இசை மன்றம் (Music Academy) இசை அறிஞர் (சங்கீத கலாநிதி) என்ற பட்டத்தை இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தமிழிசை தொன்மை மிக்கது
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர் ” (குறள் – 66)
குழலிசையும், யாழிசையும், தமிழ் மண்ணின் இசை என்பதைப் பதிவு செய்த வள்ளுவர், குழந்தை எழுப்பும் தமிழோசை இவற்றைவிட இனிதானது என்று நயம் பட உரைத்துள்ளார்.
மற்றொரு குறளில்
“பண்என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் ” (குறள் – 573)
பாட்டோடு பொருந்தி இயைந்து வராவிட்டால் இசையினால் என்ன பயன் ஏற்பட முடியும்? ஒரு பயனும் இல்லை என்பதாகும்.
அது போலக் கண்ணோட்டம் என்னும் பண்பு கண்ணுக்கு அமையாவிட்டால் கண்களால் என்ன பயன்தான் ஏற்பட முடியும். ஒரு பயனுமில்லை” (- நாவலர் உரை)
பாடலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு தொப்புள் கொடி உறவு போன்றது என்பதை எவ்வளவு அழகாக ஆணித்தரமாக விளக்கி யுள்ளார் நமது வள்ளுவர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் இசையும் இசைக் கருவிகளும் பாடகர் களும் கோலோச்சி இசைத் தமிழைப் போற்றி யுள்ளார்கள் என்பதைச் சான்றுகள் பகிர்கின்றன.
இடைக் காலத்தில் சமஸ்கிருதமும், தெலுங்கும் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தின.
திராவிடர் இயக்கத் தலைவர்கள், தமிழறி ஞர்கள், தமிழ் இசைவாணர்கள் ஒருங்கிணைந்த முயற்சியால் இன்று தமிழிசை அனைத்துத் தளங்களிலும் செல்வாக்குப் பெற்று வருகிறது.
இசைப் அறிஞர் தண்டபாணி தேசிகர் மேற்கூறிய குறளுக்கு அருமையான, பெருமை தரும் விளக்கத்தை ஒரு இசை அரங்கில் குறிப்பிட்டுள்ளார். இது ஒலி நாடாவில் உள்ளது.
“துன்பம் நேர்கையில் யாழ்
எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா -நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில்
பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
என்று தொடங்கும் பாடலை இசை அமைக்க சிற்சில ஆண்டுகள் சிந்தித்தேன். முதலில் அட்டானா இராகத்தில் பாடிப் பார்த்தேன். இந்த இராகத்தில் பாடினால் அதட்டுவது போல அமைந்துவிடும். குழந்தைகள் அலறி ஓடி விடும். பிறகுதான் தேஷ் இராகத்தில் இசை அமைத்துப் பாடினேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலைத் தண்டபாணி தேசிகர் இசையமைத்துப் பாடிய இராகத்தில் சஞ்சய் சுப்பிரமணியமும் பாடி வரு கிறார். இணையத்தில் ஒரு இலட்சம் பேர்கள் இந்தப் பாடலைக் கேட்டுள்ளார்கள். சஞ்சய் சுப்பிரமணியமும் அக்கரகாரத்து பாடகர்தான்.
தமிழிசையை இவர் பாடியதற்கு நல்ல வர வேற்பு கிடைத்ததால் புரட்சிக் கவிஞரின் மற் றொரு பாடலையும் சஞ்சய் சுப்பிரமணியம் பாடி வருகிறார்.
“நூலைப் படி – சங்கத் தமிழ்
நூலைப் படி -முறைப்படி”
என்றும் தொடங்கும் பாடல் வரிகளில் இறுதியாக வரும்
“சாதி என்னும் தாழ்ந்த படி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படித் தெரிந்து படி
தீமை வந்திடுமே மறுபடி
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும் படி
வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி”
என்ற வரிகளைத் தவிர்த்துப் பாடி வருகிறார்.
ஆனால், டி.எம். கிருஷ்ணா இசையின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேசும் போது தமிழிசை யின் தனித்த பங்களிப்பைக் குறிப்பிட்டு ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
குறிப்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரியார் பற்றி எழுதிய பாடலை கிருஷ்ணா பாடிய பிறகு சங்கிகள் கும்பலில் சலசலப்பைக் காண முடிந்தது.
இசைப் பாடகிகள் காயத்ரி, இரஞ்சினி ஆகி யோர் டி.எம். கிருஷ்ணாவிற்கு விருது வழங்கு வதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து இசை மன்றத்தில் பாடப் போவதில்லை என்று அறிவித்ததுள்ளனர்.
இச்சூழலில் தான் இசை அறிஞர் பட்டம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்து குழுமக் குடும்பத்தைச் சார்ந்தவரும் தற்போது இசை மன்றத்தின் (Music Academy) தலைவருமான என்.முரளி உறுதிப்பட அறிவித்துள்ளார்.
இந்த இரு பாடகிகள் தரம் தாழ்ந்து பெரியாரை வம்புக்கு இழுத்துள்ளனர். ஆசிரியர் வீரமணி அவர்கள் இதற்குத் தக்கதொரு அறிவுப் பூர்வமான அறிக்கையை அளித்துள்ளார்.
இந்த இரு பாடகிகளும் இசைக்கோட்டையில் நச்சுக் குண்டை வீசியுள்ளனர்.
அதற்குத் திரு என்.முரளி இந்த இருவரின் உள்நோக்கத்தைக்
குறிப்பிட்டுள்ளார்.
முற்போக்கு எண்ணம் கொண்ட பல இசை வாணர்களும், இசைப் பிரியர்களும் வன்மத்தைத் தூண்டி வசை பாடும் இந்த வல்லூறுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.
பெரியார் யார் என்பதை இந்தக் கேடு கெட்ட வர்களுக்குக் காலம் விரைவில் உணர்த்தும்.
எந்தச் சீர்திருத்தவாதியும் அடையாத வெற் றியைப் பெரியார் ஒருவர் தான் தன் வாழ்நாளி லேயே கண்டார் என்று அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக அறிவித்தார்.
அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை என்றும் குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.
1970ஆம் ஆண்டை அய்க்கிய நாடுகள் மன்றத்தின் யுனெஸ்கோ பன்னாட்டுக் கல்வி ஆண்டாக அறிவித்தது.
யுனெஸ்கோ அமைப்பு 1970ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று
புது உலகத் தீர்க்கதரிசி
தென் கிழக்கு ஆசியாவின்
சாக்ரடீஸ் என்ற வாசகங்களை
பொறித்த கேடயத்தைப் பெரியாருக்கு வழங்கியது.
இந்நிகழ்வில்தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர், ஒன்றிய அரசின் பெட்ரோலிய அமைச்சர் திரிகுணசென் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் வீரமணி அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
இசை பற்றி உலக மகாகவி சேக்ஸ்பியர்(If music be the food of love, play on) காதலுக்கு உணவு அன்பு என்பதால் இசையைத் தொடங்கு என்றார்.
வெறுப்பை, வேற்றுமையைப் போற்றும் சங்கிகளின் இருதோழிகள் இசைக் கலைஞர்கள் அல்ல, இசைக் கொலைஞர்கள் என்பதை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.