சி.பி.எம். மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பின் சீதாராம் யெச்சூரி பேட்டி
திருவனந்தபுரம், பிப். 1 -பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் வலுவான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என, திருவனந்தபுரத்தில் மூன்று நாள்கள் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் முடிவு செய்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை உறுதி செய்யப் பணியாற்றுவோம் எனவும். பாஜகவை வெளியேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மத்தியக்குழு கூட்ட முடிவுகளை விளக்கி செய்தியாளர்களிடம் யெச்சூரி மேலும் கூறியதாவது:
பாஜக, ஜனநாயக அமைப்பையும், அரசமைப்பையும் கொன்று வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட ராமன் கோவிலின் சிலை திறப்பு, ஓர் அப்பட்டமான தேர்தல் நிகழ்வு. இந்த விழாவில் பிரதமர், உத்தரப்பிரதேச முதல மைச்சர், ஆளுநர் ஆகியோர் கலந்து கொண் டனர். ராமர் கோவில் கட்டப்படும் என்ற ‘உறுதிமொழியை’ நிறைவேற்றி விட்ட தாக, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதினர்.
இவை அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் முற்றாக மீறும் செயலாகும். காசி, மதுரா கோவில்கள் என்ற பெயரில் தற்போது இவர்களின் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. மதச்சார்பின்மைக்கு சாவு மணி அடிக்கத் துடிக்கிறார்கள்.
மாநிலங்களின் நிலைமைக்கேற்ற அணுகு முறை பெரும்பாலான மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பொது வேட்பாளர்கள் இருப் பார்கள். ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மை யையும் காக்க அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகமும், அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறது. சிபிஎம் இறை நம்பிக்கைக்கு எதிரானது அல்ல, மாறாக அரசியல் நோக்கங்களுக்காக அதைப் பயன் படுத்துவதை எதிர்க்கிறது.
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மற்றும் காங்கிரசுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கேரளத்தில் பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி வலுவாக களத்தில் உள் ளது. பீகாரில் நிதிஷ்குமார் கட்சியை தவிர்த்து, ‘மகா கூட்டணி’ களத்தில் உள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மோடி அரசின் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் போராட் டம் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி செய்தி யாளர்களிடம் கூறினார்.