சென்னை, பிப். 23- சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய ரயில் திட்டங்களை செயல்படுத் துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட் டம் சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று (22.2.2023) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார்.
இதில், நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், கனி மொழி என்விஎன் சோமு, மற்றும் ரவிக்குமார் (விசிக), விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) உள்ளிட்டோர் பங்கேற் றனர். கூட்டத்தில், ரயில்வேயில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் மேம்படுத்துவது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித் தனர். நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, ‘‘யானைக்கவுனி மேம்பாலம் சீரமைக் கும் பணி 5 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெறுகிறது. யானைக்கவுனி மேம்பாலப் பிரச்சினை தொடர்பாக பலமுறை ஆய்வு செய்தும், பொது மேலாளரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தப் பணி வரும் ஆகஸ்ட்டில் நிறைவடையும் என்று அதிகாரிகள் உறுதி அளித் துள்ளனர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக, பறக்கும் ரயில் மார்க்கத்தில் ரயில்களில் அதிக நெரிசல் உள்ளது. தற்போது 15 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதை மாற்றி 5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க வேண்டும். இதன்மூலம், கூட்ட நெரி சலை தவிர்க்க முடியும். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப் படவுள்ளது. புதுப்பிக்கப்படும் எழும் பூர் ரயில் நிலையத்துக்கு ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேசும்போது, ‘‘விரைவு ரயில்களான உழவன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் திண்டிவனத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா காலத்தில் ரயில்களுக்கான சாதாரண பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அவற்றை குறைத்து மீண்டும் சாதாரண கட்டண பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். கிழக்கு கடற்கரை வழியே சென்னையிலிருந்து கடலூருக்கு ரயில் பாதை அமைக்க ரூ.50 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இத்தொ கையை உயர்த்த வேண்டும்” என்றார்.
கனிமொழி என்விஎன் சோமு எம்.பி பேசும்போது, ‘‘ரயில்களில் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். புறநகரில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்றார். மேலும், காட்பாடி நிலையத் தில் மறுசீரமைப்பு செய்யும்போது, பல்வேறு வசதிகளை ஏற்படுத்த கலாநிதி வீராசாமி எம்.பி. கோரிக்கை விடுத்தார். சென்னை – ஷீரடிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க கிரிராஜன் எம்.பி. வலியுறுத் தினார்.