பெரியார் என்ற பெயரைக் கேட்டால் பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரை எரியும். அதற்காவது காரணம் இருக்கிறது. தங்களின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தங்களது ஆதிக்கக் கோட்டையை உடைத்துச் சல்லிசல்லியாக்கியவர் என்ற ஆறாத கோபம் அவர்களுக்கு உண்டு. எப்போது எங்கு வன்மத்தைக் கக்கலாம் என்று வாயிலேயே விஷத்தை வைத்துக் கொண்டு காத்திருப்பர். பார்ப்பன ஏடுகள் ‘பேனா மை’க்குப் பதில் விஷத்தை நிரப்பி எழுதுகின்றன.
பெரியாரைக் குறித்து எழுதும் போது, ‘ஈ.வெ.ரா.’ என்று எழுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன இனமலரும், துக்ளக்கும்!
பெயரைக் குறிப்பிட்டு எழுதும்போதுதான் அப்படி என்றால், “பெரியார் அறிவுலகம்” என்று அரசால் பெயரிடப்பட்டுள்ள கோவை நூலகத்தைக் குறிப்பிடும்போதும், பூணூல் வெறி பிடித்து “ஈவெரா அறிவுலகம்” என்று எழுதுகிறது இனமலர்.
ஆனால், சூத்திரப் பத்திரிகையான ‘மாலை முரசு’க்கு என்ன வந்தது?
போலிப் புத்தகங்கள் முறைகேடு காரணமாக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக நேற்று வெளிவந்த செய்தி ஒன்றில், ’கோவை ஈ.வெ.ரா. நூலகப் பொறுப்பாளர்’ என்று எழுதுகிறது மாலை முரசு.
தந்தை பெரியாரைப் போற்றியவரும், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த பத்திரிகை உலகில் அந்த ஆதிக்கத்தைத் தகர்த்தவருமான சி.பா.ஆதித்தனார் குடும்பத்தில் இருந்து வரும் ‘மாலை முரசு’க்கு ஏன் இந்தக் கீழிறக்கம்? யாரின் முரசாக அது ஒலிக்கிறது? ‘பார்ப்பனக் கைவரிசை’ அங்கேயும் நுழைந்திருக்கிறதா? அரசு சூட்டிய பெயரை மாற்றுவதற்கு மாலைமுரசுக்கு என்ன அவசியம். அதே செய்தியில் பிற நூலகங்களை ஒழுங்காக அதே பெயரில் குறிப்பிட்டிருக்கும் போது, பெரியார் அறிவுலகத்தின் மீது மட்டும் காழ்ப்புணர்வுடன் ‘மாலை முரசு’ எழுதுவதேன்?
இனியும் இதைத் தொடர்வார்கள் என்றால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
