மாணவிகளிடமுமா பேய் நம்பிக்கை? கி.இரா.

9 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பேய், பிசாசு, ஆவி எனக் கூறப்படுபவை இயற்கைக்கு மாறானவையாகும். தவறான நம்பிக்கை களாகும். பேய்கள் உலகில் எங்காவது காணப்பட்டதாக உறுதியானத் தகவல்கள் எதுவுமில்லை. அப்படிக் காணப்பட்டதாகச் சொல்லப்பட்ட எவையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுப் பதிவு செய்யப் பட்டுள்ளனவா என்றால் – அதுவுமில்லை.

நடைமுறையில் காணப்படுவது – எது?

இவை பற்றிய தவறான தகவல்கள், மத அடிப் படையில் ஆனப் புரிதல்கள் காலங்காலமாக மனிதர் களிடம் பரவி வந்தன. நிலை பெற்றும் விட்டன. உண்மை ஒன்றாக உயர்ந்து நிற்கும். ஆனால், பொய்யானது பல்லாயிரம் வடிவங்களில் பரவி வலுப்பெற்றுவிடும். நடைமுறையிலும் நாம் இதனை நன்குக் காணமுடியும்.

மூடநம்பிக்கைகளின், குருட்டு எண்ணங்களின் கடும் வைரியானப் பெரியார் அவர்கள், “அறிவியல் பூர்வமாகப் பேய், பிசாசுகள் இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எந்த ஒரு கருத்தையும் மனிதன் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று அறிவுறுத்துகின்றார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“மனிதர்கள் தங்களின் சக மனிதர்களை அச்சமூட்டி அடிமைப்படுத்துவதற்காகவே பேய், பிசாசு என்ற கற்பனைகளை உருவாக்கினர். பேய் ஓட்டுவது, மந்திரம் ஓதுவது போன்ற செயல்கள் மக்களைச் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஏமாற்று வேலைகள்” என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் – தந்தை பெரியார்.

“இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒழிப்பது என்பது வெறும் சமய எதிர்ப்பு மட்டுமல்ல. அது மனிதனை இழிவுபடுத்துகின்ற ஜாதிய ஆதிக்கத்தில் இருந்தும், பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகளில் இருந்தும் ஒட்டுமொத்த சமுதாயத்தை விடுவித்து, ஒரு முற்போக்கான, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையாகும்” என்று சமுதாய மேம் பாட்டுக்கு மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்படுவது முக்கியமானது என்று அறிவுறுத்துகின்றார் தந்தை பெரியார்.

பேய்கள் இவர்களைப் பிடிப்பதில்லையே!

“படித்த அதிகாரிகளையோ, மருத்துவர்களையோ அல்லது பார்ப்பனச் சமூகத்தினரையோ இந்தப் பேய்கள் ஏன் பிடிப்பதில்லை?” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்ட கேள்வி மக்களை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. இக்கேள்விக்கு உரிய பதில் இதுதான் என்று கூறியவர்தான் எவருமிலர்.

இப்படியெல்லாம் பேய், பிசாசு மடமைகளைப் பற்றிக் கருத்துகள் கூறி அறிவுரைப் பகர்ந்த தந்தை பெரியார், தனது சமுதாய மேம்பாட்டுப் பார்வையில், கண்ணுக்குத் தெரியாத இந்தப் பேய்களைவிட அனைத்துக் கூறுகளிலும் சமூகத்தை அடித்தளத்திற்கு இட்டுச் செல்லுகின்றத் தீமைகள்தான் உண்மையானப் பேய்கள் என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்.

தந்தை பெரியார், கடவுள், மதமும் – ஜாதியும், ஜனநாயகம் என்பவை மூன்று பேய்கள் என்று எடுத்துக் காட்டினார். இந்த மூன்றும்தான் முதலாமானவையாக அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்ற உறுதிப் படுத்தினார். இவற்றோடு அய்ந்து நோய்கள் என்று அவர் கூறியவை எவையென்றுத் தெரியுமா? பார்ப்பான், பத்திரிகை, சட்டசபை, தேர்தல் (அரசியல் கட்சிகள்), சினிமா ஆகியன இந்நாட்டைப் பிடித்துள்ள அய்ந்து நோய்கள் எனத் தந்தை பெரியார் அடையாளப்படுத்திக் கூறிய நோய்களாகும்.

தமிழர் தலைவரின் தகைமை!

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலாவது மூடநம்பிக்கை நச்சுக் கொடிகள் முளைத்துப் படருவதற்கு இடந்தராமல் முளையிலேயே அதனைக் கிள்ளி எறிவதற்கு அதி வேகத்துடன் செயலாற்றும் செயற்கரியச் செய்யும் தகைமையாளர் ஆவார். தனது அறிக்கைகள் வாயிலாக அந்த மூடநம்பிக்கைத் தொலைந் தொழிவதற்குத் தக்க விளக்கங்களைத் தருவார். அவ்விடத்து மக்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் புயலெனச் சுழன்று அடிப்பதற்குத் தக்க அறிவிப்புகளைத் தந்து கழகத் தோழர்கள் களப்பணி ஆற்றுவதற்கு அவர்களை முடுக்கி விடுவார். உரியன ஆவன செய்யப்படுவதற்கு அரசாங்கத்தின் கவனத்திற்கும் அவற்றைக் கொண்டு செல்வார். இதில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத வேகமும், பணிச் செய்யும் திறனும் தமிழர் தலைவருக்கே வாய்க்கப் பெற்றவைகளாகும்.

 

மாணவிக்குப் பேய் பிடித்துவிட்டதாம்!

இந்நிலையில்தான் தம்முடன் படித்து வருகின்ற சக மாணவியைப் பேய் பிடித்து விட்டதென்று கொடுமைப்படுத்தித் துன்புறுத்திய கல்லூரி மாணவிகள் குறித்துச் செய்தி வெளியாகியுள்ளது. (15.9.2026) கல்லூரி மாணவி களுமா இப்படி? என்று திகைப்படைய வேண்டியுள்ளது. அறிவு வளர்ச்சிப் பெறுவதற்கு வழி கோலுகின்ற கல்வியைக் கற்று வருகின்ற நிலையில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்கின்ற கேள்வி எழுகின்றது.

கட்டுரை, ஞாயிறு மலர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் இதயா மகளிர் கல்லூரி உள்ளது. இது ஒரு பொறியியற் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருபவராவார். இவருடன் கடலூரைச் சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவி, வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த பி.டெக். முதலாமாண்டு மாணவி, விருத்தாசலம் நகரைச் சேர்ந்த பொறியியல் முதலாமாண்டு மாணவி, சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கின்ற மாணவியர் இருவர் என அய்ந்து மாணவிகளும் அதே கல்லூரியில் அக்கல்லுரியைச் சார்ந்த மாணவியர் விடுதியில் தங்கிப் படித்து வந்தனர்.

சுட்ட கற்பூரம் – துடைப்பக் கட்டையால் அடி!

திடீரென்று ஒரு நாளில் வாணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிக்குப் பேய் பிடித்துவிட்டதென்று உடன் இருந்த மாணவிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. அம் மாணவிகள் அய்ந்து பேரும் பேய் பிடித்து ஆட்டுவிப்பதாகக் கூறப்பட்ட அந்த மாணவியின் கையில் கற்பூரத்தைச் சுடச்சுட ஏற்றி கையைப் புண்ணாக்கிவிட்டனர்.

மேலும் மாணவியைப் பிடித்து ஆட்டுவிக்கும் பேயானது தலைதெறித்து ஓட வேண்டும் என்று துடைப்பக் கட்டையால் அம் மாணவியை பலமாகத் தாக்கியுள்ளனர். அடித்துத் துன்புறுத்திய அவர்கள் ‘யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று மாணவியைக் கடுமையாக மிரட்டியும் உள்ளனர்.

சக மாணவிகள் ஒருங்கிணைந்துச் செய்த இக் கொடுமையைக் சகித்துக் கொள்ள முடியாத அந்த மாணவி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி மாணவிகள் 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனராம்.

மகாராட்டிரா மாநிலத்தில்…

இதுபோன்றதொரு நிகழ்வு மகாராட்டிரா மாநிலத்திலும் நடந்துள்ளது. (செப்.2026) அங்குள்ள அமராவதி மாவட்டத்தில் உள்டோமா கிராமத்தில் அரசுப் பழங்குடியின மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப் பள்ளிக்கென்று பெண்கள் விடுதியும் உள்ளது. அந்த விடுதியில் தங்கி வசித்து வருவதாகக் கூறப்பட்ட பேய் அதே விடுதியில் இருந்து வந்த மாணவிகள் சிலரைப் பிடித்துக் கொண்டு விட்டதாக சக மாணவிகள் சிலருக்கு பலத்த நம்பிக்கை உதயமானது. இதனால் அந்த விடுதியில் தங்கிப் பயின்று வந்த 850 மாணவிகளில் 610 பேர் விடுதியிலிருந்து தங்கள் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனராம்!

இந்தப் புகாரினைத் தொடர்ந்து, முறைப்படி மாநில அரசும், அந்தப் பழங்குடியின மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும் பள்ளியில் ஆய்வு செய்தனர். அதிகாரிகள் அந்தப் பள்ளியில் பேய் என்று எதுவும் இல்லை என்று மாணவிகளிடம் தெளிவுபடுத்தினர். மாணவிகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பயம் காரணமாக அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக் கப்பட்டது.

ஆனால், இவ்வளவுத் தெளிவுப்படுத்திய பின்பும், கிட்டத்தட்ட 350 மாணவிகள் விடுதிப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. விடுமுறைகள் காரணமாக அவர்கள் வராமல் இருக்க வாய்ப்புள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும் பேய் பயம் காரணமாகவே அவர்கள் விடுதிக்கு வரவில்லை என்றும் தெரியவந்தது.

உத்வேகம் தந்த மாவட்ட ஆட்சியர்

மாணவிகளின் பயத்தைப் போக்குவதற்கு என்ன செய்வது என்று கல்வித்துறையின் அதிகாரிகளும், காவல் துறையினரும் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். இதன்படி அமராவதி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் யேரேகர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நிகேதன் கதம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அப்பள்ளியின் விடுதிக்குச் சென்றனர். இரவு முழுவதும் அந்த விடுதியில் தங்கினர். அம் மாணவிகளுடன் இரவு உணவு உட்கொண்ட அரசு அதிகாரிகள், அவர்களது மூட நம்பிக்கையைக் களையும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடினர்.

மாணவிகளுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் யேரேகர் கூறியவை அவர்களுக்குப் புதியதொரு உத்வேகத்தைத் தருவதற்குக் காரணமாக அமைந்தது.

“நான் சிறுவயதில் மாவட்ட ஆட்சியர் ஒருவரைப் பார்த்து அவரைப் போன்று ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்போது அதை நான் சாதித்துக் காட்டியுள்ளேன். முயற்சி செய்தால் நீங்களும் எங்களைப் போன்ற நிலைக்கு வரமுடியும்.

பழங்குடியினர் சமூகம் பேய்களுக்குப் பயப்படுபவர்கள் அல்ல. காடுகளில் புலிகளையும், கரடிகளையும், கொடிய மிருகங்கள் பலவற்றையும் எதிர்த்துப் போராடியவர்களே பழங்குடியினர் ஆவர். நீங்கள் பிர்சா முண்டா, தாந்தியா பில் போன்றோரின் வழித் தோன்றல்கள். உங்கள் வாழ்க்கைக்குள் மூடநம்பிக்கையை அனுமதிக்காதீர்கள். அறிவியலையும், கல்வியையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்” என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இதனால், அரசு அதிகாரிகள் ஒன்றுகூடி எடுத்த இம் முயற்சியினால் மாணவியரது பயம் முற்றிலுமாக நீங்கியது. அதிகாரிகளிடம் மாணவிகள் தங்களது சந்தேகங்களைக் குறிப்பிட்டு, விளக்கங்களைக் கேட்டறிந்தனர். மாணவிகள் தங்கும் விடுதியில் நிலவிய நெருக்கடியைக் குறைக்கும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட விடுதியையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

பட்டுக்கோட்டையார் தந்துள்ள பாடம்!

அறிவை விரிவாக்கும் கல்வியைக் கற்கின்ற அதே நேரத்தில் மாணவியர் இவ்வகைக் குருட்டு நம்பிக்கைக்கு ஆட்பட்டது பெரிதும் கவலையுறச் செய்வதே ஆகும். இதற்கு –

“வேப்ப மரம் உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க;
உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க;
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை –
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி நமக்களித்த இந்தப் பாடல் நல்லதொரு பாடமாகும்!

பழங்குடியினத்தின் தலைவர்களாகச் சிறந்து விளங்கிப் பாடுபட்ட பிர்சா முண்டா, தாந்தியா பில் ஆகியோர் அநீதிகள் களையப்படுவதற்கென்று துணிச்சலோடுப் போராடிய மாவீரர்கள் ஆவர்.

பிர்சா முண்டா

பிர்சா முண்டா தற்போதைய ஜார்க்கண்ட் (அன்றைய பீகார் / வங்காள மாகாணம்) மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாது என்ற கிராமத்தில் முண்டா பழங்குடி இனத்தில் 15.11.1875 அன்று பிறந்தவர் ஆவார்.

பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த புதிய காடுகள் மற்றும் நிலச் சட்டங்கள் பழங்குடியினரின் பாரம்பரியக் கூட்டு நில உரிமை முறையான ‘குண்ட்கட்டி’ (Khuntkatti) முறையை அழித்துச் சிதைவுறச் செய்தது. நிலங்கள் வெளி நபர்களிடமும் (திக்குகள் – Dikus), ஜமீன்தார்களிடமும் ஒப்படைக்கப்பட்டன. இதனால் பழங்குடியின மக்களின் நிலங்கள் பறி போயின. அவர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே அடிமைகளாக ஆக்கப் பட்டனர்.

பழங்குடியின மக்களின் பறிக்கப்பட்ட உரிமை களுக்காக ‘உல்குலான்’ (பெரும் கொந்தளிப்பு – பெரும் புரட்சி) என்ற ஆயுதமேந்திய கொரில்லாப் போராட்டத்தை பிர்சா முண்டா முன்னெடுத்து நடத்தினார்.

இவர் பழங்குடியின மக்களிடையே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு எதிராகக் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.

1900ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டிருந்த போது 9.6.1900ஆம் – நாளில் சிறையிலேயே உயிரிழந்தார். காலரா நோயால் இவர் இறந்துவிட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டாலும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

தாந்தியா பில்

தாந்தியா பில் 1840ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு நிமாத் (கண்ட்வா) மாவட்டத்தின் பந்தானா பகுதியில் பில் (Bhil) பழங்குடி இனத்தில் பிறந்தவர் ஆவார்.

பிரிட்டிஷ் அரசின் கடுமையான வரி வசூல், பழங்குடியின மக்களைச் சுரண்டி இம்சித்த உள்ளூர் வட்டியாளர்களின் கொடுமைகளுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்திப் போராடினார்.

காடுகளின் நிலப்பரப்பை நன்கு அறிந்திருந்த தாந்தியா பில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கருவூலங்களைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. பணக்காரர்களின் சொத்துகளையும் கொள்ளையடித்தார். கொள்ளையடித்தப் பணத்தையும், உணவுப் பொருள்களையும் பசியால் வாடிய ஏழை – எளிய பழங்குடியின மக்களுக்குக் கொடுத்தார்.

‘தாந்தியா மாமா’ என்று மக்கள் இவரை அன்போடு அழைத்தனர். இவருக்கு எதிராக நடத்தப்பட்ட சதியின் காரணமாகவும், துரோகத்தாலும் 1889ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு, 4.12.1889 அன்று ஜபல்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இவரது உடல் மத்தியப் பிரதேசத்தின் பாதல்பாணி ரயில் நிலையம் அருகே வீசப்பட்டது. இன்றும் அந்த இடம் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் மதிப்பிடமாக விளங்குகின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *