மக்களின் பாதுகாப்பான வாழ்க்கை கேள்விக்குறியாகலாமா?

3 Min Read
- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமைகளும், குழந்தைகள் கடத்தல்களும் பெண்களுக்கான அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளன. சென்னை எண்ணூரில் இரண்டரை வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இரு 15 வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை. திருநெல்வேலியைச் சேர்ந்த 15 வயது மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி, அன்றிரவே கடத்தப்பட்டு 15 நாட்களாகின்றன. இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை. கடந்த மாத இறுதியில் இராணிப்பேட்டையில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயதுப் பெண் குழந்தை கடத்தப்பட்டார். இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சாத்தான்குளத்தில் வீட்டுக்குள் புகுந்து தந்தையைக் கொலை செய்து, 12 வயது மகனைக் காயப்படுத்தி, இரு சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை என அன்றாடம் வரும் செய்திகள் மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. கடந்த ஆட்சியில் நடந்த ஓரிரு சம்பவங்களைப் பெரிதாக்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பும் கூட, உண்மைக்கு மாறாக, ‘பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்து’ என்ற உணர்வை ஊட்டி, திரைப்படப் பாணியில் பிரச்சாரம் செய்துதான் மக்கள் திசை திருப்பப்பட்டனர். அப்படிப் பிரச்சாரம் செய்தவர்கள் அரசில் நடப்பது என்ன? என்று மக்கள் இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால்,  அரசோ இன்னொரு புறம் காவல்துறைக்கு அதிக அதிகாரம், போராடுவோர் மீது அத்துமீறல், எதிர்க்கட்சிகள் மீது அரசியல் காழ்ப்புணர்வோடு வழக்குகள், கைதுகள், மிரட்டல்கள் என்று காவல்துறைக்கு வேறு பணிகளைக் கொடுத்து வருகிறது. சென்னையின் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள காவலர்களும், அதிகாரிகளும், பிற பாதுகாப்புப் பணிகளுக்கும், பந்தோபஸ்து பணிகளுக்கும் திசை திருப்பிவிடப்படுகின்றனர், அதனால் காவல்நிலையப் பணிகள், விசாரணைகள் பாதிக்கப்படுகின்றன என்ற கவலை காவல்துறை வட்டாரங்களிலிருந்து எழுகிறது.

பெரிய விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யின் செயல்பாடுகள் என்ன, அவற்றுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முழுமையான அதிகாரங்களற்ற அமைப்பாகவே வைத்திருப்பதால் பயன் என்ன?

குழந்தைகள் காணாமல் போகும் பிரச்சினையைத் தனித் தனியாக ஆராயாமல், இது குறித்த பின்னணிகளை ஆராய்வது முக்கியமாகும். இந்தியாவில் திருவிழாக்களின் போதும், பெரிய நிகழ்வுகளின் போதும், பிற காலங்களில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆந்திரா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் அதிகம். கடத்தப்படும் குழந்தைகள் பிச்சையெடுக்கவும், பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தப்படும் வலையமைப்பு இதன் பின்னால் இருக்கும். தமிழ்நாட்டிலும் இத்தகைய சூழல் எழுந்துவிடாமல் காக்க வேண்டியது அவசியமாகும்.

தற்போதுள்ள பிரச்சினைகளைக் குறித்துக் கேள்வியெழுப்பினால், கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா, அதற்கு முன்பு நடக்கவில்லையா என்று எதிர்த் திசையில் கையை நீட்டுவதற்கு ஓர் அரசு தேவையில்லை. கடந்த ஆட்சியில் மகளிர் பாதுகாப்பில் நாட்டிலேயே முதல் இடத்தையும், மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது தமிழ்நாட்டின் நகரங்களே!

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை கவலைக்குரியதாக உருவாகியுள்ளதைப் பொதுவான ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அவற்றில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்காமல், திசை திருப்பும் வேலைகளுக்கு மூளையைச் செலவழிப்பது அன்றன்றைய செய்திகளை மடைமாற்றப் பயன்படுமே தவிர, ஒட்டுமொத்தமாக ஆட்சியின் தன்மை எப்படி என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். இதனிடையில் சிறைக்கைதிகள் தப்பியோட்டம் என்ற பிரச்சினை, குற்றவாளிகளின் நடமாட்டம் குறித்த புதிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆட்சியில் இருப்போர் மாறலாம்; ஆனால், காவல்துறையினருக்கு நாட்டின் பிரச்சினைகள் நன்கு தெரியும். பிரச்சினையின் மூலமும், அதன் வழித்தடங்களும் கூட கண்டுபிடிக்க முடியாதவை அல்ல. பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கை விட்டு, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *