சட்ட ஒழுங்கு தவறிய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி
விலகக் கோரி போராட்டம் நடத்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லையா?
போராடும் உரிமையாளர்களை காவல்துறை, துணை இராணுவம் கொண்டு ஒடுக்குவது பச்சைப் பாசிசமே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
விலகக் கோரி போராட்டம் நடத்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லையா?
போராடும் உரிமையாளர்களை காவல்துறை, துணை இராணுவம் கொண்டு ஒடுக்குவது பச்சைப் பாசிசமே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
சட்ட விரோதமாக செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி விலகக் கோரி போராடுவது குற்றமா? ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்குப் போராடும் உரிமைக்கு இடமில்லையா? போராட்டம் நடத்துபவர்களை நசுக்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட, எதிர்க்கட்சிகள் ஓரணியாக ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- சட்ட ஒழுங்கு தவறிய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லையா? போராடும் உரிமையாளர்களை காவல்துறை, துணை இராணுவம் கொண்டு ஒடுக்குவது பச்சைப் பாசிசமே! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
- வழக்கின் பின்னணி!
- முன்னாள் முதலமைச்சர்களும் கைது!
- உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?
- எச்சரிக்கை! எச்சரிக்கை!!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடு நடந்ததை முன்னிறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகள், நடைமுறைகள், முறைகேடான செயல்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு – அமைப்புகள், மாணவர்கள் குறிப்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கின் பின்னணி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) மற்றும் இதர தேர்தல் ஆணைய முடிவுகளில் மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலைப் பெறாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்கையில், வீதிகளில் இறங்கித் தீவிரமான போராட்டங்களும் இன்னொரு பக்கம் நடந்து வருகின்றன.
போராட்டத்திற்குக் காரணமானவை குறித்து ஆலோசித்து, உரிய முடிவுகளை எடுக்கவேண்டிய ஒன்றிய பி.ஜே.பி. அரசு – அதற்கு விரோதமாக போராட்டத்தை ஒடுக்கும் முறையில் தீவிரம் காட்டி வருகிறது.
நேற்று (10.10.2026) டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது காவல் துறையினர் மேற்கொண்ட அடக்குமுறைகளும், வன்முறை நடவடிக்கைகளும் சொல்லுந் தரமன்று. 41 ஆயிரம் காவல் துறையினர், துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களைத் தடுக்கும் வகையில், போக்குவரத்துகள் முடக்கப் பட்டன. டில்லிக்கு வரவேண்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தலைநகரில் உள்ள
50–க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் இயங்க வில்லை. டில்லியில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த ஜந்தர் மந்தரைச் சுற்றி 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு செல்போன் இணைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
போராட்டத்தை ஒடுக்கவேண்டும், பிசுபிசுக்கச் செய்யவேண்டும் என்ற திட்டத்தில், இவ்வளவுக் கடுமையான ஏற்பாடுகளை செய்திருந்தாலும், இவற்றை எல்லாம் முறியடித்து, மாணவர்களும், இளை ஞர்களும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு ஆயிரக்கணக்கில் குவிந்துவிட்டனர்.
மும்பையில் இருந்து டில்லிக்குப் புறப்பட்டு வந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் பிற நிர்வாகிகள் டில்லி விமான நிலையத்திற்கு நேற்று (10.10.2026) காலை வந்து சேர்ந்தனர்.
இதனை மோப்பம் பிடித்த காவல்துறையினர், விமானத்திற்குள்ளேயே நுழைந்து அவர்களைக் கைது செய்தனர். ஒரு ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காகப் போராடக் கூட உரிமை கிடையாது என்கிற அளவுக்கு நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி பாசிச வெறி கொண்டு பாய்கின்றது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையோ!
ஒன்றிய அரசின் எல்லா வகையான அடக்கு முறைகளையும் சந்திக்கப் போராட்டக்காரர்கள் குவிந்துகொண்டே இருந்தனர்.
5000–த்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தால் ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து விலகி ஓடும்படி நேர்ந்தது. அதை மனதிற்கொண்டு, ஆத்திரப்பட்டு, வேகங்கொண்டு, அடக்குமுறை ஆயுதத்தை மிகக் கூர்மைப்படுத்தி, நேற்று (10.10.2026) ஏவியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
முன்னாள் முதலமைச்சர்களும் கைது!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வந்த மேனாள் முதலமைச்சர்கள் மம்தா, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மாணிக்சர்க்கார் ஆகி யோரையும் கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். முதலமைச்சர்களுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.எம். பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் பிருந்தா காரத் போன்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வளவுக்கும் மாணவர்களும், இளைஞர்களும், முன்னாள் முதலமைச்சர்களும் என்ன குற்றம் செய்துவிட்டனர்? ஏன் இவ்வளவு அராஜகம் அரசு தரப்பில்?
தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, தேர்தல்களில் பி.ஜே.பி. வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு செயல்பட்டது ஒன்றிய அரசு என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றிருந்த சட்ட நிலையை நீக்கி, பிரதமரும், ஒன்றிய அமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிற ஏற்பாட்டின் பின்னணி என்ன?
மூன்று உறுப்பினர்களில் இருவர் பெரும்பான்மை (பி.ஜே.பி.) பெறவேண்டும்; அதன்மூலம் தேர்தல் ஆணையத்தைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வைக்கவேண்டும் என்ற சூழ்ச்சிதானே இதன் நோக்கம்.
நடந்து முடிந்த பல்வேறு மாநிலத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. திட்டமிட்டதுதானே நடந்திருக்கிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக, தானடித்த மூப்பாக மற்ற இரு உறுப்பினர்களையும் கலந்து ஆலோசிக்காமலும், இன்னும் சொல்லப் போனால், அவ்விருவரும் கூறிய வற்றை நிராகரித்தும், பி.ஜே.பி.க்கு ஆதரவானப் போக்கில்தானே செயல்பட்டுள்ளார் என்ற பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!
13 கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து தந்திர உபாயத்தால் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளனரே! அதன் பலன் ஆளும் பி.ஜே.பி.,க்குச் சுளையாகக் கிடைத்துவிட்டது என்ற உண்மை, ஆய்வுப் பூர்வமாக வெளிவந்துவிட்ட காரணத்தால், ஆளும் தரப்புக்கு நெரி கட்டிவிட்டது. அதனுடைய அளப்பரிய ஆத்திரம்தான், எதிர்ப்பாளர்களைக் கண்மூடித்தனமாக வேட்டை ஆடுவதாகும்.
இதில் என்ன ‘அராஜகம்’, கொடுமை என்றால், தங்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஆளும் பி.ஜே.பி. தரப்பு என்பதற்குச் சாட்சியம்தான், தங்களின் சதித் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தையும் பொய்ச் சாட்சிக்கு அழைத்திருப்பதுதான்.
ஆனால், உச்சநீதிமன்றம் பி.ஜே.பி.யின் பொய் முகத்தை அம்பலப்படுத்திவிட்டதே! எந்த முகத்தை வைத்துக்கொண்டு பிரதமரோ, ஆளும் பி.ஜே.பி.யோ வெளியில் நடமாட முடியும்?
உச்ச நீதிமன்றத்தின்
நிலைப்பாடு என்ன?
நிலைப்பாடு என்ன?
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலை மையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்தது.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட ‘படிவம் 6’-க்கு உச்ச நீதிமன்றம் எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை (We didn’t approve modified Form 6). இதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்’’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கு மேலும் ஒரு நொடி நேரம் தேர்தல் ஆணை யத்தின் தலைமை ஆணையர் பதவி நீடிக்கலாமா?
இவருக்குத் துணையாக இருந்த ஆட்சிக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராக வேண்டாமா?
எதிர்க்கட்சிகளும் இதற்குப் பிறகு ஒன்றிய அரசை வீழ்த்துவதே ஒரே இலக்கு என்ற முனைப்பில் இறங்க வேண்டாமா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
குதிரை பேரம்,
வாக்காளர் சேர்ப்பில் வடிகட்டிய மோசடி,
அதிகார பலம்,
காவல்துறை,
இராணுவ பலம்,
பண பலம்,
பத்திரிகை பலம் இவற்றின் மூலம் மக்களின் முதுகெலும்பை முறித்து, ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கத் துடிக்கும் ஒற்றை ஆட்சித் திட்டம்; இவற்றின் பெருக்குத் தொகைதான் பி.ஜே.பி.,
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.10.2026
