பெங்களூரு,டிச.11- பாஜக கூட்டணியில் இணைய எதிர்ப்பு தெரிவித்ததால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கருநாடக தலைவர் இப்ராஹிம் மற்றும் தேசிய துணைத் தலைவர் நானு ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட் டுள்ளனர்.
மேனாள் பிரதமர் தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளது. ஆனால் கட்சியின் மாநில தலைவர் சி.எம். இப்ராஹிம் மற்றும் தேசிய துணைத் தலைவர் சி.கே.நானு ஆகிய இருவரும் கட்சித் தலைமையை வெளிப்படையாக விமர்சித்தனர். இதையடுத்து, இருவரும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மஜத தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் (19.12.2023) நடைபெற்றது. பின்னர் தேவ கவுடா கூறியதாவது: கட்சியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு குறித்து இப்ராஹிம் மற்றும் நானு ஆகிய இருவரும் பொதுவெளியில் விமர்சித்தனர். இதனால் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சி விரோதசெயலில் ஈடுபட்ட இருவரையும் நீக்க செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இப்ராஹிம், அய்க்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த உடனே அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இப்ராஹிம் இடைநீக்கம் செய்யப்பட்டதை யடுத்து, தேவகவுடா மகனும் மேனாள் முதலமைச்சருமான குமாரசாமி இடைக்கால மாநில தலை வராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.