ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு!-வி.சி.வில்வம்

- Advertisement -

மாநாடு நடத்த வேண்டும் என முதன்முதலில் சொன்ன போது, ஜப்பான் தோழர்கள் கொஞ்சம் அதிர்ச்சி ஆனார்கள். ஆண்டுக்கு ஒருமுறை, மாலை நேரத்தில் நான்கு மணி நேரம் நிகழ்ச்சி நடத்துவதே எப்போதும் வழக்கம். இந்தச் சூழலில் “மாநாடு” என்பது நடைமுறைச் சாத்தியமா? அதுவும் இரண்டு நாட்கள் என்றதும் வியப்பாகவும், மலைப்பாகவும் ஆகிவிட்டது அவர்களுக்கு! தமிழ், ஜப்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உரைகள் அமைய வேண்டும் என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியிருந்தார்கள். இந்த ஆண்டின் (2026) ஜனவரி மாதம் மகாராட்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற்ற “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிலும்” தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உரைகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ்
தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA)

ஆக ஜப்பானில் இரண்டு நாட்கள் மாநாடு, மூன்று மொழிகளில் உரை, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சிந்தனையாளர்கள் கூடுகை  என்கிற பெரும் தோற்றமே, ஜப்பான் தோழர்களைச் சற்றே அசைத்துப் பார்த்தது. எனினும் ஓரிரு நாட்களிலேயே அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். “வெளிநாடு வாழ் தமிழ் இந்தி யர்கள் சங்கத்தின்” சார்பில் இந்த மாநாட்டைச் சிறப்பாகச் செய்வது என முடிவு செய்தார்கள். அந்த வகையில், அமைப்பின் தலைவர் ரா.செந்தில்குமார், துணைத் தலைவர்கள் ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம்,  ஆலோசகர் வி.குன்றாளன் ஆகியோர் கூடிப் பேசினர். ஜப்பானில் பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாட்டிற்கு அக்டோபர் 11, 12 எனும் தேதியைக் குறித்தார்கள். சற்றொப்ப அய்ந்து மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன.

சிறப்புக் கட்டுரை

மாநாட்டு இடத்தைச் தேர்வு செய்வது, சிறப்பு அழைப்பார்களை முடிவு செய்தல், ஆய்வுக் கட்டுரை வாசிப்பவர்களின் பட்டியலைத் தயார் செய்வது என்பதோடு, பத்திற்கும் மேற்பட்ட ‘வாட்சப்’ குழுக்கள் உருவாக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக்கப்பட்டன. தோழர்கள் ஜப்பான் நிறுவனங்களில் பணிபுரிவதால் திட்டமிடல் மற்றும் ஆவணங்களைக் கையாள்வதில் எப்போதும் தேர்ந்த நேர்த்தி இருக்கும். அந்த அடிப்படையில் ஒவ்வொன்றிற்கும் கால அட்டவணை தயார் செய்யப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் ஜப்பான் மாநாட்டிற்குப் பெயர்களைப் பதிவு செய்தனர்.

வெற்றிகரமான ஜப்பான் மாநாடு!

 

 

பெரியாரின் சிந்தனைகள் உலக அரங்கில் எப்படித் தொடர்ந்து ஒலிக்கின்றன என்பதைப் பற்றி ஜப்பானில் நடைபெற்ற ‘BRIDGE’ (பன்னாட்டு) மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது.

பெரியாரின் சிந்தனைகளை தனது வாழ்நாள் முழுவதும் உலகிற்கு எடுத்துரைத்து வரும் தமிழர் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்களை 20.10.2026 அன்று காலை நானும் எனது மனைவியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மாநாட்டின் வெற்றி குறித்து உரையாடினோம்.

ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கொள்கையை எடுத்துச் செல்லும் பாலங்கள் சில நேரங்களில் புத்தகங்கள்; சில நேரங்களில் இயக்கங்கள்; மேலும் சில நேரங்களில் மாமனிதர்களே.

ஆசிரியர் அவர்கள் அத்தகைய மாமனிதர்களில் ஒருவர்.

பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனைகளை தலைமுறைகள் தாண்டி உயிரோட்டத்துடன் எடுத்துச் செல்லும் ஆசிரியர் அவர்கள் இன்று எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அத்துடன், ஜப்பானில் அக்கா அருள்மொழி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்ட “கர்ப்ப ஆட்சி” புத்தகம் குறித்து நான் பேசியபோது, அதன் புதிய பிரதியொன்றையும் அன்புடன் வழங்கினார்.

இந்தச் சந்திப்பின்போது எனது அருமை அண்ணன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் உடனிருந்து, மாநாட்டின் சிறப்புகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

 – முனைவர் டி.ஆர்.பி. ராஜா

மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்,  தி.மு.க.

 

 

திராவிட இயக்கத்தின் வேர் “கல்வி”!

அதேநேரம் பெரியார் பெயரில் மாநாடு நடக்க இருப்பதை அறிந்த பிற ஜப்பானிய தமிழ் நண்பர்கள் வியப்புடனும், சற்றுச் சினத்துடனும் நோக்கினர். அவர்கள் அனைவருமே தத்தம் ஊர்களில் இருந்து ஜப்பான் செல்ல பயன்பட்டவை திராவிட இயக்கக் கல்வி ஏணிதான் என்பதைக் காலம் எடுத்துக் கூறும். அதேநேரம் மாநாட்டில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இணைய வழியில் தொடங்கப்பட்டன. மூன்றே நாட்களில் முழு கொள்ளளவும் முடிந்தது. திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பது நேரடியாகக் கடவுள் மறுப்பல்ல; கல்வி வழங்குதல், அதன் வழியாகத் தமிழ்ச் சமூகத்தை உயர்த்துதல். இதை அறிந்து கொண்ட பக்தித் தமிழர்களும் ஏராளமாக மாநாட்டிற்குப் பதிவு செய்தனர்.

சிறப்புக் கட்டுரை

இந்நிலையில், இதற்கு முன் நடந்த பன்னாட்டு மாநாடுகளில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட தோழர்கள் பங்குபெற்றனர். எனவே ஜப்பானிற்கும் 30 தோழர்களை அழைத்துச் செல்லலாம் எனத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் ‘விடுதலை’ நாளிதழில் அறிவிப்பு வெளியானது. மூன்றே வாரங்களில் 30 விமான இருக்கைக்கும் தோழர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் ஓசூர் செல்வம், செல்வி, மதுரை இராஜேஸ்வரி, இராமசாமி, முனியசாமி, புதுச்சேரி வீரமணி, குன்னூர் மருத்துவர் கவுதமன், தஞ்சாவூர் அமர்சிங்,  திருச்சி மலர்மன்னன், அரசெழிலன், வில்வம், கல்லக்குறிச்சி சுப்பராயன், கோயம்புத்தூர் பொய்யாமொழி, தொல்காப்பியம், மீன்சுருட்டி அசோகன், விஜயா, நிலக்கோட்டை சக்திவேல், குடியாத்தம் சடகோபன், ஈஸ்வரி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தங்கமணி, தனலட்சுமி, வீரமர்த்தினி, முத்தையன், அரியலூர் தியாக முருகன், கலா, சேலம் வீரமணி ராஜு, தர்மபுரி ஜெயராமன், தமிழ்ச்செல்வி, மும்பை பெரியார் பாலா ஆகிய 30 தோழர்கள் தான் சென்னையில் இருந்து ஜப்பான் மாநாட்டிற்குச் சென்றவர்கள்.

தோழர்களின் நேர்த்தி!

ஆக ஜப்பான் தோழர்களும் தயார் நிலையில் இருந்தனர். எந்தெந்த நாடுகளில் இருந்து, எந்தெந்த தேதிகளில், எந்தெந்த நேரத்தில்,  எந்தெந்த விமான நிலையத்திற்குத் தோழர்கள் வருகிறார்கள் என்கிற பட்டி யலைத் தயார் செய்து வைத்திருந்தார்கள். அந்த அட்டவணைகள் “போக்குவரத்துப் பிரிவிற்கு” அனுப்பப் பட்டன. அதன் அடிப் படையில் அவர்கள் அனைவரும் “சுற்றிச் சுழன்று” அவரவர்களைத் தங்கும் இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். திட்டமிடப்பட்ட வேலைகள், அதைச் செயல்படுத்திய விதம், ஓர் ஒழுங்கு, கட்டுப்பாடு, ஆர்வம், பிழையற்ற தன்மை இவையனைத்தையும் நம் தோழர்களிடம் காண முடிந்தது. இந்த வியப்பை ஆசிரியர் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, “வியப்பதோடு மட்டுமின்றி, அதை அப்படியே தமிழ் நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும், அதுதான் அடுத்தடுத்த வளர்ச்சி” என அறிவுறுத்தினார்கள்.

சிறப்புக் கட்டுரை

சென்னையில் இருந்து அக்டோபர் 9 ஆம் தேதி இரவு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் ஏராளமான சென்னைத் தோழர்கள் விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். சென்னை – சிங்கப்பூர், சிங்கப்பூர் – ஜப்பான் இதுதான் வழித்தடம். எந்தச் சிரமங்களும் இன்றி பயணம் சிறப்பாக அமைந்தது. சிங்கப்பூர், ஜப்பான் விமான நிலையங்களில் தானியங்கி கருவிகள் மற்றும் பல்வேறு அறிவியல் வசதிகள் இருக்கும். நமது தோழர்களில் சிலர் 75, 80 வயதைக் கடந்தவர்கள் இருந்தனர். இதுபோன்ற கருவிகளை இயக்குவதில் ஓரிரு முறை தாமதங்கள் ஏற்பட்டது. பின்னர் உள்வாங்கி, அவர்களே இயக்கப் பழகிக் கொண்டனர். ஆர்வமும், தங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய முடிந்தது.

காலம் மாறிப் போச்சு!

மாநாட்டிற்கு முதல்நாளே அனைவரும் ஜப்பானிற்குச் சென்றுவிட்டோம். பொதுவாக ஜப்பானில் செப்டம்பர் இறுதியில் குளிர் தொடங்கி மார்ச், ஏப்ரல் வரை நீடிக்கும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும். அனைவரும் குளிருக்கேற்ற ஆடைகளைத் தயாராய் வைத்திருந்தார்கள். எனினும் அக்டோபர் வந்த பிறகு கூட குளிர் பெரிதாக இல்லை. சில நேரங்களில் சூரிய வெப்பமும் இருந்தது. உலகம் முழுவதும் கால மாற்றம் ஏற்படுவது கவலை அளிக்கிறது. உலகத்திற்கு ஆபத்தான சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் அறிவியல் விஞ்ஞானிகள் தான் மாற்று ஏற்பாடு கண்டுபிடித்து, மனித குலத்தை நீட்டித்து வருகிறார்கள். அதேபோல இந்த உலகம் இயற்கையின் பிடியிலிருந்து காப்பாற்றப்படும் என மனிதர்கள் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். ஆனால் மறந்தும் கூட இப்பிரச்சினைகளை யாரும் கடவுள்களிடம் எடுத்துச் செல்வ தில்லை. தந்தை பெரியாரின் கடவுளை மற; மனிதனை நினை! என்கிற தத்துவத்தையே உலகம் முழுவதும் பின்பற்றி வருகிறார்கள்.

சிறப்புக் கட்டுரை

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *