புதுடில்லி, மார்ச் 22- மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று (21.3.2024) இரவு கைது செய்யப்பட்டார்.
டில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ள தாக குற்றம்சாட்டப்பட்டுள் ளது. இதுதொடர்பாக அமலாக் கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அழைப்பானை அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.
இந்த அழைப்பானைகளை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதி பதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும் போது, “மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதலமைச் சர் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய் கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். பலமுறை அழைப்பானை அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கைது நட வடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப் போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22ஆ-ம் தேதி நடை பெறும்” என்று தெரிவித்தனர்.
கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலை யில் அமலாக்கத் துறை அதிகாரி கள் நேற்று இரவு 7 மணிக்கு டில்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத் தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப் பட்டார். டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
“முதலமைச்சர் கெஜ்ரிவால் பதவி விலக மாட்டார். சிறையில் இருந்து அரசை வழிநடத்துவார்” என்று டில்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கிடையே, கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.