முச்சந்து மன்றத்து முக்கிய சவுக்கடிகள்! (2)

4 Min Read
- Advertisement -

ஆண் வாழ்வில், கூண்டுக்கிளியாகப் பெண் சிறை வைக்கப்படுவது எப்படி வேண்டுமானாலும் என்ன ரூபத்திலும் நிகழலாம். உருகி உருகிக் காதலித்தவனுக்குத் திருமணத்தின் பின் “எங்க போயிடப்போறா” என்ற அலட்சிய உணர்ச்சி மேலேறி துணையாக வந்தவளைச் சுய அழிப்புக்குள் மெல்ல மெல்லத் தள்ளும்போது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

‘மகிழ் இனி’ என்ற கதையில் இடம்பெறும் உரையாடல் இது;

“டேய் அது பாவம், அதப் போட்டு இந்தப் பாடுபடுத்துற. அதுக்குப் போய் இப்படி வெச்சு திணிச்சா, அது எப்படிடா சாப்பிடும்?”

“அதுக்குப் பிடிக்கும்னு தானம்மா சீசன் இல்லாத டைம்ல அலஞ்சு  திரிஞ்சு மாம்பழம் வாங்கிட்டு வந்தேன்?”

“நீ அலஞ்சுத் திரிஞ்சு வாங்கிட்டு வந்துட்டன்றதுக் காகவே, அது சாப்பிடணும்னு அவசியமில்லடா. அதக் கொஞ்சம் ஃப்ரீயா விடு, அதுக்குப் பசிக்கும் போது அதுவா சாப்பிடும்.”

“போம்மா. இத நான் வாங்கினேன்னு தான் பேரு. இப்பவெல்லாம் ஒரு வார்த்தகூட நான் சொல்றதக் கேக்க மாட்டேங்குது. நான் எதுவும் கொடுத்தா சாப்பிட மாட்டேங்குது, இத என்னத்துக்குத் தான் வாங்கினேன்னு கடுப்பா இருக்கு.”

“டேய், நீ அத வாங்கீட்டன்றதுக்காகவே அது உன் பேச்சக் கேட்கணும்னு இல்லடா. அதுக்காத் தோணினாத்தான் அது உன் பேச்சக் கேட்கும். சும்மா அதப் போட்டு டார்ச்சர் பண்ணாம, எங்கயோ போகணும்னு காலையிலேயே சொன்னயே, போயிக் கிளம்புப் போ…” என ரகுவை அந்தக் கிளியின் அருகிலிருந்து விரட்டினார் ரகுவின் அம்மா.

கிளியைக் காப்பாற்ற ரகுவின் அம்மா வந்தாற்போல தன்னை யாராவது வந்து மீட்கும் வரையிலும் ஒரு பெண் காத்திருப்பதால் வாழ்வு நெடுகிலும் பெயரிழந்து, அடையாளமிழந்து அர்த்தமிழந்து காணாமலாக்கப்படுவது மட்டுமே நிகழ்ந்துகொண்டிருக்கும். சில பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டு ஆண்களின் நிழலில் தொலைந்து போகிறார்கள்.

நிகழ்தகவுகள், பெரியப்பா, அந்தோணி, வான்பிறழ்வு போன்ற கதைகள் பெண்களின் அக புற உலகை பிணைக்கும் நுட்பங்களோடு அமைந்திருக்கின்றன. ஈஸ்வரியின் முழு வாழ்க்கைச் சரித்திரத்தைப் பேசும் பொடிப்பாட்டி ஜீரணமாகாத உணவு போல நெஞ்சுக்குள் நின்று எரிக்கிறது. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் மாறுவேடம் போட்டு வாழும் மனித போலித்தனங்களையும் விவரிக்கும் கச்சிதமான கதை, மக்குவின் தங்கமீன். ‘எதெல்லாம் பெண்ணுக்குச் சாத்தியமற்றது, ஆபத்தானது என்று சொல்லப்பட்டதோ அதெல்லாம் பொய்யானது, புனையப்பட்டது’ என ஒரு பெண் கற்றுணரும் சாளரம் தான் பயணம். அத்தகைய பயணம் பல்லவிக்கு வாய்க்கிறது – சாவித்திரியும் நானும் கதையில்.

சுயமரியாதை, ஓர்மைக்குணம், சமூகத்தின் மீதான தெளிவான பார்வை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு தனிமனிதருக்கும் உள்ள பொறுப்பு, சமூக உள்அடுக்குகளைப் புரிந்துகொள்வதென அசல் பெண்ணியப் பார்வையுள்ளவராகத் தெரிகிறார் சாவித்திரி. மகாபாரதத்துப் பாண்டவர்களையும் திரவுபதியையும் நினைவுபடுத்துகிறது அவளும் அவர்களும் கதை. வரலாற்றுப் படைப்புகள் பலவும் ஆண்களால், ஆண் பார்வையில் எழுதப் பட்டவையே. அதே கூறுகளுடன் சமகால இலக் கியங்கள் பலவும் ஆணதிகாரக் கண்ணோட்டத்தில் அல்லது அதற்குப் பொருந்தும்படியாகவே எழுதப்படுகின்றன. வரலாற்றை மீளுருவாக்கும் இப்புனை கதை கூர்தீட்டிய வாளின் மினுக்கத்தை இத்தொகுப்பிற்குத் தருகிறது.

அனைத்துக்கும் மேலாக கொரோனா தொற்று உலகைப் பிடித்தாட்டிக்கொண்டிருந்த காலத்தில், நான்கு பெண்கள் குழுவாக இணைந்து அகக் கொதிப்புகளிலிருந்து மனங்களை மீட்கும் ஒரு கலை முயற்சியில் இறங்கினார்கள் என்பது மிகுந்த பாராட்டுக்குரியது. ட்விட்டரில் ஸ்பேஸ் என்ற தளத்தில் தொடர்ந்து உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார்கள் மீரா, முனைவர் கோமதி, மருத்துவர் நாகஜோதி, காளி நால்வரும். ட்விட்டர் ஸ்பேஸில் இவர்களது புதிய தொடக்கமான முச்சந்துமன்றத்தில் 125 புத்தகங்களுக்கு மேல் வாசித்து விவாதித்து, இதோ கதைகளுடன் வாசகர்களிடம் வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு முயற்சி, சிறுகதைகளின் தொகுப்பு என்பதோடு மட்டுப்படுத்திப் பார்க்க முடியாதது. ஆப்பிரிக்கச் சொலவடை ஒன்றுள்ளது: ‘‘நீங்கள் ஒரு ஆணுக்கு கற்பிக்கும்போது ஒரு தனிநபருக்கு கல்வி கற்பிக்கிறீர்கள் – ஒரு பெண்ணுக்குக் கல்வி கற்பிக்கும்போது ஒரு தேசத்திற்கு கல்வி கற்பிக்கிறீர்கள்’’.  இந்த நான்கு பெண்களும் நான்கு தீக்குச்சிகள். அடக்குமுறைக்கு எதிரான நெருப்பு இவர்களின் படைப்புகளில் தழல்கிறது.

எழுத வரும் பெண்களை நோக்கிக் கற்களை வீசுவதற்கு இங்கே பலர் தயாராக இருக்கிறார்கள். பெண்களின் கதைகள் வெறும் கூச்சலும் அவலமும் என்று ஒதுக்குவதற்கெனவே வாயைத் திறந்து காத்திருக்கும் அவர்களைக் குணப்படுத்தவே முடியாது. கலைக்கான அளவீடுகள் எல்லாமே ஆண்கள் உருவாக்கியவை. ‘பெண் களின் கதைகளில் அவலத்தின் அடர்த்தி கூடுதலாக இருக்கிறதா  – அதுவே உங்கள் லட்சணம் ஆண்களே’ என்று அறைந்து சொல்லும் கதைகளைப் பெண்கள் எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் இழிநிலையைப் பொசுக்க பற்றவைத்த தீக்குச்சிகள்!

‘மரங்களை மட்டுமல்ல; மொத்தக் காட்டையே வெட்டி அழியுங்கள்’ என்ற புத்தரின் கருத்து குறிப்பிடும் காடு – அறியாமை, அதிகாரம், கொடுஞ்சினம் போன்ற மரங்களால் அடர்ந்தது. அப்படியான காட்டினை வேரொடு பிடுங்கி அழித்து மீளச்செய்யாமல், வெறுமனே அவ்வப்போது மரங்களை மட்டும் வெட்டிக்கொண்டிருந்தால் அக்காட்டினால் உண்டாகும் தீமைகளைத் தடுக்கமுடியாது. காடு முழுவதும் எரிந்தால் தவிர, அதிகாரம் உண்டாக்கும் தீங்குகள் தீர்ந்துவிடாது.

தீங்கு நிரம்பிய காட்டின் ஒவ்வொரு மரமாக வெட்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரே ஒரு மரத்தில் ஒரு சிறிய பொந்தில் அக்கினிப் பொறியை வைத்துவிட்டுக் காடு அழிவதை வேடிக்கை பார்த்தார் பாரதியார்.

தீயின் இயல்பே ஒளி. தீ எரிக, அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக, அதனிடத்தே தசை பொழிகின்றோம். தீ எரிக, அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக, அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக!

நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும்-சுடரும் தருக, தீயே நின்னைபோல, எமதுள்ளம் சுடர்விடுக. தீயே, நின்னைப்போல எமதறிவு கனலும்.

-ஸர்மிளா ஸெய்யித்

அணிந்துரையைப் படிப்பது மட்டுமல்ல, புத்தகத்தையும் வாங்கிப் படியுங்கள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *