நான் விரும்பும் தன்மை – தந்தை பெரியார்

Viduthalai
8 Min Read
கட்டுரை, திராவிடர் கழகம்

நம் கழகமும் நமது முயற்சியும் பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி இருக்கிறது? மிகமிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா?

நாமும், நம் நாடும் உலகில் மிகவும் பழைமை யானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிகமிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது, நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும் படி செய்யப்பட்டு விட்டோம்.

இன்றைய உலகம் மிகவும் முற்போக் கடைந் திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கிறது. ஆனால், நாம் மாத்திரம் காட்டு மிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம், வழக்கம் முதலிய காரியங்களும், அதற்கேற்ற வண்ணம் உலகோர் பழிக்கும்படி இருக்கிறது.

நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணர வேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-க்கு 10-பேருக்குக்கூடக் கல்வி இல்லை. நாம் 100-க்கு 

90-பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ் வாழ்வு வாழுகிறோம். காரணம் என்ன? 

இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும், கஷ்டத்தையும் பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்படவேண்டும்? அதுவும் இந்த விஞ்ஞான காலத்தில்? என்று உங்களை, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

நம்மிடத்தில் எந்த விதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித் தனியாக, தத்தம் நலம் பேணி வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, இன்று நமக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. 

நம்வாழ்வுக்கு, நமக்கு, பொருத்தமில்லாதவைகளை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக் கொண்டு அவைகளுக்கு அடிமையாகி வாழ்வதுதான் நம்மை தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டது. நமக்கு நல்வழிகாட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடான வையாக இருந்து வருவதை நாம் உணரவில்லை.

நம் மதம், நம்மை என்றைக்குமே முன்னேற்றாத தாக இருந்து வருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடைஜாதியாக இருக்கிறோம். நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவைகளாக, நம்மைச் சுரண்டுபவைகளாக, நம்மை மடையர்களாக ஆகும் படியாக ஆக்கிவருகிறது. நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன. ஆகையால் நாம் இத்துறைகளில் எல்லாம் பெருத்த மாறுதல்களை அடையவேண்டும். 

கடவுள் தன்மையிலுள்ள கேடு

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்னவென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்காக வீடு வாசல், (கோவில்) பெண்டுபிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல் நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேற்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள்  நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக்கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் – கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றத் தனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத் துக்கள்? அவைகளுக்கு எவ்வளவு பூசை, உற்சவ போகபோக்கியங்கள்? இவைகள் யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால் அவைகள் மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும் நட்டமும் அடைகின்றவர்கள் யார்? நீங்கள் உண்மையாய்க் கருதிப்பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக் காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவைகளுக்கு இன்று இருந்து வரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டி ருக்குமா? நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈனஜாதி, இழி ஜாதி, நாலாம் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடைஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளைக் கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன். இதைச் சிந்தித் தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாமும், நம் கடவுள், மதம் முதலியனவும் 

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப் பட்டதற்குக் காரணம் இந்தக்கடவுள்கள்தான் என் பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆன தற்குக் காரணம் இந்த கடவுள்களுக்குக் கட்டடம், சொத்து, போகபோக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா? இல்லையா? அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்துமதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானை, பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா? இல்லையா?

அதுபோலவேதான், நம் தர்மங்கள் என்று சொல் லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா? ஆகவே, நமது இழிவுக்கும், ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவைகள் அல்லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது மேன்மைக்கு, நல் வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத் தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாக வேண்டும். 

நமக்கு வேண்டிய கடவுளும், மதமும்

நமது கடவுள்கள் காட்டுமிராண்டி காலத்தில் கற்பிக்கப்பட்டவைகள், அல்லது கண்டு பிடிக்கப் பட்டவைகள், அல்லது நமக்குத் தெரியவந்தவைகள். நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்ட தாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவைகளாகும்.

இன்று காலம் மாறிவிட்டது, இயற்கைகூட மாறி விட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறி விட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆசாபாசம், ஆற்றல் மாறிவிட்டது. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20ஆம் நூற்றாண்டுக்கு 4000, 5000ஆம் ஆண்டு களுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே, இன்றைக்கு ஏற்றபடியாக இவைகள் மாற்றப்பட்டாக வேண்டும்.

இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க் கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட  அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத் தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? 

நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித் தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது – குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின் மீது கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், இன்று அப்படிப்பட்ட காலத்தில் அப் படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக் கப்பட்டவைகளாகும், காட்டிக் கொடுக்கப் பட்டவைகளாகும்.

இந்த மதத்தை – கடவுள் தன்மைகளை ஏற்படுத் தின – உண்டாக்கிய – காட்டின பெரியோர்கள் தெய் வப்பிறவிகள் – தெய்வீகத் தன்மை உடையவர்கள் என்கிறதான அந்த மகான்களே இன்று இருப்பார் களேயானால், உடனே மாற்றிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள். அல்லது வெளியில் வரவெட்கப் படுவார்கள். 

இவை சரிதானா? 

உதாரணமாக, இவைகளை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு, ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள், மாடு, பருந்து முதலிய வாகனங்கள். பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள். மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள்.

இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள். முதல் ஜாதி பார்ப்பன ஜாதி; இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பை சுரண் டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம். மற்றவர்கள் எல்லாம் இவர் களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும் வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும். 

இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் நீதி – ஒழுக்கம், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருமாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டையடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால் அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிறது மனுநீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் விதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அக்காலத்திய கடவுள் மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

காலம் கருதிக் காரியம் கொள்ளுமின்! 

பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு, எலெக்ட்ரிக் விளக்குப் போட்டுக் கொள்ளவில்லையா? கட்டை வண்டிப் பிரயாணத்தை நீங்கள் தள்ளிவிட்டு ஏரோப்ளேன் – ஆகாயக்கப்பல் பிரயாணத்தை நீங்கள் விரும்பவில்லையா? ஆகையால் ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றது போல் நடந்து கொள்ளுங்கள். காலத்தோடு கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்.

குடிஅரசு – கட்டுரை – 15.01.1949 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *