சென்னை, அக்.15- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று மாலை மகளிர் உரிமை மாநாடு கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருமதி. சோனியாந்தி அவர்கள் சிறப்புரை யாற்றுகையில் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே வழி காட்டியாக தமிழ்நாடு உள்ளது என்று பெருமிதத்து டன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி ஆற்றிய உரை வருமாறு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, அன்பிற்குரிய கனிமொழி அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய தி.மு.க. மகளிர் தலைவர்களே,
இந்த அருமையான நாளில் ஒரு மாபெரும் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்ற, இந்த மகளிர் உரிமை மாநாட்டிற்கு என்னை அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன்னுடைய வாழ்க்கை முழுமையும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவரும், இந்தியத் தாயினுடைய தவப்புதல்வர்களில் ஒருவரும், நம்மால் அன்போடு கலைஞர் என்று அழைக்கப்படக்கூடியவருமான அருமைக்குரியத் தலைவர் கலைஞர் அவர்கள், ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஒரு மாபெரும் தலைவர். ஒரு எழுத்தாளராக, ஒரு பத்திரிகையாளராக, ஒரு முதலமைச்சராக, ஒரு நிர்வாகியாக அவர் ஆற்றியப்பணிகள் மகத்தானப் பணிகள்.
மாநிலம், மொழி, ஜாதி, மத நம்பிக்கை இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லோரையும் சமத்துவமாக பார்க்கக்கூடிய ஒரு அருமையான தத்துவத்திலே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
தன்னுடைய வாழ்நாளின்போது அதிகமாக பேசப்படாத பாலின சமத்துவத்தை அவர் சிந்தித்து அதற்காக போராடுகின்ற ஒரு போராளியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இன்று அது ஒரு தேசிய இயக்கமாக கொண்டாடப்படுகின்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
நம்முடைய பெண்கள் இந்தியாவிலேயே மகத்தான சாதனை செய்திருக்கிறார்கள். மரபுவழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாச்சாரம் என்கின்ற தடைகளையெல்லாம் மீறி அவர்கள் மிக அருமையான சாதனைகளை செய்து முடித்து இருக்கிறார்கள்.
பெண்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது!
இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் ஏற்றங்களும் இருந்திருக்கின்றன. இறக்கங்களும் இருந்திருக்கின்றன.
ஆனால் இன்று இந்தியப் பெண்கள் பல்வேறு துறைகளிலே மிளிர்கிறார்கள். சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், விஞ்ஞானத்திலே, அறிவிலே, ஆற்றலிலே, கலாச்சாரத்திலே, விளையாட்டிலே. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய குடும்பத்தினுடைய மய்யப் பொருளாக, மக்களுடைய தலைவர்களாக; அவர்கள் ஆற்றுகின்ற பணி மகத்தானது. இருந்தாலும் கூட, இந்தப் போராட்டம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும். இருந்தாலும், நம்முடைய ஏழை எளிய சகோதரிகள் இன்னும் ஏராளமான தடைகளைத் தாண்டித்தான், இந்த சமத்துவத்தை பெறுவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.
காந்தியாரின் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாத்வீகமான வன்முறையற்ற சுதந்திரப் போராட்டம் மகளிர் சமத்துவத்தை முன்னிலைப்படுத்தியது. 1928இல் அரசியல் சாசன சட்ட வரைவு மோதிலால் நேரு அவர்கள் தலைமையிலான குழு தயார் செய்து, அந்த அறிக்கையை சமர்ப்பித்தது.
அதற்குப் பிறகு கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்த தேசத்தின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள், கராச்சி தீர்மானம் என்கின்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட தீர்மானங்கள், இந்த இரண்டு ஆவணங்களும் பெண்களுடைய உரிமைகளை கொண்டாடுவதிலும், அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதிலே சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும், செயல்பாடுகளிலே அவர்களுக்கு சரியான பங்கு தரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.
இந்த இரண்டு ஆவணங்களும் தந்த அடிப்படையில் தான் நம்முடைய பெண்கள், ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான முன்னெடுப்பை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்கள்.
இதைத்தான் எல்லோருக்குமான வாக்குரிமை, பாலின சமத்துவம், சோசலிச அறம் சார்ந்த சமூகம் இவைகளையெல்லாம், அந்த இரண்டு ஆவணங்களில் சொல்லப்பட்ட அந்த விடயங்களில் தான், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசியல் சாசன சட்டத்தினை வரையறுக்கின்றபோது இந்த தத்துவங்களை உள்வாங்கி அதனை மேலிடத்துக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஒரு ஆண்மகனை நீ படிக்க வைத்தால் ஒரு தனி நபரை மட்டும் படிக்க வைக்கிறாய். ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்றுத் தரப்படுகிறது. மகளிரை அதிகாரப்படுத்தினால் இந்தியாவை அதிகாரப்படுத்துகிறோம் என்கின்ற ஜவஹர்லால் நேரு அவர்களுடைய வார்த்தைகளை யார் மறக்க முடியும்?
மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம், அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசால், 2010 மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்க முடியாத காரணத்தினால் அந்தச் சட்டத்தினை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
இப்போது இந்தச் சட்டம் நிறைவேறி இருக்கிறது என்று சொன்னால் கூட, இந்தச் சட்டத்திற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், நாம் கொடுத்த அழுத்தங்களும் மிக அதிகம்.
இங்கே பல்வேறு உறுப்பினர்கள் பேசியதுபோல இந்தச் சட்டம் என்றைக்கு நடைமுறைக்கு வரும்; என்று அமல்படுத்தப்படும்; என்று ஒரு தெளிவே இல்லாத ஒரு சூழ்நிலையிலே இந்த ஆண்டா, அடுத்த ஆண்டா, இன்னும் சில ஆண்டுகள் கழித்தா? என்கின்ற ஒரு நிரந்தரமற்ற தன்மையிலே இந்தச் சட்டத்தை உருவாக்கி இருப்பது, நாளை வருகின்ற இந்தியா கூட்டணி வந்துதான் இந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்ற எண்ணத்தை நமக்குத் தருகின்றது.
அண்ணா-கலைஞர் முன்னெடுப்புகள்!
அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே அமைந்த அரசும், அதனைத் தொடர்ந்து கலைஞர் தலைமையிலே தொடர்ந்த அரசும் எடுத்துக் கொடுத்த முன்னெடுப்பு களும், செயல்படுத்திய திட்டங்களும், பெண்களுடைய வாழ்க்கையில் பல புரட்சிகளையும், பல முன்னேற்றங்க ளையும் தந்திருக்கன்றது.
அதன் அடிப்படையில் தான் இன்று தமிழ்நாட்டை இந்தியாவே புகழ்ந்து கொண்டிருக்கின்ற மகளிர் உரிமைகளையும், மகளிருடைய சமத்துவத்தையும் கொண்டாடக்கூடிய ஒரு ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்று சொன்னால், அது மிகையாகாது.
வரலாற்று புகழ்மிக்க அய்ந்துமுறை முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான், 1973ஆம் ஆண்டில் காவல்துறையில் பெண்களுடைய பங்கை அவர்கள் உறுதி செய்தார். இன்று தமிழ்நாட்டில் இருக்கின்ற காவல்துறையிலே நான்கில் ஒரு பங்கு பெண்களாக இருப்பது எவ்வளவு பெருமைப்படக்கூடிய ஒரு செயல்.
இன்று இருக்கின்ற காவல்துறையினரில் நான்கில் ஒரு பங்கைக் சார்ந்தவர்கள் பெண்கள் என்கிற சூழ்நிலை இருக்கின்றது.
கலைஞர் அவர்கள் செய்த முக்கியமான மற்றொரு சீர்த்திருத்தம் என்னவென்று சொன்னால், அரசு பணிகளிலே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செய்தது. அதன் விளைவாக அரசுப் பணிகளிலே 30 விழுக்காட்டைச் சார்ந்தவர்கள் பெண்களாக இருந்தார்கள்.
40 சதவிகிதமாக உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயல்படுகின்ற இந்த அரசு அந்த 30 விழுக்காட்டை 40 விழுக்காடாக உயர்த்தி பெண்களைப் பெருமைப்படுத்தி இருக்கின்றது.
பெண்களுடைய நல்வாழ்வுக்காக தமிழ்நாடு அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், சத்துணவுத் திட்டங்கள், பெண்க ளுடைய நல்வாழ்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்ற மருத்துவத் துறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், தாய்மார்களுக்காகவும், பால் குடிக்கும் சேய்களுக்காகவும் அரசாங்கம் நிறைவேற்றப்படுகின்ற பல்வேறு திட்டங்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால் தான் இன்று தமிழ்நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நிலையிலே இருப்பதற்கு காரணமாக அதுதான் அமைந்துள்ளது.
கடந்த 9 ஆண்டு காலங்களாக மோடி அரசினுடைய நடவடிக்கைகள் – நாம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற திட்டங்கள், நாம் பெற்றுத்தந்த உரிமைகள், கடந்த 70 ஆண்டுகளிலே நாம் செய்த நல்ல முயற்சிகளை யெல்லாம், சீரழிக்கின்ற வகையில் செயல்படுவது நமக்கு ஏற்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய கெட்டவாய்ப்பு.
பெண்களை ஒரு அடையாளச் சின்னமாக மாற்றி, பழைமையிலும், மரபிலும் ஏற்கனவே பின்பற்றி வருகின்ற பாரம்பரிய சூழ்நிலைகளில் மட்டும் தான் பெண்கள் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது இந்த அரசு. அவர்களுக்காக ஒரு புதிய சுதந்தி ரத்தையும், உரிமைகளையும் அளிக்க அவர்கள் தயாராக இல்லை.
இதைப்போலத்தான் எல்லாத்துறைகளிலும் எல்லா சுதந்திரத்திற்கும், சமத்துவத்திற்கும் அறம் சார்ந்த சமுதாயத்திற்குமாக நாம் பெற்ற அனைத்து உரிமைகளையும் கடந்த 9 ஆண்டு காலமாக சீரழிக்கப்பட்டு வருவதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
‘இந்தியா’ கூட்டணி பெண்களை
மேம்படுத்தும்!
நான் உறுதியாக நம்புகிறேன். நாம் ஏற்பாடு செய்து இருக்கின்ற “இந்தியா” கூட்டணி என்கின்ற இந்த அற்புதமான ஏற்பாடு – இதைப்போன்ற சமச்சீரற்ற தன்மைகளை எல்லாம் விலக்கி, பெண்களுக்கு உண்மையாகவே அவர்களுக்கு ஒரு சமத்துவ உலகை உருவாக்கிக்கொடுப்பதற்கான மிக அவசரமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் உறுதியாகச் சொல்லுகிறேன். இந்தியா கூட்டணி என்பது நிச்சயமாக இந்த மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றி ஒரு நல்ல சூழ்நிலையை நாம் ஏற்படுத்தியே தீருவோம்.
இங்கே குழுமியிருக்கின்ற நாம் அதற்கான உறுதியை எடுத்து அதனை நோக்கி செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் நிச்சயமாக செய்யும். நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம். நாம் அனைவரும் சேர்ந்து நிச்சயமாக இதனைச் சாதிப்போம்!
நன்றியோடு உழைப்போம்! வெற்றி நமதே!
இவ்வாறு சோனியா காந்தி அவர்கள் உரையாற்றினார்.