ராகுல்காந்தியின் சமூக நீதிப் பார்வை

Viduthalai
2 Min Read

ராகுல்காந்தி செப்டம்பர் இறுதியில் நடந்த ஊடக வியலாளர்கள் சந்திப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக பேசிக் கொண்டு இருக்கும் போது – “உங் களில் எத்தனை பேர் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடி யினத்தவர்கள் இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.  

யாருமே இல்லை என்றனர் – ராகுலின் இந்த கேள்வி இந்தியா எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மோடி அரசின் உத்தரவை அடுத்து ராகுலுடனான பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்கு பார்ப்பனர், உயர் ஜாதியினர் அல்லாத செய்தியாளர்களையும் அனுப்ப ஊடக நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 

இந்த நிலையில் அண்மையில் டில்லியில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி எழுப்பிய அடுத்த கேள்வி வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது போல இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களின் அலை பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவது குறித்த ஊடகவிய லாளர் சந்திப்பின் போது “அன்று உங்களில் எத்தனை பேர் உயர் ஜாதியினர் அல்லாதவர் என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன், இது கேட்கக் கூடாத கேள்விதான்  – இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் அந்த மக்களை நாம் அழுத்தி வைப்போம்? அதன் வெளிப்பாடுதான் அந்தக்கேள்வி” என்றார்.  உடனே ஒரு செய்தியாளர் “நான் இதர பிற்படுத்தப்பட்டவன் – இங்கே இருக்கிறேன்” என்றார். 

 உடனே ராகுல்காந்தி – “நல்லது, உங்களை ஏன் இத்தனை நாட்களாக அனுப்பவில்லை?” என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் “இங்கே இத்தனை ஊட கங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 100 கேமிராக்களுக்கு மேல் உள்ளன. 

 உங்களில் எத்தனை ஊடக முதலாளிகள் பிற்படுத் தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங் குடி இனத்தினராக உள்ளனர்? குறைந்த பட்சம் செய்தி ஆசிரியர் களாகவாவது உள்ளனரா?” என்று கேட்டார். 

மீண்டும் ஊடகவியலாளர்கள் தரப்பில் அமைதி தென்பட்டது. 

“90 சதவீத மக்களுக்கு தேவையான செய்தி களைக் கொண்டு சேர்ப்பவர்கள் இந்திய மக்கள் தொகையில்  வெறும் 3 அல்லது 4 விழுக்காடுகள் மட்டுமே உள்ளவர்கள்; அவர்களால் எப்படி சாமானியர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின் நிலை இதுதான்.

இதுவரை திராவிடர் கழகமும், தி.மு.க.வும், தந்தை பெரியாரும், தகைசால் தமிழர் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் வெளிப்படையாக  எழுப்பிய வினா இப்பொழுது வட இந்தியாவிலும் பற்றிக் கொண்டு விட்டது.

ஜாதிய சமூக அமைப்பில் சமூகநீதியின் குரல் எத்தகைய அவசியம், அது எந்த அளவு பலமாக எழ வேண்டும் என்ற அவசியத்தை காலந்தாழ்ந்தாவது வட புலத் தலைவர்கள் பேச ஆரம்பித்தது – பெரிதும் போற்றி வரவேற்கத் தகுந்ததாகும்.

ஒன்றிய அரசில் உள்ள 90 செயலாளர்களுள் இதர பிற்படுத்தப்பட்டவர் வெறும் மூன்றே பேர்தான் என்பதையும் சொன்னவர் இளந் தலைவர் இராகுல் காந்தி அவர்களே!

நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க என்ற முழக்கம் கேட்கிறது! பெரியாரின் சச்சிராமாயணத்தைப் படியுங்கள் என்று ஒரு உறுப்பினர் பேசுகிறார்.

பிரியங்கா காந்தி தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலைப் பற்றிப் பேசுகிறார் என்றால் பெரியாரியம் இந்தியாவின் வருண தர்ம நோய்க்கான மாமருந்து என்பது உணரப்பட்டு விட் டதே! வரும் மக்களவைத் தேர்தலில் தந்தை பெரியார் இந்தியா முழுவதும் எதிரொலிப்பார் என்பதில் அய்யமில்லை.

வாழ்க பெரியார்!

வெல்க சமூகநீதி!!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *