சூத்திரன் என்பவன் பார்ப்பனருக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் சேவகம் செய்யப் பிறந்தவன் என்ற ஸ்லோகத்தை பதிவிட்ட அசாம் முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வாஸ் எதிர்ப்பு கிளம்பியதும் எந்த ஒரு விளக்கமும் தராமல் அழித்துவிட்டார்.
அசாம் முதலமைச்சர் நாள்தோறும் பகவத் கீதை உள்ளிட்ட பல ஹிந்துமத புராணப்பதிவுகளை ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் ஸ்லோகங்களாக வெளியிட்டு வருகிறார்.
இதில் பகவத் கீதாசாரம் அத்யாயம் 18-இல் 41 ஆம் ஸ்லோகத்தில் மனிதர்களின் வேலைகள் குறித்து ஸ்லோகம் உள்ளது.
மனிதர்கள் அவரவர் கர்மங்களைச் செய்ய படைக்கப்பட்டுள்ளனர்.
சூத்திரனுக்கான கடமை என்பது பிராமணர் களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் சேவை செய்வது மட்டுமே ஆகும் என்று உள்ளது.
இந்த ஸ்லோகத்தை அசாமி மொழியிலும் சமஸ் கிருதத்திலும் நேற்று (27.12.2023) காலை வெளியிட்டிருந்தார்; பொதுவாக இந்த ஸ்லோகத்தை ஹிந்துத்துவ நாளிதழ்கள் கூட ஏதேதோ விளக்கங்கள் சொல்லி சாக்குப் போக்கு கூறி எழுதுவார்கள்.
ஆனால் அசாம் முதலமைச்சர் அப்படியே வெளியிட்டு கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு பாடம் சொல்வது போன்ற படத்தையும் வெளியிட்டார்.
இது வெளியிடப்பட்ட உடனேயே கண்டனங்கள் வெடித்தன. நாட்டில் பெரும்பாலான மக்கள் தொகை அவர்கள் கூறும் சூத்திரப் பிரிவில் வருகின்றனர். அப்படி என்றால் நாங்கள் என்ன உங்களுக்கு அடிமைத்தொழில் புரியவே வந்துள்ளோமா என்று எதிர் கேள்விகள் வெடித்தன.
இந்த நிலையில் அவர் அந்தப்பதிவை நீக்கி விட்டார். ஆனாலும் தான் வெளியிட்ட பதிவிற்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை.
ஒரே மதம், ஒரே கலாச்சாரம் அதுதான் எங்கள் கொள்கை என்று சங்பரிவார்களும் அவற்றின் அரசியல் வடிவமான – ஆட்சி அதிகாரப் பீடத்திலிருக்கும் பிஜேபியும் சொல்லி வருகின்றன.
அதனுடைய எதிரொலி தான் அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வாஸரின் (பிஜேபி) டுவிட்டர் பதிவாகும்.
எவ்வளவு ஆணவமும் அதிகாரத் திமிரும் இருந்தால் பிராமணர், சூத்திரன் என்ற பதங்களை எழுதக் கூடிய திமிர் திமிறிக்கொண்டு செங்குத்தாக எழுந்து நிற்கும்?
சூத்திரர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தாரும் பிராமணர்களுக்குச் சேவை செய்வது அவர்களின் கடமையாகும் என்கிறார்.
அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் யாருக்குச் சேவை செய்துகொண்டு இருக் கிறார்கள்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்குச் சேவை செய்துகொண்டு இருப்பதைத்தான் மறைமுகமாக இப்படிக் குத்திக் காட்டுகிறாரா அசாம் பி.ஜே.பி. முதல் அமைச்சர்? சூத்திரன் என்றால் வேசி மகன் என்று மனு தர்மம் (அத்தியாயம் 8 – சுலோகம் – 415) கூறுகிறதே பெண் களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கிறதே பகவத் கீதை (அத்தியாயம் 7 – சுலோகம் – 32) பி.ஜே.பி., மற்றும் சங்பரிவார்களில் இருக்கக்கூடிய பார்ப்பனர் அல்லாதார் சிந்திப்பார்களா?
பிரதமரை சூத்திரர் என்று எள்ளி நகையாடுகிறாரா அசாம் முதலமைச்சர்?

Leave a Comment