கோவை பள்ளி மாணவர் அகிலன் வழக்கு விசாரணை: சிபிசிஅய்டி-க்கு மாற்றம்!

2 Min Read
- Advertisement -

கோவை, அக். 27- கோவையில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஅய்டி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு துரைசாமி லே-அவுட் 5ஆம் வீதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் – கவுசல்யா தேவி இணையர்களுக்கு 16 வயதில் அகிலன் என்ற மகன் இருந்தார். அகிலன் பீளமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மாணவர் அகிலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார், சக மாணவர்கள் இருவர் உள்ளிட்டோர் ஜாதிய கண்ணோட்டத்தில் மாணவரை அணுகியதால், மனமுடைந்த அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் பீளமேடு காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் அருண் குமார், விஜயகுமார், 2 மாணவர்கள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இரு மாணவர்களையம் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என அகிலனின் பெற்றோர், குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகிலனின் பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் உள்ளிட்டோர் தெற்கு தாலுகா அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அகிலன் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையை கோவை மாநகர் பீளமேடு காவல் துறையினரிடம் இருந்து சிபிசிஅய்டிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் குழு நிர்வாகிகளின் சார்பில், மாநகர காவல் ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதியிடம் நேற்று (அக்.26) மனு அளித்தனர்.

இந்நிலையில், அகிலன் தற்கொலை வழக்கை சிபிசிஅய்டி காவல் துறையினருக்கு மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று (அக்.26) மதியம் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ‘அகிலன் தற்கொலை தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் பதிந்த வழக்கு விசாரணை சிபிசிஅய்டி காவல் துறையினர் விசாரணைக்கு உடனடியாக மாற்றப்படுகிறது. மேற்கண்ட வழக்கு தொடர்பான அசல் கோப்புகள், விசாரணை ஆவணங்களை உடனடியாக சிபிசிஅய்டி காவல்துறை தலைமை இயக்குநர் வசம், மாநகர காவல் ஆணையர் ஒப்படைக்க வேண்டும். சிபிசிஅய்டி காவல்துறை தலைமை இயக்குநர், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு உரிய விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணையை தொடங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வழக்கு விசாரணை சிபிசிஅய்டி-க்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அகிலனின் உடலை உடற்கூராய்வு செய்ய அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.

தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதா? அல்லது தொடர்வதா என்பதை ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும் என போராட்டக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *