‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் 91 நாட்களில் 10 நாட்கள் மட்டுமே வேலை!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 01- கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் 91 நாட்களில் தொழிலாளர்களுக்கு சராசரியாக 10 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 150 நாட்கள் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த நிலை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன், 125 நாட்கள் வேலை முடித்த நலிவுற்ற மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வழங்கி மொத்தம் 150 நாட்கள் வேலை கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ‘வெற்றி 150’ திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால், திட்டம் தொடங்கி 91 நாட்கள் கடந்தும் சராசரியாக 10 நாட்கள் மட்டுமே வேலை கிடைத் துள்ளதாக கூறப் படுவது, அரசு அறிவித்த வேலை உறுதிக்கும் கள நில வரத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிப் படுத்தியுள்ளது.

பல பகுதிகளில் 4 முதல் 5 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே வேலை வழங்கப் படுவதாகவும், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு 5 அல்லது 6 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.மேலும், ஒரு பணித்தளத்தில் 50 தொழிலாளர்கள் வரை பணியாற்றிய நிலையில், தற்போது 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் சுமார் 80 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 12,480 ஊராட்சிகள் உள்ள நிலையில், 43 ஊராட்சிகளில் எந்தப் பணியும் உருவாக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஊராட்சிகளில் தொழி லாளர்களுக்கு 3 முதல் 4 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி ஊதியம் வாரந்தோறும் வழங்கப்பட வேண்டும், அதிகபட்சம் 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதற்கும் மேல் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் விதிமுறையும் உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இத்திட்டத்துக்காக ரூ.12,643 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மாநில அரசின் பங்கு ரூ.5,057 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தின் உச்சகட்ட காலங்களில் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திட்டப் பணிகள் 60 நாட்கள் வரை நிறுத்தப்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதுவும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், புதிய விதிமுறைகளுடன் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் ஆரம்பகட்ட செயல்பாட்டு சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  28.9.2026 அன்று மட்டும் மாநிலம் முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான பணிநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் வேலைவாய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 150 நாள் வேலை என்ற இலக்கை அறிவித்துள்ள நிலையில், முதலில் அடிப்படை 125 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்வதுடன், வேலைக்காக காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *