தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதத்தைப் பயன்படுத்தலாமா?

viduthalai
3 Min Read

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு; இந்திய அரசியல் சட்டமும் இதனை ஆணி அடித்ததுபோல் அறுதியிட்டுச் சொல்லியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தையோ – அது சார்ந்த சமாச்சாரங்களையோ பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்துள்ளன.

இதுபற்றிய தீர்ப்பு வருமாறு:
மும்பை தானே நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து – பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கப்சே என்பவரின் தேர்தல் செல்லத்தக்கது அல்ல என்பது மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு (15.4.1994).

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பவன் சிங் – இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். விசுவ இந்து பரிஷத்தைச் சார்ந்த சத்விரித்தாம்பரா என்பவரும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பிரமோத் மகாஜன் என்பவரும் – பா.ஜ.க., வேட்பாளருக்கு ஆதரவாக – ஹிந்து மத அடிப்படையில் வாக்கு கேட்டார்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். 1991ஆம் ஆண்டு – மே 21ஆம் தேதி, விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் – சத்விரிதாம்பரா, ஹிந்து மதத்தின் அடிப்படையில் ஓட்டுகளைக் கேட்டது உண்மை என்றும், அந்த மேடையில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்கப்சேவும் இருந்தார் என்றும் உறுதிப்படுத்திய நீதிபதி ஏ.சி. அகர்வால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 123 (3)க்கு இது எதிரானது என்று கூறி – தேர்தலை, செல்லாது என்று அறிவித்திருக்கிறார்.

“பா.ஜ.க.வைச் சார்ந்த மகாஜன் என்பவரும் – வேட்பாளர் கப்சேயும், ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் பகைவர்கள் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் நண்பர்களாக வாழும் நிலையில் – இரு சமூகத்தினருக்கு இடையே பகையை உருவாக்குவதாகும். சத்விரிதாம்பராவும் – மகாஜனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு – மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதற்கு வேட்பாளரும் துணை போயிருக்கின்றார்” என்று நீதிபதி அகர்வால் – தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார்!

2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுபுழா மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப்.டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி. தாமஸ். பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே) உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் மேனாள் ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சரும்கூட; தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் பி.எம். இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர்.
இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம். இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்ட சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்தவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.

இந்த வழக்கில் நீதிபதி சி.என். இராமச்சந்திரன் தீர்ப்பை அளித்தார் (31.10.2006). அந்தத் தீர்ப்பில், “மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார். எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்புகள் இவ்வளவுத் திட்டவட்டமாக – தெளிவாக இருக்க, பிரதமர் நரேந்திர மோடியிலிருந்து பிஜேபி அடிமட்ட நிலையினர் வரை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதவாதத்தைத்தான் முன் வைத்துப் பேசுகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – முஸ்லிம்லீக்கின் அறிக்கையாக உள்ளது என்று கருத்துக் கூறியுள்ளார் பிரதமர் மோடி. ராமன் கோயிலைக் கையில் எடுத்துக் கொண்டு, ராமன் கோயில் திறப்பு – குட முழுக்கில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டாகக் கூறி வருகிறார்.

தேர்தலில் மதத்தைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்து வரும் பிஜேபியின்மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலில் மதப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பிஜேபி வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் செல்லாது என்ற தீர்ப்புகள் ஏற்கெனவே உள்ளன. – நினைவிருக்கட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *