”அண்டப் புளுகா – அறியவேண்டிய உண்மையா?”

viduthalai
2 Min Read

‘‘ஊசிமிளகாய்”

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘‘மன் கீ பாத்” எனப்படும் ‘‘மனதின் குரல்” ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்த ஆண்டின் முதல் ஒலிபரப்பு நேற்று (28-1-2024) வெளியானது.

அதில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் அண்மையில் ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததுபற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்!
மக்களை ராமன் கோவில் ஒருங்கிணைத்துள்ளது என்ற உண்மைக்கும், நடப்புக்கும் மாறான ஒரு தகவலைக் கூறியுள்ளார்!
மக்களை ராமன் கோவில் ஒருங்கிணைத்தது என்பது உண்மையானால்,

ஆதிசங்கரரால் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உருவாக்கப்பட்டு, சில நூற்றாண்டுகளாக – ஹிந்து மதம் என்ற ஆரிய ஸநாதன மதத்தின் தலைவர்களாகவும், நிர்வாக ஆளுமைகளாகவும், அம்மதத்தின் ‘தாத்பரியங்களை’ விளக்குபவர்களான – வேத விற்பன்னர்களான சங்கராச்சாரியார்களும், தெற்கே சிருங்கேரி, வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரக பீடம் ஆகிய நான்கு மட சங்கராச்சாரியார்களும் ஏன் ராமன் கோவில் பிரதிஷ்டையை, பிரதமர் மோடி நடத்தியபோது, ‘‘அது அரைகுறையாக கட்டி முடிக்கப்படாத கோவில், ‘தலையே இல்லாத வெறும் உடல்’ மட்டும் இருப்பதை, திறப்பதைக் கண்டு நாங்கள் கைதட்டவேண்டுமா?” என்று மோடி மற்றும் நிகழ்ச்சிகள்மீது பாணம் தொடுத்தனர்!
இது வடக்கே – தெற்கே தமிழ்நாட்டு ஸ்ரீரங்கத்து ரமேஷ்கள் ஏன் எதிர்க்கேள்வி கேட்டனர்?

மயிலாப்பூர் பிராமண சங்கத்தவர் ஏன் கேள்வி கேட்டு, போஸ்டர் அடித்து ஒட்டினர்?
இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா? ராமன் எதிர்ப்பாளர்களா? ஹிந்துக்கள் அல்லவா? மக்கள் ஒருங்கிணைப்புக்கு இது சாட்சியா?
கடவுளைக் காண ‘‘தவம் செய்த” மாபெரும் ‘குற்றத்திற்காக’ ராமனால் விசாரணையின்றி தலை வெட்டப்பட்டு (மனு)தர்மத்தைக் காப்பாற்றிட – அநியாயமாக கொல்லப்பட்ட அந்த சூத்திர சம்புகனின் சீடர்களா நாட்டை ஒருங்கிணைக்கப் போகிறார்கள்?

ஸ்ரீ ராம பிரான் இவர்கள் மனதில் – ஏன் குரலாக ஒலித்து, ராமன் கோவில் ‘‘பிராண பிரதிஷ்டைக்கு”ச் சென்று, சாங்கோ பாங்கமாக, சாட்சாத் பால ராமன் முன்னிலையில், அதற்கு முன்னால் வரிசையாக, பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தாரே, அதுபோல் செய்ய – ராமன் ஓர் ஒற்றுமையை தேசியத்தின் சின்னமாய் செய்யவில்லையே, ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவில்லையே!

அதே காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் ராமன் கடவுள் சிலையைத் தூக்கிச் சென்ற காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உற்சவ ஊர்கோலத்தில் வடகலை – தென்கலை (சீ மார்க்கும் ஹி மார்க்கும்) நாமதாரிகளுக்குள் வாய்ச்சண்டை முற்றி, ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தாக்கியும் கொண்ட காட்சிப் பதிவு வைரலாகப் பரவியதை ஸ்ரீராமனும், அவருக்கான ‘பிரான் பிரதிஷ்டை’ புகழ் பிரதமர் மோடியும் பார்க்காமலா இருந்திருப்பார்கள்?
ஏனோ மனதில் அவர்கள் சண்டையிட்ட – நான்கு சங்கராச்சாரிகளான பிராமணோத்தமர்கள் தெரிவித்த கண்டனத்தின் ஒலி கேட்கவில்லையா?
நமது பிரதமரின் மனமும் ஏனோ இதனை தினமும் கேட்காமலே இப்படி ஒரு ‘24 காரட் உண்மையை’ – ராமன் இந்தியாவை ஒன்றுபடுத்திய லட்சணமா இது?
கேட்கிறார்கள் சில நியாயவான்கள்!

இது இந்தியா ‘விஸ்வ குரு’ ஆனதைப் போலத்தானா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *