கேள்வி 1 : பொது நலன், ஜனநாயகம் சார்ந்த எதிர்பார்ப்புகள் நடைமுறை சாத்தியமாகாமல் தொடரும் நிலைக்கு என்ன தீர்வு?
– க.மாரியப்பன், வேளச்சேரி
பதில் 1: மக்களின் ஒன்றுபட்ட உணர்வு என்ற நீறுபூத்த நெருப்பு வெறும் அனலாக இல்லாமல், வாக்குச் சீட்டு மூலம் முழுக் கனலாக மாறும்போது தீர்வு தானே கிடைக்கும்!
அநீதிகள் நிரந்தரம் அல்ல.
—
கேள்வி 2: தேர்தல் நேரத்தில் சி.ஏ.ஏ.வைக் கொண்டுவந்தது மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தவா?
– மா.விவேகமூர்த்தி, மாமல்லை
பதில் 2 : ஆம். நிச்சயமாக. அதைவிட முக்கியம் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. ஊழல் முகம் வெளியானதை மறைத்து திசை திருப்பும் உத்தியாகவும் பயன்படுத்தவுமே இந்த நடவடிக்கை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7, 8, 9, 10, 11 ஆகிய கூறுகள் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாகவே கொள்ளவில்லை என்பதையும் அது புரட்டியுள்ளது!
—
கேள்வி 3 : 400 சீட்டுகள் பெற்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்ற அனந்த ஹெக்டேவின் கூற்று போகிறபோக்கில் பேசியதா?
– கா.மாணிக்கம், வேலூர்
பதில் 3 : உள் ரகசியத்தை உடைத்துவிட்டார் அந்த அவசரக்கார கருநாடகப் பார்ப்பனர்! பூனைக்குட்டி வெளியே வந்தது!
—
கேள்வி 4 : “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்றால் சட்டமன்றங்களில் பெரும்பான்மை இல்லாவிட்டால் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு ஆளுநர் ஆட்சியா?
– தே.சங்கமித்ரா, மதுரை
பதில் 4 : இப்படி குளறுபடிகளுக்குப் பஞ்சமே இருக்காது! மாநிலங்களை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை – இலக்கு – மறவாதீர்!
—
கேள்வி 5 : இராமன் கோவிலால் பா.ஜ.க.விற்கு வாக்குகள் கிடைக்கும் என்றால் ஏன் தொடர் குழப்பத்திற்கு மக்களை இட்டுச்செல்கிறது ஒன்றிய அரசு?
– வா.சிவராமன், திண்டுக்கல்
பதில் 5 : அந்த வித்தையின் எதிர்பார்ப்பு காலாவதியாகிவிட்டதால்.
—
கேள்வி 6: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்கிறாரே அமித்ஷா?
– சா.வேலுச்சாமி, புதுக்கோட்டை
பதில் 6 : அரசமைப்புச் சட்டத்தை மறந்து இப்போதே ஒற்றை ஆட்சிக் கனவில் மிதக்கிறார் போலும்!
—
கேள்வி 7 : தமிழ்நாட்டில் எதிரணிகள் கூட்டணி அமைக்க முடியாமல் திணறுகின்றனவே?
– ஆ.அலெக்சாண்டர், திருச்சி
பதில் 7 : அதுதான் தமிழ்நாடு. பெரியார் மண் – சமூக நீதிக்கான ‘திராவிட மண்’ இது!
—
கேள்வி 8: சுதா நாராயணமூர்த்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தந்ததன் மூலம் நாட்டிற்கு ஏதாவது பலனுண்டா?
– வே.காவேரிமைந்தன், சேலம்
பதில் 8 : கார்ப்பரேட் கனவான்களான சிலரோடு ஒப்பிடும்போது மகளிர் என்பது ஓர் ஆறுதல்தான்!
—
கேள்வி 9: தேர்தல் அறிவிப்பு வருவதற்கே இத்தனை குழப்பங்களா?
– செ.கந்தவேல், காஞ்சி
பதில் 9 : முன்பு நடந்தவைகள் எல்லாம் வெளிவருவதால் அதனை ‘சரிப்படுத்தி’ புது வித்தைகள், வியூகங்கள் பற்றி யோசிக்க போதிய அவகாசம் வேண்டாமா?
—
கேள்வி 10: தொடர்ந்து தமிழர்கள் வட இந்தியர்களை தாக்குவதுபோன்ற போலி செய்திகள் வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் இராமனை அசிங்கமாக பேசுகின்றனர் என்றும் வதந்தி பரப்புகின்றனரே?
– கே.பலராமன், திருவள்ளூர்
பதில் 10 : பொய்ப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுப் பரப்பியாவது ஜாமீனை வாங்க முடியுமா? நோட்டாவைத் தாண்ட வேண்டும் என்ற பா.ஜ.க. முயற்சிதான்!