சென்னை, அக். 23- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 188 அரசுக் கல்லூரிகளில் 97 கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. இக்காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 181 கலைக் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசுக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 97 கல்லூரிகளில் அதாவது 50 சதவீத கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுக் கல்லூரிகளின் விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அரசுக் கல்லூரிகளில் விளையாட்டுகளில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு தனிப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். பயிற்சிபெறும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும். பிற கல்லூரிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும், விளையாட்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கும், தேவையான விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதற்கும் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசுக் கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாட்டுக்கென குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கீடு செய்தால் ஏழை மாணவர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
