ராமனின் பெயரால் நடைபெற்ற நில மோசடிகள்
‘கேரவன்’ ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ள அதிர்ச்சித் தகவல்!
புதுடில்லி,பிப்.15- ராமன் கோயிலின் பெயரால் நடை பெற்று வந்துள்ள மோசடிகளை ‘கேரவன்’ (ஜனவரி 2024) ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.
2019 நவம்பர் 9 அன்று, தீர்ப்பளித்த உச்சநீதிமன் றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மோடியின் அரசு 2020 பிப்ரவரி 5-இல் சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைத்து உத்தரவிட்டது.
கோவில் கட்டுவதற்கான நன்கொடை வசூல் வேகம் கொள்ள ஆரம்பித்தது. இந்தியா மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் பெருமளவில் நன்கொடைகள் வசூலிக்கப் பட்டன. அப்போது, அதுவரை வெளிநாடுகளில் நன்கொடை பெற்று செயல் பட்ட 2000 தன்னார்வத் தொண்டு நிறுவனங் களை(அவை நாட்டிற்கு எதிராக செயல்படுகின்றன எனக் கூறி) ரத்துசெய்த அமித் ஷா-வின் உள்துறை, சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மட்டும் வெளிநாடுகளில் நன்கொடை பெறுவதற்கு அனுமதி அளித்தது.
ரூ. 3,500 கோடி அளவிற்கு
குவிந்த நன்கொடைகள்
2020 ஆகஸ்டில் 42 கோடி ரூபாயாக இருந்த நன் கொடை 2023 மார்ச்சில் 3500 கோடி ரூபாயாகக் குவிந்தது.
நரசிம்மராவ் அரசு பாபர் மசூதியைச் சுற்றிலும் உள்ள ராமச்சந்திரா கோட் பகுதியில்(Ramachandra kot) 61.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. இந்த நிலத்தில் பாபர் மசூதி மற்றும் ராமன் கோவில் கட்டுவதென்ற அரசின் முடிவை ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் முஸ்லிம் வழக்குதாரர்களும் ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால், இந்த மொத்த நிலத்தையும் மோடியின் அரசானது, சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவிடம் ஒப்படைத்தது.
ராமன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு மேல் வருவார்கள். வாஸ்துப்படி அமைக்க இந்த இடமும் போதாது. கோவில் வளாகம் சதுர வடிவில் இருக்க வேண்டும். எனவே கோவில் வளாகங்களை விரிவாக்கம் செய்வதற்காக வடகிழக்கு மூலையில் கூடுதல் நிலம் வாங்க வேண்டும் என்று அறக்கட்டளை அறிவித்தது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களை
தூரத்தில் நிறுத்திய மோடி
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரி மையான அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்த நாளான ஆகஸ்ட் 5, 2020-இல் அயோத்தி ராமன் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருந்த போது மோடி இந்தக் காரியத்தைச் செய்தார். அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை மட்டும் 52,509 பேர். அமித்ஷா கூட கரோனாவால் அப்போது பாதிக்கப்பட்டிருந்தார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பு காரண மாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற தனது அரசின் அறிவுறுத்தலுக்கே விரோத மாக 69 வயதான மோடி பூமி பூஜைசெய்தார்.
பாபர் மசூதி இடிப்பை தலைமை தாங்கி நடத்திய அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் போன்றோ ரை அழைக்கவில்லை. அதே போல சமீபத்தில் நடந்த ராமன் கோவில் திறப்பு விழாவின் போதும் “கடுமையான குளிர்காலம், அவர் களுக்கு உடல்நிலை தாங்காது” என்று அழைக்கப்பட வில்லை. தானே இந்துக்களின் ‘சாம்ராட்’ (பேரரசர்) என்று காட்டிக் கொள்வ தற்காக பாபர் மசூதி இடிப்பை நடத்தியவர் களின் தோள்களின் மீது ஏறி, எல்லாப் (அவப்)புகழையும், தானே பெற்றுக் கொண்டார்.
வரலாறு காணாத வகையில் அரங்கேறிய நில மோசடிகள்
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராமன் கோவிலைத் திறந்தாக வேண்டும் என்பதால் நிலங் களைக் கைப்பற்றும் வேலை மரண வேகத்தில் நடந்தது. மோடியின் ஒன்றிய அரசும், உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் அரசும் ராமன் கோவில் வளாகத்தை விரிவாக்கம் செய்வதற்காக சாம, பேத, தான, தண்டங்கள் என அனைத்து வழிகளிலும் நிலங்களைக் கொள்முதல் செய்ய அறக்கட்டளைக்கு பச்சைக்கொடி காண்பித்தன.
அறக்கட்டளையும் குவித்து வைத்திருந்த நன் கொடைப் பணத்தில் அரசு விதிமுறைகளை மீறி நிலங்களைக் கொள்முதல் செய்தது.
இந்த அறக்கட்டளை நேரடியாக நிலங்களைக் கொள்முதல் செய்யவில்லை. முதலில் தேர்ந்தெடுத்த ஆர்எஸ்எஸ் பாஜக வினர் நிலங்களை வாங்கினார்கள். நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களை விற்பனை செய்யா விட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்று மிரட்டப் பட்டு மலிவான விலைக்கு நிலங்கள் வாங்கப்பட்டன. வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நீதித் துறை அனைத்தும் அறக்கட்டளை சார்பாக செயல்பட்டன. குறிப்பிட்ட பகுதி நிலங்கள் அரசு, கோவில், வக்பு வாரியம் ஆகியவற்றுக்குச் சொந்தமாக இருந்தன. இவற்றில் பல்வேறு நிலத் தகராறுகளும் இருந்தன.
இரட்டை என்ஜின் ஆட்சிகளால்
எளிதாக நடைபெற்ற ஊழல்
இரட்டை எஞ்சின் ஆட்சிகளின் துணை இருந்ததால், நிலத் தகராறு தொடர்பான வழக்குகள் முடியும் வரை யெல்லாம் காத்திருக்க முடியாது என்று சட்ட விதி முறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இடைத் தரகர் களிடம் இருந்து அறக்கட்டளை நிலங் களைக் கொள் முதல் செய்யப்பட்டன. மலிவான விலைக்கு கைப்பற்றப் பட்ட நிலத்தை மிகமிக அதிகமான தொகையை தாராள மாக அள்ளிக் கொடுத்து அறக்கட்டளை விலைக்கு வாங்கியது. அரசு ஆவணங்களில் தில்லுமுல்லுகள் நடைபெற்றன. மனச்சாட்சி இருந்த சில வருவாய்த் துறையினர் மற்ற அரசு ஊழியர்களும் கடுமையான மன அழுத்தத்தில் பணிபுரிந்தனர். இவ்வாறான சட்ட விரோதச் செயல்கள் மூலம் அறக்கட்டளை மேலும் 71 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்து முடித்தது.
நிலமோசடிகளில் ஈடுபட்ட
ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. தலைவர்கள்
நிலங்களைக் கொள்முதல் செய்வதில் சம்பத் ராய் பன்சால், கோவிந்த் தேவ்கிரி, அனில் மிஸ்ரா ஆகியோர் முன்னணியில் இருந்தனர். இவர்களுடன் இவர்களது ஆட் களும் நிலப் பேரங்களில் ஈடுபட்டனர். ரிஷி கேஷ் உபாத்யாயா என்பவர் அயோத்தி மேயர் (பாஜக-வைச் சேர்ந்தவர்). அவரும் அவரது உறவினர்களும்(மருமகன் தீப் நாராயண் உபாத்யாயா) நில மோசடிகளில் ஈடுபட்டனர்.
சம்பத் ராய் பன்சால், பாபர் மசூதி இடிப்பில் ஒன்றிய குற்றப்புலனாய்வுத் துறை யால் குற்றம் சாட்டப்பட்ட அத்வானியுடன் சேர்ந்த 48 பேர்களில் ஒருவர். மசூதியை வேக மாக இடிப்பது எப்படி? என்று
பஜ்ரங்தளத்தினருக்கு பயிற்சி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். ராமஜென்ம பூமி அறக்கட்ட ளையின் பொதுச்செயலாளர். இவர்தான் தாங்கள் கட்டும் அயோத்தி ராமன் கோவில் நில நடுக்கம் போன்ற பேரிடர்களையும் தாங்கி ஆயிரம் ஆண்டுகள் நிற்கும் என்றவர்.
கோவிந்த் தேவ்கிரி ராமஜென்ம பூமி அறக் கட்ட ளையின் பொருளாளர். அனில் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினர். அறக் கட்டளை ஆவணங்களில் கூட்டுக் கை யெழுத்திடுபவர்.
ராமன் கோவிலுக்காக இடிக்கப்பட்ட
கவுசல்யா, கைகேயி கோயில்கள்
பக்கீர் ராம் கோவில் துறவி வாரிசுரிமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. வழக்கு முடிவதற்கு முன்பாகவே அரசு ஆவணங்களில் தில்லு முல்லு செய்யப்பட்டு அந்த கோவில் நிலம் 3.71 கோடிக்கு சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகமாக வாங்கப்பட்டது. ராமன் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப் பட்டது என்று பிரச்சாரம் செய்தவர்கள் பக்கீர் ராம் கோவிலை இடித்தனர். அதிலிருந்த சீதை, வல்லப் சிலைகளை அப்புறப்படுத்தினர்.
47.6 லட்சம் சந்தை விலையுள்ள பிளாட் எண் 138-இல் இருந்த 1040 ச.மீ. நிலம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இது போன்றே கவுசல்யா பவன், கைகேயி பவன் ஆகிய கோவில்களையும் இடித்த னர். 7000 ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டார்கள் என்று நச்சுப் பிரச்சாரம் செய்த ஆர்எஸ் எஸ் பாஜக-வினர், கைகேயி ராமனுக்கு மர வுரி ஆடை வழங்கி வனவாசத்திற்கு அனுப்பி வைத்த இடமாகச் சொல்லப்படும் கோவி லையும் இடித்தனர்.
சூறையாடப்பட்ட மக்களின் நன்கொடை
2020 ச.மீ. கொண்ட பிளாட் எண் 131 நிலத்தின் சந்தை விலை 92.5 லட்சம் ரூபாய் தான். ஆனால் அறக்கட்டளை வாரி வழங்கி யதோ 5. 6 கோடி ரூபாய். பிளாட் எண் 136-இல் இருந்த 676.85 ச.மீ. நிலத்தின் சந்தை விலை 27.0 8 லட்சம். ஆனால் அறக்கட்டளை ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆர்எஸ்எஸ் – பாஜககாரர்கள் நில மோசடிகள் மூலம் கோவில் பணத்தில் கொள்ளை லாபம் பார்த்தனர். கோவில் நிலங்களைக் கைப்பற்றி விற்பதற்கு உள்ளூர் பாஜக கிரிமினல்கள் கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டனர். நிலத் தாவாவில் இருந்த வக்பு வாரிய நிலத்தை ஹரிஷ் பதக் எனும் பாஜகக்காரர் தில்லு முல்லுகள் மூலம் கைப்பற்றினார்.
வெளிப்படைத் தன்மைக்கு
அரசே முட்டுக்கட்டை!
2021 அக்டோபரில் இருந்து எதிர்க்கட்சி கள் சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முறைகேடுகளைக் கடு மையாகக் கண்டித்தன. உடனே அறக் கட்டளை, தனது கணக்கு வழக்குகளை டாட்டா கன்சல்டன்சி சிஸ்டம்ஸ் நிறு வனத்திடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தது. ஆனால் டிசிஎஸ் தரவுகளில் உரிய விவரங்கள் இல்லை. ராமன் கோவிலைக் கட்டிய டாட்டா கன்சல்டன்சி பொறியாளர் கள் மற்றும் லார்சோ அன் டூப்ரோ நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வழங் கப்பட்டது போன்ற செலவின விவரம் என எதுவும் தரவுகளில் காணப்படவில்லை.
ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப் பட்டதன் விதிமுறைகள், கோவில் நன்கொடைகள் பெறுவதற்கான சட்ட அனுமதி, நன்கொடை விவரங்கள், செலவு விவரங்கள் போன்றவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியபோது தகவல்கள் மறுக்கப்பட்டன.
விதிகளை மீறி வரிவிலக்கு அளித்த நேரடி வரிகள் வாரியம்
கைலாஷ் சந்திரா என்பவர் ஒரு தணிக்கையாளர். ஆர்எஸ்எஸ் உறுப்பின ராக இருந்தவர். இவர் அறக் கட்டளை பற்றிய விவரத்தை கோரியபோது ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தன்னாட்சி அமைப்பு, எனவே, அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று பதிலளிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் நேர்முக வருவாய் வாரியம் பிரிவு 80 (ஜி) இன் கீழ் அறக் கட்டளைக்கு நன்கொடை வழங்குவதற்கு வரி விலக்கு அளித்திருந்தது. இந்த அனுமதியின் கீழ்தான் அறக்கட்டளை நன்கொடை களைப் பெற்றது. ஆனால், இந்த விதி வழி பாட்டுத் தலங்களை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொள் வதற்கு மட்டுமே பொருந்தும். புதிதாக கோவில் கட்டு மானங்களை மேற்கொள்வதற்கு இந்தப் பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்க முடியாது.
மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘ராமஜென்ம பூமி பராமரிப்புக் காக’ என்று குறிப்பிட்டுத் தான் அய்ந்து லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இந்த ரசீது கைலாஷ் சந்திரா கையில் உள்ளது.
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் நோக்கம், உறுப்பினர் தேர்வு முறை, அதி லுள்ள உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவை விவரம் கோரப் பட்ட போதும் உள்துறை அமைச்சகம் அது ‘மிகவும் ரகசியம்’, ‘மந்தனக் கோப்பு’ தொடர்பானது என்று மனு நிராகரிக்கப் பட்டது. தகவல் அறியும் உரிமை ஆணை யமோ வேடிக்கை பார்த்தது.
மோடியின் புதிய இந்தியாவில்
இன்னும் என்னென்ன நடக்குமோ?
சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மர்மங்கள் நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இது தான் அவர்களது நடை முறை. ரபேல் விமானக் கொள் முதல் ஒப்பந்தத்தில் நடந்தது போலவே அயோத்தி ராமன் கோவில் அறக்கட்டளை அமைத்தது மற்றும் அது மேற்கொண்ட நிலக் கொள்முதல் ஆகிய அனைத் திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. வழக்கமான நிலக் கொள்முதல் விதிகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. அதிகமாகக் கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் வாரிச்சுருட்ட அனுமதிக்கப்பட்டனர். வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தியபோது அந்த முயற்சி களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டன. இவை எல்லாமே ரபேல் ஊழல் விவகாரம் போன்றே நடந்துள்ளன.
ராமனின் பெயரால் நடைபெற்றுள்ள ஊழல், இந்துத்துவாதிகளின் பாசாங்குத் தனத்தை காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் பாஜக வினருக்கு மதம், கோவில் எல்லாம் லாபகர மான தொழிலாகிவிட்டது.
மோடி ஏற்கெனவே தனது பக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டி அரசியல் லாபத்தை அறுவடை செய்து இருக்கிறார். ராமன் கோவில் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம், அதற்காக நடத்தப்பட்ட மோசடிகள் இவை யாவும் ராமன் கோவில் திறப்பு விழா களேபரத்தில் மக்களால் மறக்கப்படலாம். ஆனால் ராமன் கோவில் நில மோசடிகளும் கொள்ளைகளும், மோடியின் ‘புதிய இந்தியா’ என்ன மாதிரியான முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்தும் சாட்சியங்களாக உள்ளன.
நன்றி: ‘தீக்கதிர்’ – 14.2.2024