கவிஞர் கண்மதியன்
எனது ஊர் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி. எனது ஊர்க் கோவில்களுக்குள் போய் சாமி கும்பிடுவேன். என் தாய் கிருஷ்ண பக்தை; அதனால் எனக்கு கிருஷ்ணன் எனப் பெயரும் சூட்டப்பட்டது. கோவிலுக்குப் போவது என் மனதில் ஒரு சடங்காகப் பதிந்திருந்தது. கடவுள் நம்பிக்கை பற்றிய கேள்வி அப்போது எழவில்லை. அன்று எனது ஊர் ஒரு சிறிய கிராமம். வருணாசிரம ஜாதி முறை ஆழமாக வேருன்றி இருந்தது. வண்ணாரத் தெரு, சக்கிலித் தெரு, பறத்தெரு என்றெல்லாம் இருந்தன. பார்ப்பாரத் தெரு என்றும் இருந்தது; அந்தத் தெருவுக்குள் மற்றவர் புகமாட்டார்.
நான் 6-ஆம் வகுப்பு படித்துத்கொண்டிருந்த நினைவு. என் வகுப்புத் தோழன் இராசு (வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்). எனது வீட்டிற்கு வந்த போது என் தாயார் என் நண்பனுக்குத் திண்ணையிலும், எனக்கு வீட்டினுள்ளும் உணவு தந்ததை எதிர்த்துத் தெருவில் போய் நின்று கொண்டேன். என் தாய் என்னைச் சமாதானம் செய்து இருவருக்கும் வீட்டிற்குள் உணவு தந்தார். வருணாசிரமம் என்றால் என்ன என்று அறியாத இளம் பருவ நிகழ்வு அது. பள்ளி இறுதி வகுப்பு (SSLC) படித்துவிட்டு, வெளியூரில் பியுசியும் முடித்து விட்டுத் திருச்சி தெப்பக்குளம் அருகில் ஆண்டாள் தெருவில் நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்த காலக்கட்டம்.
1962-திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரே ஒரு காலி நிலத்தில் பெரியார் பேசுகிறார் என்பதறிந்தேன். நண்பர்கள் வரவில்லை. நான் மட்டும் தனியே போய்த் தரையில் அமர்ந்தேன். முதல் முதலாக அன்றுதான் பெரியாரைப் பார்த்தேன்; அவரின் பேச்சைக் கேட்டேன். பெரியாரின் சமூகநீதி, சமதர்மச் சிந்தனைகள் பற்றிய பேச்சு முதலில் தீப்பொறியாய்த் தெரிந்தது; பின்னர் அவர் பேசப்பேசப் கடவுள் மறுப்பு, பெண்ணுரிமைச் சிந்தனைகள் காட்டுத் தீயாய் என் நெஞ்சில் பற்றி எரிந்தன.
அப்போதுதான் மானுட சமூகம் என்னவென்று புரிந்தது. அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தேன்; பெரியாரின் பேச்சுகள் என்னைத் தூங்க விடவில்லை. விடிந்தது; இருள்போக்க சூரியன் எழுந்ததுபோல், என் மன இருள் போக்க பெரியார் எனும் சூரியன் எழுந்திருந்ததை உணர்ந்தேன். சிந்திக்கும் உணர்வு முதல்முதலாக என்னுள் விதைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் முளைத்துக் கொண்டிருந்தன. ஒரே நாள் இரவில் நான் மொத்தமாக மாறி இருந்ததை உணர்ந்தேன்.
1963- என் பெரியப்பா (அங்கமுத்து) உடம்பெல்லாம் பலூன்போல் உப்பிய நிலையில் என்னைச் சந்தித்தார். தனக்கு சுரைக்காய் மாரியாயி வத்திருப்பதாகவும், அது குணமாக திருச்சி சமயபுரம் மாரியாயியை வேண்டிக்கொண்டு அந்தக் கோவில் உண்டியலில் தன் மனைவி (பெரியம்மா செல்லம்மாள்) தாலியைக் கொண்டு வந்து “மாங்கல்யப் பிச்சை” கேட்டுப் போட்டுவிட்டு வந்ததாகவும் கூறினார். “மாங்கல்யம் தந்தால்தான் உயிர்ப்பிச்சை தருவேன்” என்றால் அது எப்படித் தெய்வம் ஆகும்?” எனப் பலவாறு கேட்டு அவரின் மூடநம்பிக்கையைக் கண்டித்தேன். “தென்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுகிறாயா!”எனக் கேட்டார். “சேர்த்து விடுகிறேன்; குணமானால் அதற்குக் காரணம் சமயபுரம் மாரியாயி என்பீர்களா? டாக்டர்கள் என்பீர்களா?” எனக் கேட்டேன்.
ஏதோ நினைத்தவராய்த் திடீரென “வேண்டாம்; வேண்டாம்; வேண்டிக் கொண்ட பிறகு மருத்துவ மனையில் சேர்த்தால் அது சாமி குத்தமாயிடும்; உன் அம்மா (பெரியம்மா) திட்டுவா; நான் ஊருக்குப் போகிறேன்” என்றார். “சரி உங்கள் தெய்வ நம்பிக்கையின் படி 10 நாள் பாருங்கள்; குணம் ஆகவில்லை என்றால் அடுத்த நாளே வாங்க; மருத்துவமனையில் சேர்த்து விடுகிறேன்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். 11ஆம் நாள் போகிப் பண்டிகை; வறுமை காரணமாகப் போக எண்ணம் இல்லாமல் இருந்தேன். ஏனோ திடீரெனப் புறப்பட்டேன்.நான் போய்ச்சேர 10 நிமிடங்களுக்கு முன்பாக அவர் இறந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். “கட்டாயப்படுத்தி அவரை மருத்துவமனையில் சேர்க்கத் தவறி விட்டோம்” என்கிற குற்ற உணர்வு என் நெஞ்சில் எழுந்தது. நாத்திக உணர்வு என் நெஞ்சில் ஆழப் பதிந்தது. தந்தை பெரியாரின் பேச்சு என்னுள் நாத்திக உணர்வை விதைத்தது; என் பெரியப்பாவின் மறைவு என்னை முழு நாத்திகனாக மாற்றியது.
(நீங்கள் எப்படி நாத்திராக உணர்ந்தீர்கள்? என்று ‘விடுதலை’க்கு எழுதி அனுப்புங்கள்!)
