சென்னை,டிச.18- மிக்ஜம் புயல், கடும் மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கும் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.12.2023) தொடங்கி வைத்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,
மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்…!
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
ஆயிரத்தைத் தாண்டியது
திருவனந்தபுரம், டிச.18 நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. கரோனா பரிசோதனை மாநிலத்தில் அதிக அளவில் செய்யப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப் படுகிறது. மேலும் மக்களும் காய்ச்சலுக்காக தங்களை தாங்களே சுயமாக பரிசோதனை செய்வதால் கரோனா பாதித்தவர்கள் பற்றிய விவரம் தெரியவருகிறது. மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் கரோனாவிற்கு கோழிக் கோட்டை சேர்ந்த குமரன் (வயது 77) மற்றும் கண்ணூர் பானூரை சேர்ந்த அப்துல்லா (82) ஆகியோர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ மனைக்கு சென்று அனைவரும் பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.