும் பசுபதி கோயில், தேவனாம்சேரி, தாதம்பேட்டை போன்ற ஊர்களில் இருந்தோம். இணையரும் ஹோமியோபதி மருத்துவர். அவருக்குத் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 4 மொழிகள் தெரியும். தமிழ்நாடு முழுக்கச் சென்று மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் செய்பவர். தவிர கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். நானும் அவருடன் சென்று பொருட்களை எடுத்து வைப்பது உள்ளிட்ட உதவிகளைச் செய்வேன் என்கிறார் ஜெயமணி.

மந்திரமா? தந்திரமா?
நாளடைவில் மந் திரமா? தந்திரமா? நிகழ்ச் சியின் மீது ஆர்வம் ஏற் பட்டு, இணையர் குமார் அவர்கள் மூலம் 3 நாட்களில் முழுமையாகக் கற்றுக் கொண்டாராம். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை அருகில் முதன்முதலில் தனியாக நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இணையர் குமார் மறைந்திருந்து நிகழ்ச்சி களைப் பார்த்தவர், முடிந்ததும் வெகுவாகப் பாராட்டினாராம்.
உடல் நலம் குன்றிய நிலையில் குமார் அவர்கள் 2011ஆம் ஆண்டில் மறைந்து விட்டார்.
இவர்களுக்கு 4 ஆண், 1 பெண் குழந் தைகள். இவர்கள் குடும்பத்தில் மட்டும் மொத்தம் 8 ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாம்.

தமிழ்நாடு முழுக்கப் பயணம்!
சிறிது காலத்திற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளைச் செய்யத் தொடங்கியுள்ளார் ஜெயமணி. அப்போது வயது 45. தானே பொருட்களைத் தூக்கிக் கொண்டு, பேருந்தில் பயணம் செய்து, ஒவ்வொரு ஊராகப் பயணித்துள்ளார். எவ்வளவு சமூக அக்கறையும், ஈடுபாடும் நிறைந்திருக்க வேண்டும் மனதில்!
கடைசியாகத் திருவாரூரில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி செய்துள்ளார். முன் பெல்லாம் அடிக்கடி மகளிர் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வாராம். திருமகள், பார்வதி, மனோரஞ்சிதம், திருவாரூர் இராஜலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் சில தோழியர்களுடன் செல்வாராம். மகளிர் அமைப்பை வலுப்படுத்த, மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னிறுத்தி, காவிரி நீர் உரிமை கோரி, கோயில் நுழைவுப் போராட்டம் என்கிற காரணங்களுக்காக இவரின் பயணம் அமைந்திருந்ததாம்!

இராமேஸ்வரத்தில் பிரச்சினை!
அதுசமயங்களில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளும் செய்வாராம். ஒருமுறை இராமேஸ்வரத்தில் நிகழ்ச்சி நடத்திய போது, சிலர் குறுக்கிட்டு பிரச்சினைகள் செய்ததோடு, பொருட்களை எல்லாம் அள்ளி வீசி விட்டார்களாம். உடனே பெரியாருக்குத் தகவல் கொடுக்க, அவர் தூத்துக்குடி நிகழ்ச்சியில் இருந்தாராம். உடனே அங்கு வர சொன்னாராம். சென்றதும் விவரங்களைக் கேட்டு, சில ஆலோசனைகளும் கூறி, அடுத்த நாளே வேறொரு ஊருக்குப் போகச் சொன்னாராம்.
மந்திரமா? தந்திரமா? மட்டுமின்றி, தெருமுனைக் கூட்டத்திலும் பேசும் ஆற்றல் பெற்றவர் ஜெயமணி. 30 ஆண்டுகளுக்கு முன்பே தனியாகப் பயணம் செய்து, இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பது பெரும் சாதனை அல்லவா?

தரையில் அமர்ந்த பெரியார்!
ஒருமுறை உள்ளியக்குடி எனும் கிராமத்தில் தரையில் பலகைப் போட்டு பெரியார் பேசிக் கொண்டிருந்தாராம். தம் இணையருடன் ஜெயமணி பார்க்க சென்றுள்ளார்.‌ அருகில் இருந்த நாற் காலியில் அமருங்கள் என்றாராம் பெரியார். ஜெயமணி அவர்கள் தயங்கவே, அதட்டி உட்கார வைத்துள்ளார் பெரியார். தலைவர் தரையில் அமர, நாம் நாற்காலியில் அமர்வதா எனகிற தயக்கம் ஜெயமணி அவர்களுக்கு! ஆனாலும் பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும் வேறல்லவா! அதனால் தானே அவர் ஒப்பற்ற தலைவராகவும், அவரின் தொண்டர்கள் ஓய்வறியா உழைக்கும் தொண்டர்களாகவும் இருக்கிறார்கள்!

பெயர் வைக்க 2 ரூபாய்!
“கும்பகோணம் தேரடி அருகே கூட்டம் ஒன்று நடைபெற்றது. முடிந்ததும் எங்கள் குழந்தையைப் பெரியாரிடம் கொடுத்து பெயர் வைக்கச் சொன்னோம். “அன்புமணி” எனப் பெயர் வைத்தவர், குழந்தையை அவரே வைத்துக் கொண்டார். கேட்டதற்கு, “2 ரூபாய் கொடுத்துவிட்டு, குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள்”, என்றாராம். சுற்றியிருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்!
எனது தந்தையார் எம்.எஸ்.நாதன் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளின் போது தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் வந்து சிறப்பு செய்தார்கள். அந்நிகழ்வில் கருப்பையா (மூப்பனார்), கும்பகோணம் ஏ.ஆர்.ஆர், சீர்காழி எத்திராஜ் போன்றோர் பங்கெடுத்தனர்!

15 நாள் சிறைவாசம்!
ஏராளமான நிகழ்ச்சிகள், மாநாடுகள், போராட்டங்களில் கலந்து கொண்டு சிலவற்றில் கைதாகி சிறை சென்றுள்ளேன். குறிப்பாக 69 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என்கிற நீதிபதிகளின் கொடும் பாவி எரித்து வேலூர் சிறையில் 15 நாள்கள் சிறையில் இருந்தேன்.
அன்னை மணியம்மையார் அவர்களை நிறைய முறை சந்தித்துள்ளேன்.‌ அவர்களின் அயராத உழைப்பே, நம் இயக்கப் பெண் களுக்கு அடிப்படை! அம்மாவுக்குப் பிறகு, ஆசிரியர் காலத்தில் நிறைய மாற் றங்கள் வந்துவிட்டன! இயக்கத்தில் மகளிர் குவிந்துவிட்டனர்! குடும்பம், குடும்பமாகத் திரண்டு வருகிறார்கள்! தமிழ்நாட்டைக் கடந்து உலகெங்கும் பெரியார் கொள்கைகளைக் கொண்டு சென்ற பெருமை ஆசிரியருக்கு உண்டு! அதுமட்டுமின்றி ஆசிரியர் வந்த பிறகு, புதிய பல பத்திரிகைகளும் இயக்கத்திற்கு வந்துள்ளன!

சாதனைத் தலைவர் ஆசிரியர் வீரமணி!
வீட்டு நிகழ்ச்சியிலோ, பொது இடத்திலோ ஆசிரியருடன் நாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் உறவினர்கள், நண்பர்கள் நம்மை வியப்பாகவும், பெருமையாகவும் பார்ப்பார்கள்! அதைவிட பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா என்று யோசித்தவர்கள், இன்று நம் தலைவரை, ஆசிரியரை வியந்து போற்றுகிறார்கள்!
அப்பேற்பட்ட சாதனை இயக்கத்தில், சாதனைத் தலைவரோடு, இறுதி வரை கொள்கைப் பயணம் மேற்கொள்வதே என் ஆசை”, என உருக்கமாகப் பேசுகிறார் ஜெயமணி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *