சென்னை, நவ.14- சைக்கிள் கொள்முதல் விலை குறைப்புக்குப் பின்னணியில் ஊழல் தானே? என முன்னாள் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நேரு பிறந்த நவம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசால் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்கில் நேருவின் படம் இல்லாமல் விளம்பரத்திற்கு உங்கள் படம் போட்டு கொடுத்திருக்கிறீர்களே! நினைவிருக்கிறதா!
ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸ்டிக்கர் ஓட்டலாமா சி.எம். சார்?
தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட கேக் முக்கியமல்ல. உங்கள் கட்சிக்காரார்கள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விஜய் படமில்லாமல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா சி.எம். சார்?
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு ரூ7,235, மாணவி சைக்கிள் ஒன்றிற்கு ரூ 7,476 என்றும் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு “நள்ளிரவு” கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது நினைவிருக்கிறதா சி.எம். சார்?
தற்போது கோட்டையில் அதிகாரிகளோடு அமர்ந்து அதே சைக்கிள் கொள்முதல் செய்ய ரூ5,130, ரூ5,260 என விலை குறைய காரணம் என்ன ? அன்று 115 கோடி ரூபாய் அதிக விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது #ஊழல் தானே ? ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூய ஆட்சி முன் வருமா சி.எம். சார்? எனத் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்!
த.வெ.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
– நடைபாதைக் கோயில்களும் அடங்குமா?

சென்னை, நவ. 14- சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனனும், அரசு தரப்பில் வழக்குரைஞர்கள் ஆர்.வி.காயத்ரி, சி.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நடைபாதைகள், சாலைகளை ஆக்கிரமிப்பது சட்ட விதிமீறல். ஆக்கிரமிப்புகள் இல்லாத முறையான நடைபாதை மற்றும் சாலை வசதிகள் குடிமக்களுக்கான அடிப்படை உரிமை. அந்த உரிமையை செய்து கொடுக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.
எனவே, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை முதன்மை செயலர் உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள், சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பாதசாரிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முறையான வழித்தடத்தை உருவாக்கி கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக ஒருங்கிணைந்து எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 10.12.2026-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பதிவுத்துறையை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு!
பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, நவ. 14- பதிவுத்துறையை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பதிவு மாவட்ட பத்திரம் எழுதுவோர் சங்கத்தலைவர் ராஜமாணிக்கம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு பதிவுத்துறை மாதிரிப் பதிவு மய்யங்கள் (எம்ஆர்எச்) அமைக்க இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 பத்திரப்பதிவு அலுவலங்களிலும், அடுத்தக்கட்டத்தில் 20 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இந்த மய்யங்கள் அமைக்கப்பட உள்ளன. டெண்டர் விண்ணப்பிக்க 16.11.2026 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் டெண்டர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஆர்எச் முறையில் மக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்லாமலே பத்திர பதிவு செய்ய முடியும். இதனால் பொதுமக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படாது. ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5,500 பத்திர எழுத்தர்கள் உள்ளனர். எம்ஆர்எச் மய்யங்களால் இவர்களும், சார்ந்துள்ள 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பத்திரப்பதிவை தனியாருக்கு வழங்கும் வகையில் மய்யங்கள் அமைப்பதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை.
அரசுக்கு பெருமளவு வருவாயை தரும் இந்த துறையை பதிவுத்துறை சட்டத்திற்கு விரோதமாக தனியாருக்கு வழங்க எந்த அவசரமும், அவசியமும் இல்லை.போலி ஆவணங்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்படும். எனவே டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, மனுவிற்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.25க்கு தள்ளி வைத்தார்.
