வேத உபந்நியாசகரா ஆர்.என். ரவி?

viduthalai
3 Min Read

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் என்ற போர்வையில் பச்சையான ஆர்.எஸ்.எஸ். காரராக – பிர்மாவின் முகத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்வதற்கும், ஹிந்துத்துவாவைப் பரப்புரை செய்வதற்காகவுமே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவராகவே செயல்பட்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்கு உரியவராகத் தம்மைக் காட்டிக் கொள்வதன் மூலம் விளம்பரத்தைத் தேடும் யுக்தி அவரிடம் இருப்பது வெளிப்படை!
ஸநாதனத்தைப் பற்றிப் பேசி தமிழ்நாட்டு மக்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இப்பொழுது “வேதங்களின் தயாரிப்புதான் நம் பாரதம் என்றும், உலகம் முழுவதும் வேதங்களைப் பரப்ப வேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.
மகரிஷி சாந்திபினி ராஷ்ட்ரிய வேதவித்யா பிரிஷ்தான் மற்றும் யோக க்ஷேமா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற வேத சம்மேளனம் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி (12.12.2023) என்ன பேசியுள்ளார்?
“கடவுள் பிறப்புகளை உருவாக்கினார். அந்தப் படைப்புகளில் ஒவ்வொரு அங்கத்திலும் வேதங்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான வேதங்கள் மூலம் நித்திய அறிவைக் கொண்டு ரிஷிகள் நாட்டை வழி நடத்திச் சென்றிருக்கின்றனர். நமது பாரதம் வேதங்களின் தயாரிப்பாகும். வேதங்கள்தான் நம் நாட்டின் தாய்.
நம் நாட்டில் வந்த சம்பிரதாயத்தைப் பின் தொடர்ந்தாலும் சரி, எந்த சம்பிரதாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தாலும் சரி, அனைத்துக்கும் ஆதாரம் வேதங்களாகத்தான் இருக்கும். அதிலிருந்து தான் நம் நாட்டின் பரிமாண வளர்ச்சி தொடங்கியது. பாரதம் மட்டுமின்றி உலகின் அனைத்து மக்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வேதங்கள் சொல்லுகின்றன… நாம் வேதங்களி லிருந்து பிரித்து விட்டோம். இன்று பாரதம் மீண்டும் எழுந்து கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது” என்று உளறிக் கொட்டியுள்ளார் ஆர்.என். ரவி.
வேதங்கள் எப்பொழுது தோன்றின? அவற்றை எழுதியவர்கள் யார்? அவற்றிற்கு எழுந்து வடிவம் உண்டா? வாய் வழியாக வந்தது என்றால், அது உருப்படியாக எவ்வித சேதாரமுமின்றி வந்திருக்குமா? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாரா ஆர்.என். ரவி.
கடவுள் படைப்புகளை உருவாக்கினார் என்பதும் அந்தப் படைப்புகள் ஒவ்வொரு அங்கத்திலும் வேதங்கள் இருக்கின்றன என்றும் சூட்சமமாகப் பேசியுள்ளாரே! பிர்மா என்ற படைத்தல் கடவுளின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் பிறந்தான் என்பதைச் சுற்றி வளைத்துக் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
இதன் பொருள் என்ன? பச்சையான பார்ப்பன வருணதர்மப் பிரச்சாரம்தானே!
ரிஷிகள் வழி நடத்தினார்களாம்! யார் அந்த ரிஷிகள்? அவர்களின் பிறப்புகள் எத்தகையவை?
மானுக்குப் பிறந்தவன் கலைக்கோட்டு ரிஷியாம், நரிக்குப் பிறந்தவன் ஜம்புகர், குடத்திற்குப் பிறந்தவன் அகத்தியன், தவளைக்குப் பிறந்தவன் மாண்டவ்யர் என்றும், கழுதைக்குப் பிறந்தவன் காங்கேயன் என்றும், நாய்க்குப் பிறந்தவன் சவுனகர் என்றும், கோட்டானுக்குப் பிறந்தவன் கணாதர் என்றும், கரடிக்குப் பிறந்தவன் ஜம்புவந்தர் என்றும், குதிரைக்குப் பிறந்தவன் அஸ்வத்தாமன் என்றும், கிறுக்கி வைத்துள்ளனரே, இந்த ரிஷிகள் தான் மக்களை வழி நடத்தியவர்களா?
ஒரு அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்து ஆளுநராக வந்துள்ள ஒருவர் இவற்றை நம்புகிறார் – பேசுகிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு என்ன இருக்கிறது?
வேதங்கள்பற்றி வரலாற்று அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள்?
“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் (சூத்திரர்) என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களிலும் காணலாம். இருவகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணம்” என்று எழுதி இருப்பவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள் அல்ல டாக்டர் ராதா குமுத முகர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., (இந்து நாகரிகம் பக்கம் 69) என்ற பார்ப்பனர்தானே! அவரைவிட வரலாற்றுக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவரா ஆர்.என். ரவி?
அதே ரிக் வேதம் இன்னொன்றையும் சொல்லுவதை திருவாளர் ரவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
“தெய்வாதீனம்ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தனமந்தரம் பிரம்மணா தீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்”
(ரிக்வேதம் 62வது பிரிவு 10ஆவது சுலோகம்)
இதன் பொருள் என்ன?
“உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரங்கள் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டன. பிராமணர்களே நமது கடவுள்” – இதுதான் ரிக்வேதம் –
இதுதான் உலகம் முழுவதும் பரவ வேண்டுமாம் கூறுகிறார் ஓர் ஆளுநர்.
நாம் வேதங்களிலிருந்து பிரிந்து விட்டோமாம். இப் பொழுது பாரதம் மீண்டும் எழுந்து கொண்டு இருக்கிறதாம்; விழித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ரவி.
பிஜேபியும், சங்பரிவாரும் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவதை – ஆளுநர் உரையோடு இணைத்துப் பார்த்தால் பார்ப்பனியத்தின் பம்மாத்துப் பட்டவர்த்தனமாக விளங்கி விடுமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *