* தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து 5 மாதங்களில் மீண்டும் இத்தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது!
* இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்தத் தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களோ, அவரே கட்சி மாறி நிற்கின்றார்!
* வாக்களித்த உங்களை அவமதிக்கும் செயல் அல்லவா! மக்கள் வரிப் பணம் கரியாகலாமா?
சொன்னதையும், சொல்லாததையும் சாதித்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி! இப்பொழுது நடப்பது எல்லாம் ஆட்சியல்ல, காட்சி!
முன்பு செய்த தவறையே மீண்டும் செய்யாதீர்கள் –
உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், உங்கள் வீட்டிலும், நாட்டிலும் விளக்கெரியும்!
தாராபுரம், அக்.1 அய்ந்து மாதங்களுக்கு முன்பு இதே தாராபுரம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் யாரைத் தேர்ந்தெடுத்தீர்களோ, அவர், ராஜினாமா செய்து, கட்சி மாறி, தேர்தலில் நிற்கி றார். வாக்களித்த மக்களை இதைவிட அவமதிக்க முடியுமா? சென்ற முறை செய்த தவறை, வாக்காளர்களே இந்த முறையும் செய்யாதீர்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் – உங்கள் வீட்டிலும் விளக்கு எரியும், நாட்டிலும் விளக்கு எரியும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தாராபுரம் இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை
கடந்த 29.9.2026 அன்று மாலை 7 மணியளவில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து, தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அருமைப் பெரியோர்களே, அனைத்துக் கட்சி நண்பர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரி யோர்களே, அருமைத் தாய்மார்களே உங்கள் அனை வருக்கும் அன்பான வணக்கம்.
மறுபடியும் ஏன் ஓட்டுப் போடுகின்ற நிலைமை வந்திருக்கிறது?

இந்தத் தாராபுரம் தொகுதியிலே சென்ற முறை ஓட்டு போட்டவர்கள் உள்பட ஒரே ஒரு கேள்விக்கு நீங்கள் சிந்தித்து விடை காண வேண்டும். என்ன அந்த கேள்வி என்று சொன்னால், நண்பர்களே! உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுகிறேன். இதற்கு முன்னால் எத்தனை மாதத்திற்கு முன்னால் ஓட்டு போட்டீங்க? (கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்று மக்கள் பதில் சொன்னார்கள்).இப்பொழுது மறுபடியும் ஏன் ஓட்டுப் போடுகின்ற நிலைமை வந்திருக்கிறது?
இந்த இடைத்தேர்தல் என்பது
ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்!
இந்த இடைத்தேர்தல் என்பது வழக்கமான இடைத்தேர்தலில் இருந்து வித்தியாசமானதாகும். இந்தத் இடைத்தேர்தல், தாய்மார்கள் குறிப்பாக கவனிக்க வேண்டும். பொதுத் தேர்தலில் எல்லோரும் போட்டி போட்டு முடிவு வந்தது. ஆனாலும், இன்றைக்கு மறுபடியும் ஒரு இடைத்தேர்தல் வந்தது என்று சொன்னால், இயல்பாக இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவில்லை. மற்ற இடங்களில் இயல்பாக இடைத்தேர்தல் வருவதற்குப் பல கார ணங்கள் இருக்கும். ஆனால், இந்த இடைத்தேர்தல் என்பது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் ஆகும். இந்தத் திணிப்புக்கு யார் காரணம்? என்ன காரணம்?
நான்கு மாதத்திற்கு முன்பு ஓட்டுப் போட்டீங்க; வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர், எவ்வளவு நாளைக்கு இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்? அய்ந்து ஆண்டுகளுக்கு. இன்னொரு பக்கம் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் சரியாக முடிவு செய்திருந்தீர்கள் என்றால், இந்த அய்ந்து விரல் காட்டினால், உதய சூரியன்தான் வெற்றி பெற்றிருக்கும், அதிலொன்றும் சந்தேகமே இல்லை.

‘குதிரை பேரம்’ மிகப்பெரிய அளவுக்கு நடந்திருக்கிறது!
அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவேண்டிய இந்தத் தொகுதிக்கான தேர்தல், அய்ந்து மாதத்திலேயே தேர்தல் வருவதற்கு என்ன காரணம்? உங்களிடம் ஒரு கட்சியின் சார்பில் ஓட்டு வாங்கிக் கொண்டு, இன்னொரு இடத்தில் கொண்டு போய், முழுக்க முழுக்க அங்கே பதவி கிடைக்கும் என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கட்சியில் இருந்தும் விலகி, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
அவருக்கு அரசியல் பிடிக்கவில்லையா அல்லது வேறு காரணங்களா? தேர்தல் முடிவு வந்து 20 நாள்களில், சட்டப்பேரவைக்கு உள்ளே போன இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், ஏன் அந்தக் கட்சியில் நீடிக்க முடியவில்லை. ‘குதிரை பேரம்’ மிகப்பெரிய அளவுக்கு நடந்திருக்கிறது.
யாருடைய பணம்? மக்கள் பணம்,
உங்களுடைய பணம்!
எங்களுக்கு உடல் மொழியில் அக்கறை உண்டு. எதை வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நாங்கள் அல்ல. உடல் மொழி கூட ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒழுக்கத்தோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கம். அந்தத் தலைமையின்கீழ் இருக்கக்கூடிய ஓர் இயக்கம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். யார் பணம் செலவழிக்கப்படுகிறது? தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்? எத்தனைக் கோடி செலவாகிறது? இந்த இடைத்தேர்தல் இரண்டு தொகுதியில் நடைபெறுகிறது. எவ்வளவு செலவாகும்? யாருடைய பணம்? மக்கள் பணம், உங்களுடைய பணம் – நம்முடைய பணம்.
ஒரு பக்கத்திலே கஜானா காலி; இன்னொரு பக்கத்தில் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் வருகிறது என்று சொன்னால், இது அந்தக் கட்சிக்காரர்களுக்கு மட்டும் அவமானம் அல்ல; ஓட்டுப் போட்ட உங்க ளுக்குதான் மிகப்பெரிய சவால் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
என்ன அர்த்தம்?
ஒழுக்கத்தை மிஞ்சுவதுதான் மாற்றமா?
நான் எது வேண்டுமானாலும் செய்வேன்; நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னால், வாக்காளர்களாகிய உங்களுக்கு இந்த உணர்வு தெரிய வேண்டும். ஆகவேதான் நீங்கள் செய்யவேண்டிய வேலை என்னவென்றால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும் தெரியுமா? தண்டனை என்றால், ஜெயிலுக்கு அனுப்புவது இல்லை. தண்டனை என்றால், கடுமையாக இருக்கிற தண்டனை அல்ல; தண்டனை கொடுக்க வேண்டும்; யாருக்குக் கொடுக்க வேண்டும்? முதலில் பேரம் பேசி, கட்சி மாறிப் போனார்கள் பாருங்கள், அவர்களுக்குத் தண்டனை. அதற்கு அடுத்த தண்டனை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று தெரியுங்களா? முக்கியமாக யார் ஏற்பாடு செய்தார்களோ, யார் அவர்களை வரவேற்றார்களோ, யார் ஒழுக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சித் தலைமை இருந்தால், மாற்றம், மாற்றம், மாற்றம் என்று சொன்னீர்களே, அந்த மாற்றம் இதுதானா? இந்த ஒழுக்கத்தை மிஞ்சுவதுதான் மாற்றமா? ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் இருக்குமா?
ஆகவேதான், நான் வேறுவிதம் என்று சொல்லும் போது, இது ஒரு நல்ல வாய்ப்பு. இதே நேரத்தில், உதய சூரியனுக்கு நீங்கள் ஓட்டுப் போட்டு, வெற்றி பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தால், இந்த இடைத்தேர்தல் தேவைப்பட்டு இருக்காது. அப்பொழுது நீங்கள் செய்த தவறால்தான், வெற்றி பெற்ற கட்சியை விட்டு ஓடிப் போய், வேறு கட்சிக்குப் போகக்கூடிய வாய்ப்பு நடந்திருக்கிறது. அதைத்தான், ‘‘குதிரை பேரம், குதிரை பேரம்‘‘ என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இங்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வாங்குகிறீர்களே, அதற்கு யார் காரணம்?
‘திராவிட மாடல்’ ஆட்சி செய்த தி.மு.க.வின் சாதனை சாதாரணமா? இந்தத் தாய்மார்கள் எல்லாம் இன்றைக்கு மாதா மாதம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ வாங்குகிறீர்களே, அதற்கு யார் காரணம்? முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் காரணம் – திராவிட மாடல் ஆட்சி காரணம்.
நீங்கள் மாற்றம் என்று சொன்னீர்களே, அந்த மாற்றம் இதுதானா? மாற்றம் அல்ல நண்பர்களே, இப்பொழுது நடக்கிற ஆட்சி, மாற்றம் அல்ல; ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமல்ல, தடுமாற்றம். தடுமாற்றமும், ஏமாற்றமும் இணைந்த ஒரு சூழல்தான் இன்றைக்கு வந்திருக்கிறது. மறுபடியும் இன்னொருவர் வந்தால், எல்லா மாற்றமும் கெட்டுப் போய். நம்முடைய ஜனநாயகத்துக்கு வேலை இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நிலை வரும். அதற்கு உதாரணம், வேறு எங்கேயும் போகவேண்டிய அவசியம் இல்லை. என்ன குற்றம் செய்தார்கள்? மக்களாகிய நீங்களோ தி.மு.க.வை எதிர்க்கட்சியாக ஆக்கினீர்கள்; அதைப்பற்றி கவலைப்படவில்லை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும்
தி.மு.க. தன்னுடைய கொள்கையில்,
எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளாது
‘‘என்னுடைய ஆட்சியின் சாதனைகளை பற்றி, நான் நினைக்கிறேன்’’ என்று சொன்னார். சாதனை செய்த ஆட்சிக்கு, நீங்கள் வாக்களிக்கத் தவறினீர்கள். உங்களுடைய எண்ணமாக அது இருக்கலாம்; அதற்காகப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கையில், எல்லோரும் தவறு செய்வோம். ஆனால், அந்தத் தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு வரும்போது, அந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விடக்கூடாது. அந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. தன்னுடைய கொள்கையில், எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளாது.
நடிப்பு வேறு; உண்மை வேறு!
ஏனென்றால், அதற்கு ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொல்லக்கூடிய அந்தக் கட்டுப்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது, நண்பர்களே நீங்கள் சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி, சாதனைகளைச் சொல்லித்தான் அவர் ஓட்டுக் கேட்டார். ஆனால், என்ன சொன்னார்கள்? சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கிறதா? அங்கே பாருங்கள், அங்கே கொலை நடக்கிறதே, இங்கே பெண்களுக்கு அவமதிப்பு ஏற்படுகிறதே என்றெல்லாம் விதவிதமாக உருகுகிற மாதிரிச் சொன்னார்கள். அது நடிப்பு என்று பல பேருக்குத் தெரியாது. ஆனால், நடிப்பு வேறு; உண்மை வேறு.
எதை எதைக் குற்றம் என்று சொன்னார்களோ, அவையெல்லாம் இன்றைக்கு இந்த ஆட்சியில், பல மடங்கு நடந்துகொண்டிருக்கிறது!
அப்படி வருகிற போது நண்பர்களே, என்னா யிற்று என்று சொன்னால், நிச்சயமாக அந்தத் தடுமாற்றம் ஏற்படக்கூடிய சூழலை இன்றைக்குப் பார்த்திருக்கிறோம். வெகுமாற்றமாகவோ வரவேற்கத் தகுந்த மாற்றமாகவோ இந்த மாற்றம் அமையவில்லை, அதுதான் வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சி இருந்த போது, ‘திராவிட மாடல்’ ஆட்சி இருந்தபோது, உங்களுக்கு எல்லா திட்டங்களையும் அவர்கள் செய்தார்கள். எதைச் செய்யவில்லை? எல்லாத் துறைகளிலும் செய்தார்கள். இருந்தாலும் தோற்கடித்தார்கள் என்றால், அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுது என்ன பிரச்சினை என்றால், இந்த மாற்றம் என்ற பெயராலே வந்த பிறகு, நடக்க வேண்டிய காரியங்கள், எதை எதைக் குற்றம் என்று சொன்னார்களோ, அவை யெல்லாம் இன்றைக்கு இந்த ஆட்சி, பல மடங்கு நடந்துகொண்டிருக்கிறது.
ஒரே நாளில் மட்டும், எட்டுக் கொலை!
என்ன சொன்னார்கள், மு.க.ஸ்டாலின் ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று. அதற்காக தோல்வியைக் கொடுத்தார்கள் என்று சொன்னாலும், இப்பொழுது நடைமுறையில் தோழர்களே, என்ன நடக்கிறது என்று சொன்னால், இன்றைக்குச் சட்டம் – ஒழுங்குக்கு எப்படி இருக்கிறது? தாய்மார்களே சொல்லுங்கள், இன்றைக்கு கொலை, கொள்ளை இல்லாமல் இருக்கிறதா? இன்றைக்கு ஒரே நாளில் மட்டும், எட்டுக் கொலை.
நீங்கள் எல்லோரும் தொலைக்காட்சிப் பார்த்தி ருப்பீர்கள், அந்தத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும்போது எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. வேதனையாக இருக்கிறது என்று சொன்னால், நெல்லையில் கொலை – இரட்டைக் கொலை; சென்னை அய்ஸ்அவுசில் கொலை. மற்றவர்கள் மட்டுமல்ல, ஆளுங்கட்சிக்காரரே சென்னையில் கொலை; இன்னும் கேட்டால், நீதிமன்றத்திற்கு முன்னாலேயே கொலை. சராசரி நாள் ஒன்றுக்கு, நிறைய கொலைகள் நடக்கின்றன. இதைப் பற்றி இந்த ஆட்சிக்குக் கவலையே இல்லை.
எதிர்க்கட்சி என்றாலே,
கேள்வி கேட்பதற்காகத்தான்!
அதுகுறித்து கேள்வி கேட்டால், கேள்வி கேட்கிற இடத்தில் எதிர்க்கட்சி இருக்கிறது. எதிர்க்கட்சி என்றாலே, கேள்வி கேட்பதற்காகத்தான். ஆனால், அது பதில் சொல்ல வேண்டிய பொறுப்பாளர்கள் அதற்குப் பதில் சொல்லாமல், வேறு ஒரு கதையைச் சொல்லி, திசை திருப்பல் என்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
பெண் வழக்குரைஞரிடம் 15 லட்சம் ரூபாய்
லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்!
அந்த திசை திருப்பல் என்ற அரசியலுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ஒன்றை சொல்லுகிறோம். சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் இந்த ஆட்சியில் நாள்தோறும் கொலைகள்; பாலியல் வன்முறைகள்தான். அது மட்டுமல்ல மிக முக்கியமாக அடுத்து என்ன சொன்னார்கள்? ஊழல், ஊழலோ ஊழல்; என்று சொன்னீர்களே, ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் நாங்கள் என்று சொன்னீர்களே, ஊழலை என்ன ஒழித்திருக்கிறீர்கள்? வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். அதற்கு உதாரணம் சொல்கிறேன்; இன்றைக்குத் தொலைக்காட்சியில் வெளிவந்திருக்கின்ற செய்தியைப் பாருங்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசாங்க வழக்குரைஞர் பதவிக்கு மனு போடுகிறார்கள். ஆளுங்கட்சிக்காரர்கள் மனு போடுவார்கள். அப்படித்தான், அந்தக் கட்சியில் இருக்கின்ற பெண் வழக்குரைஞர் ஒருவர் மனு போடுகிறார். இப்பொழுது ஆட்சி செய்கிற கட்சியில் இருக்கின்ற முக்கியப் பொறுப்பாளர், அந்தப் பெண் வழக்குரைஞரிடம் 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றம் தலையில் குட்டு வைத்தது மாதிரி கேட்டது!
‘‘ஊழலை யார் செய்தாலும் விடமாட்டேன்’’ என்றெல்லாம் முதலமைச்சர் நன்றாக வசனம் பேசினாரே, அவர் என்ன செய்தார்? லஞ்சம் கேட்டவர்மீது எடுத்த நடவடிக்கை என்ன? அவருடைய கட்சிக்காரரை அழைத்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இன்றைக்கு அதற்குப் பதிலாக என்ன நடந்தது என்று சொன்னால், உடனடியாக நீதிமன்றத்துக்கு அந்தப் பொறுப்பு போனது. மதுரை உயர்நீதிமன்றம் தலை யில் குட்டு வைத்தது மாதிரி கேட்டது. இதுதான் ஊழலை ஒழிக்கின்ற யோக்கிதையா? இவர்கள் எல்லாம் சட்டத்தைக் காப்பாற்றுபவர்களா? என்று. உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேராக லஞ்ச ஒழிப்புத் துறைக்கே போயிருக்காங்க, இது ஓர் உதாரணம்.
ஆகவே, ஊழலைப்பற்றிச் சொன்னீர்கள்.
இந்த ஆட்சியில்
மின்சார அமைச்சர் அல்ல; மின்வெட்டு அமைச்சர்!
சரி, உதய சூரியன் ஆட்சி என்றால், ‘வெளிச்சம்’ என்று அர்த்தம். சூரியன் என்றால், என்னங்க அர்த்தம்? வெளிச்சம் என்று அர்த்தம். ஆனால், இப்பொழுது நாம் வெளிச்சத்திலேயா இருக்கிறோம். இல்லை வெளிச்சத்தை விட்டீங்களா? இப்பொழுது கூட நாங்கள் மின்சா ரத்தை நம்பவில்லை. இதுவரையில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், விவரம் தெரிந்த மக்கள் – மின்சார அமைச்சர்கள் தான் இதுவரையில் இருந்தார்கள் மின்சாரத் துறையில். ஆட்சி மாறி இருக்கலாம்; எந்த ஆட்சி வந்தாலும், மின்சாரத் துறைக்கு மின்சார அமைச்சர் என்று ஒருவர் இருப்பார். ஆனால், இந்த ஆட்சியில், ‘‘மாற்றம் மாற்றம்’’ என்று சொன்னார்கள் பாருங்கள், அது என்ன மாற்றம் என்றால், மின்சார அமைச்சர் அல்ல; மின்வெட்டு அமைச்சர் இருக்கிறார். அதுதான் மிக முக்கியம் மின்சார அமைச்சரை நியமிக்காமல், மின்வெட்டு அமைச்சரை நியமித்திருக்கிறார்கள்.
மின்வெட்டுக்கும், சொல்வெட்டுக்குமே
அமைச்சராக இருக்கிறார் அவர்!
இதுதாங்க, மாற்றம். நன்றாக நினைத்துப் பாருங்கள்; மாற்றமா? ஏமாற்றமா? தடுமாற்றமா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ஆகவே, அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, இன்றைக்கு மாற்றம் மாற்றம் என்ற பெயராலே மிகப்பெரிய ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அந்த அமைச்சருக்கு இரண்டு வேலை கொடுத்திருக்கிறார்கள். ஒன்று மின்வெட்டு; இன்னொன்று என்னவென்று கேட்டால், சொல்வெட்டு. அதாவது மின்வெட்டுக்கும், சொல்வெட்டுக்குமே அங்கே இருக்கிறார் அவர். மறுபடியும் ஆட்சி அவருக்கு நெல்வெட்டு. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
மின்சாரத் துறை அமைச்சரும், நீதிபதியும் பங்கேற்ற நிகழ்வில் மின்வெட்டு!
அதுமாதிரி ஒருவர், அமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். திமுககாரர்கள் பியூசை பிடுங்கிட்டாங்க. என்னய்யா அர்த்தம்? பியூசை எல்லா ஊரிலும், ஒரே நேரத்தில் பிடுங்க முடியுமா? சரி, மின்சாரத் துறை அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில், மின்வெட்டு ஏற்பட்டு, பேச முடியாத நிலை ஏற்பட்டதே, அங்கேயும் திமுககாரர்கள்தான் பியூசை பிடுங்கி விட்டார்களா?
தண்டனை யாருக்குக் கொடுக்க வேண்டும்? யார் இந்த ஆட்சியை நிர்வாகம் செய்கிறார்களோ, அவர்களுக்கு!
அப்படின்னா என்ன அர்த்தம்? இந்த ஆட்சியே பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கே தவிர, எரிகின்ற பல்பாக இல்லை. உதய சூரியன் வெளிச்சத்தில் இருந்தது. சூரியன் எப்பொழுதுமே வெளிச்சத்தில் இருந்தாலும், உங்களுக்கெல்லாம் தெரியும், அறிவியல் பூர்வமாக கிரகணம் வரும்; கிரகணம் நிரந்தரமாக இருக்காது. அது மாறும்; மக்களாகிய நீங்கள் நினைத்தால், மாற்ற முடியும். வேறு ஒன்றும் நீங்கள் செய்யவேண்டாம்; தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னேன் பாருங்கள், தண்டனை யாருக்குக் கொடுக்க வேண்டும்? யார் இந்த ஆட்சியை நிர்வாகம் செய்கிறார்களோ, அவர்களுக்கு. இது எல்லாவற்றையும் விட, இன்னொரு குற்றச்சாட்டு என்ன சொன்னார்கள்? வந்த உடனே வெள்ளை அறிக்கை – அறிக்கைதான் வெள்ளை, ஆனால் மனது வேறு விதமாக இருக்கிறது. காவி நிறம். காவி அறிக்கையாக இருக்கிறது. அந்த அறிக்கையை எப்படி விட்டார்கள் பாருங்கள், ‘‘மக்களே எத்தனைக் கோடி கடன் நம் தலைமேல் இருக்கிறது தெரியுமா? கஜானா காலி’’ என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு வந்தார்கள். ஆனால், கஜானாவை காலியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்று சொன்னால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கஜானாவை நிரப்ப வேண்டும். கஜானாவை எப்படி நிரப்ப வேண்டும்? தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் தாய்மார்களே! கஜானாவை எப்படி நிரப்ப வேண்டும்? வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்குரிய திட்டங்களைப் போடவேண்டும். தி.மு.க. ஆட்சி செய்ததை சாதனை அல்ல, வேதனை என்று சொன்னீர்கள். சரி, அதை வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம். அதற்காகதான் அவர்களுக்குத் தண்டனை கொடுத்துவிட்டோம். அவர்கள் வெற்றி பெறவில்லை. உங்களுக்கு வாய்ப்பைக் கொடுத்தார்கள். ஆனால், முழு நம்பிக்கை உங்கள் மேலே வந்திருக்கிறதா? மொத்தம் எத்தனை இடங்கள் உங்களுக்கு 107 இடம்தான்.
தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இருக்கலாம். ஆனால், இப்பொழுது சுதந்திரமாக அறுதிப் பெரும்பான்மை கொடுத்திருக்கிறார்களா மக்கள்? உங்களுக்கு. உங்களுடைய ஆட்சி நாற்காலி, ஆடாத நாற்காலியா? ஆனால், ஆட்டி விடவேண்டும் என்று எங்களுக்கு அவசியம் இல்லை. மக்கள் நினைத்தால், மிக முக்கியமாக மாற்றம் என்பது வந்தே தீரும்.
ஒன்று மின்வெட்டு;
இன்னொன்று அரிவாள் வெட்டு!
மிகத் தெளிவாகச் சொன்னார், திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நம்முடைய அருமை மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார். நல்ல வார்த்தை – இந்த ஆட்சியில், இரண்டுதான் முக்கியம். ஒன்று மின்வெட்டு; இன்னொன்று அரிவாள் வெட்டு. அதனால்தான், சுத்தி அரிவாள் சின்னம் உள்ள கட்சி, உங்களை ஏற்க முடியாமல், தனியாக நிற்கக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள். மக்களே, சிந்தித்துப் பார்க்கக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். மின்வெட்டு போன்றவைதான் இந்த ஆட்சியின் சாதனைகள்; மக்களுக்கு வேதனைகள்.
‘‘அம்மா கூழுக்கு அழுகிறாள்,
மகன் கும்பகோணத்தில் போய்
கோதானம் பண்ணுகிறான்!’’
கஜானா காலி என்று சொன்னீர்கள், காலியான கஜானாவை நிரப்பினால் என்ன? ஒரு பழமொழி உண்டு. ‘‘அம்மா கூழுக்கு அழுகிறாள், மகன் கும்பகோணத்தில் போய் கோதானம் பண்ணுகிறான்’’ என்பதுதான் அந்தப் பழமொழி. அது மாதிரி இவ்வளவுதான் வருமானம், அதற்குமேல் வழி இல்லை. இதோ வெள்ளை அறிக்கை பாருங்கள் என்று சொல்லிட்டு, தன்னுடைய அறையை மாற்றி அமைப்பதற்கு – கடற்கரையைப் பார்ப்பதற்கு, காற்று வாங்குவதற்கு கோடி கோடியாக பணம் செலவழித்துள்ளார் இன்றைய முதலமைச்சர். இதுவரையில், எத்தனை முதலமைச்சர் வந்திருக்கிறார்கள்? ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் அந்த அறை யைத்தான் பயன்படுத்தினார்கள். எல்லோரும் ஒவ்வொரு முறையும், முதலமைச்சருடைய அறையை மாற்றினார்களா? இப்பொழுது இவர் ஏன் மாற்றுகிறார்? அதற்கு நான்கு கோடி ரூபாய் செலவு. இதுதான் வருவாயைப் பெருக்குவதா? இதுதான் ஆட்சியா? இதைக் கேட்க வேண்டியவர்கள் யார் இருக்கிறார்கள்? எதற்காக செய்தார் என்றால், ஜோசியர் சொல்லிவிட்டார், அதனால் செய்கிறார்களாம். அந்த ஜோசியர் முதலிலேயே சொல்லலாமே, இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவோமா, இல்லையா? என்று அந்த ஜோசியரிடமே கேட்கலாமே!
எனவே, நீங்கள் நினைக்கலாம் அய்யா, உங்கள் ஜோசியம் பலிக்காது. நாங்கள் இந்த முறை தவறு செய்யமாட்டோம். நிச்சயமாக உதய சூரியனுக்கு, வாய்ப்புக் கொடுப்போம் என்று மக்கள் சொல்வார்கள்.
காலையில் ஒரு உத்தரவு வரும்;
மாலையில் உத்தரவு ரத்து என்று வரும்!
ஜோதிடர் சொன்னார், அதில் கூட ஒரு நிலையான எண்ணம் உண்டா? இப்பொழுது பார்த்தீர்கள் என்றால், காலையில் ஒரு உத்தரவு வரும்; மாலையில் உத்தரவு ரத்து என்று வரும். உத்தரவு போட்டவர் யார் என்று தெரியாது; ரத்து செய்தவர் யார் என்று தெரியாது. இது ஆட்சியா, காட்சியா? இது சினிமாவுக்குச் சரியாக இருக்கலாம், திரைப்படத்தில் வரும், அதுதான் கிளைமாக்ஸ் சீன் அப்படி என்று வைத்திருப்பார்கள். அதிலேயே உங்களுக்குத் தெரியும். டப்பிங் என்ற ஒரு வார்த்தை. வில்லனை அடிப்பார் ஹீரோ, நம்முடைய இளைஞர்களுக்கெல்லாம் என்ன ஆசை தெரியுங்களா? திரைப்படத்தில் ஹீரோவை 200 பேர் வந்து அடிப்பார்கள்; உடனே ஹீரோ கீழே விழுவார்; மீண்டும் எழுந்து அவர் கையைத் தூக்கியவுடன், அவரை அடிக்க வந்தவர்கள் கீழே விழுந்துவிடுவார்கள். இவையெல்லாம் உண்மை என்று நினைத்துக்கொண்டு, கை தட்டுகிறார்கள்; ஏன் அவர் கீழே விழுந்தார்? ஏன் ஹீரோ அடித்தார்? இரண்டையும், அந்தத் திரைப்பட இயக்குநர் சொல்லியிருப்பார். கீழே விழ வேண்டும், இவர் எழுந்திருக்க வேண்டும் என்று. திரைப்படக் காட்சியை ரசிக்கலாம். அவர் நல்ல நடிகராக இருக்கலாம்; அவருடைய நடிப்புத் திறமை நன்றாக இருக்கலாம். ஆனால், நடிப்புத் தொழிலை விட்டுவிட்டுத்தானே, சினிமாவை விட்டுவிட்டுத்தானே அரசியலுக்கு வந்தார் அவர். இங்கே வந்து அந்தத் தொழிலைத் தொடரலாமா?
ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லவேண்டும்!
எனவேதான், மக்களாகிய நீங்கள் தெளிவாகச் சொல்லவேண்டும்; இங்கே வந்திருக்கிற மக்கள் மட்டும் போதாது; ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லவேண்டும். சென்ற முறை தவறு செய்ததுபோல் இந்த முறை செய்யக்கூடாது. கஜானா காலி என்று சொன்னார்கள் அல்லவா, இப்பொழுது என்ன நடக்கிறது? நான்கு கோடி ரூபாயில், முதலமைச்சர் அறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி, உங்களுக்கெல்லாம் தெரியும்; சட்டமன்றம் – அந்த சட்டமன்றத்தில் இடம் இல்லை என்று காரணம் சொல்லி, அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்த போது, என்ன சொன்னார்கள் என்றால், நிறைய ஒழுகுகிறது; பழைய வாடகைக் கட்டடம் என்று சொன்னார்கள். பிறகு, கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், அற்புதமான ஒரு சட்டமன்றத்தைச் சிறப்பாகக் கட்டி, திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி அம்மையார் முன்னிலை வகிக்க, பிரதமர் மன்மோகன் சிங் புதிய சட்டமன்றத்தைத் திறந்து வைத்தார். அடுத்து வந்தவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், உடனே அதை மாற்றினார்கள். அது மட்டுமல்ல, அந்தக் கட்டடம் மருத்துவமனையாகி இருக்கிறது.
எல்–நினோ என்ற மிகப்பெரிய ஆபத்து!
இப்போது உள்ள சட்டமன்றம் போதுமானதாக இல்லை. ஆகவே, புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக சென்னை பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். மீனவர்கள் வசிக்கக் கூடிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அந்த இடம் – கடல் எந்த நேரத்திலும் கொந்தளிக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கிறது. உங்களுக்குத் தெரியும், வெப்பம் எங்கே பார்த்தாலும் கடுமையாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றால், இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஒன்று எல்–நினோ; அதனால் கால நிலை மாற்றம் ஏற்படுகிறது. பெரிய அளவுக்கு கோவிட் வந்ததோ, அதே மாதிரி மிகப்பெரிய ஓர் ஆபத்து – அதிலும், சூப்பர் எல்–நினோ என்று வரக்கூடிய அளவுக்கு வந்தால், பாதிக்கப்படக்கூடியவை முதலில், கடலோரப்பகுதிகள்தான். அதுவும் மீனவ நண்பர்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். அவர்கள் வாழுகின்ற இடத்தில், புதிய சட்டமன்றம் கட்டப் போகிறோம் என்றார்கள். காரணம், ஜோசியர் சொல்லிவிட்டார். எல்லாமே, ஜோசியர் சொல்வது என்றால் என்ன அர்த்தம்? காமராஜர் ஒருமுறை சொன்னார், ‘‘நான் அகில இந்தியா முழுக்கப் போய்ப் பார்த்தேன். அங்கே இருக்கிறவங்க சட்டை போடுறதுக்குக்கூட, எந்தக் கலர்ல சட்டை போட்டா நல்லதுன்னு ஜோசியர்கிட்ட கேட்டுத்தான் போடுறாங்க!’’ என்று.
பிரச்சினைகளை, ஓர் ஆட்சியே உண்டாக்குகிறது!
சென்னை பட்டினப்பாக்கத்தில், 1,200 கோடி ரூபாய் செலவழித்து, கட்டடம் கட்டுவோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்கள் இன்றைக்குப் போராடக்கூடிய அளவில் இருக்கிறார்கள். எங்கேயாவது, பிரச்சினையை அவர்களே உண்டாக்குவார்களா? போராட்டத்தை அவர்களே உருவாக்குவார்களா? யாராவது நோயை அவர்களே வரவழைத்துக் கொள்வார்களா? ஆகவே, அந்த ஆட்சியனுடைய திறன் என்ன? ஆட்சியினுடைய தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதுதான் ஓர் ஆட்சியின் கடமை. பிரச்சினைகள் ஏற்படும், அதைத் தீர்க்க வேண்டியதுதான் அந்த ஆட்சியின் பணி. ஆனால், பிரச்சினைகளை, ஓர் ஆட்சியே உண்டாக்குகிறது. காரணம், தான் நினைத்ததுதான், நடக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த நிலைக்கு வரக்கூடாது.
நான்கு மாதத்தில் 20 ஆயிரம் கோடிக்குமேல் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்!
ஆகவேதான் நண்பர்களே! இந்த ஆட்சி பதவியேற்று நான்கு மாதத்தில், வெள்ளை அறிக்கை விட்டார்கள். முன்பு ஆட்சி செய்தவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார்களே, இவர்கள் என்ன கடன் வாங்காமல் இருக்கிறார்களா? இந்த நான்கு மாதத்தில் 20 ஆயிரம் கோடிக்குமேல் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிற்கு ஆதாரத்தோடு சொல்கிறோம். ஆகவே, அப்படிப்பட்ட நீங்கள் கடன் வாங்கினால், அது நல்லது; ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள் கடன் வாங்கினால், அது தவறா? காமராஜர் அடிக்கடி சொல்லுவார், ‘‘உன் வீட்டில் நடந்தால் கல்யாணம்; என் வீட்டில் நடந்தால் இழவா?’’ என்று. அது எப்படி நியாயமாக இருக்க முடியும்.
விவசாயிகள் திருவோடு ஏந்துகிறார்கள்!
ஆகவே, நீங்கள் கடன் வாங்கலாம்; அதுவும் எதற்குக் கடன் வாங்கியிருக்கீங்க? இருக்கிற சட்டமன்றம் போதாதென்று, புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக. இது மாதிரி ஏராளமான அளவுக்கு இருக்கிறது. யார்? எந்த மக்கள்? விவசாயிகள், தாராபுரம் பகுதிகள் எல்லாம் விவசாயப் பகுதிகள். நிறைய விவசாயிகள் இருக்கிறீர்கள். அந்த விவசாயிகளிடம் என்ன வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார்? முழுக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்றார். அடுத்த பிறவியில் நான் விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்று வசனம் எல்லாம் சொன்னார். அது கேட்பதற்கு நல்லாதான் இருந்தது. ஆனால், இந்தப் பிறவியை முதலில் பாருங்கள்; அடுத்த பிறவி என்பது பிறகு இருக்கட்டும். முதலில், இந்தப் பிறவியில் என்ன செய்தீர்கள்? விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த விவசாயிகள் எல்லாம், கோட்டையை நோக்கிப் போகப் போகிறோம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். நேற்று, ஈரோட்டில்தான் முடிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், அந்த விவசாயிகளை கைது செய்கிறீர்கள். அந்த விவசாயிகள் திருவோடு ஏந்துகிறார்கள். ஓர் ஆட்சி சரியில்லை, நாங்கள் வந்தால், பெரிதாகச் செய்வோம் என்று சொன்னாரே, அதைச் செய்தாரா? என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறவர்கள் ஏன் அவர்கள் இந்த இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிடுகிறார்கள்?
ஆகவே, விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்; அதேபோல பழைய ஓய்வூதியம் முறை சரியாக நடக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா? ஒவ்வொன்றையும் நீங்கள் ஆழ மாகச் சிந்திக்க வேண்டும். எனவே, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. போட்ட ஆணைகள் திருத்தப்படவில்லை. அதுதான் மோசம். நாங்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுக அப்படித்தான் சொல்லுவார்கள் என்று சொல்லலாம்; ஆனால், உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஏன் அவர்கள் இந்த இடைத்தேர்தலில் தனியாகப் போட்டியிடுகிறார்கள்? ஏன் அந்த அவசியம் வந்தது?
தாசில்தார், ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் அந்த உத்தரவு போடுவாரா?
கூட்டணி என்பது உதவி செய்வது. உதவி செய்கிறவர்களின் பைகளில் கையை விட்டால், என்ன அர்த்தம்? வேறொரு இடத்தில் கையை விட்டால்கூட பரவாயில்லை. திடீரென்று ஒரு உத்தரவு வருகிறது; யார் யாரெல்லாம் கம்யூனிஸ்ட் மாணவர்கள், பட்டியல் தயார் செய்யுங்கள் என்று. இதைக் கண்டித்துப் போராட்டம் தொடங்கியவுடன், ‘அய்யோ நான் உத்தரவு போடவில்லை’’ என்கிறார்கள். தாசில்தார், ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் அந்த உத்தரவைப் போடுவாரா? அப்படி தாசில்தார் உத்தரவு போடுகிற அளவுக்கு வந்தது என்றால், ஆட்சி உங்க கைகளில் இல்லை என்றுதான் அர்த்தம்.
இப்படி ஒவ்வொரு துறையிலும் சாக்குப் போக்கைத்தான் சொல்லுகிறார்களே தவிர, நீக்குப் போக்காக நடந்து கொள்ளத் தெரியவில்லை அவர்க ளுக்கு. தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பில்லை. காரணம், ஏற்கெனவே சொன்னதுபோன்று, சினிமாவில், டூப் போடலாம்; ஆனால், ஆட்சியில் டூப் போட முடியாது. ஆகவே, தாய்மார்கள் இதை நன்றாகக் கவனத்தில் கொள்ளவேண்டும். வெளிச்சத்தில் இருந்த தமிழ்நாடு, இருண்ட கட்டத்திற்கு வந்திருக்கிறது என்று சொன்னால், இது மின்சாரத்துக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு துறையிலும் இதே நிலைதான்.
திராவிட மாடல் ஆட்சிதான் –
திராவிடப் பொற்காலம்!
திமுக ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவே ஒரு முதலமைச்சரைப் பாராட்டியிருக்கிறது என்றால், அது மு.க.ஸ்டாலின் அவருடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான்! அது ஒரு ‘திராவிடப் பொற்காலம்.’ இன்றைக்குப் பாருங்கள், அன்றைக்குச் சொன்னோம் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில், ஏமாற்று வேலை – வாக்குத் திருட்டு நடந்திருக்கிறது. அதனைத் தடுக்க முதல் முயற்சி எடுத்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், இந்த ஆட்சியில், எல்லாவற்றிற்கும் ஒரு தீர்மானம் போடுகிறார்கள் – சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போடுகிறார்; ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து பக்கத்தில் உட்கார்ந்த உடனே, அதை மாற்றிப் பேசுகிறார்கள். டில்லிக்குச் சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது நியாயமா?
எதிர்க்கட்சியாக இருக்கின்ற
தி.மு.க. கேள்வி கேட்குமே என்பதால்தான்!
எனக்கு ஆட்சியைப் பற்றிக் கவலையி்லலை; எனக்குக் கொள்கைதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம். தந்தை பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில், மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி இருந்தது என்று சொன்னால், மக்கள் மனதில் இன்னமும் மு.க.ஸ்டாலின் தான் ஆளுகிறார். அது மட்டுமல்ல தாய்மார்களே, மாதாமாதம் 1000 ரூபாய் வாங்குகிறீர்கள் அல்லவா, இது யாரால் வந்தது? 1000 ரூபாய் உங்களுக்கு எப்படி வருகிறது என்றால், தராவிட்டால், ஸ்டாலின் என்பவர், கேள்வி கேட்பாரே, எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க. கேள்வி கேட்குமே என்பதால்தான்.
தேர்தலுக்கு முன்பு என்ன வாக்குறுதி கொடுத்தீர்கள்? விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள், தாய்மார்க ளுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுத்தீர்கள்? மாதாமாதம் 2500 ரூபாய் தருவோம் என்று சொன்னீர்களே, அதன்படி கொடுத்தார்களா? என்றால், இல்லை. அதேபோல, ஆறு சிலிண்டர் நாங்கள் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால், இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? மூன்று சிலிண்டர் தருவோம் என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாள் போனால், பெரிய (ஜீரோ) சிலிண்டர்தான். ஒருவேளை சிலிண்டர் கொடுத்தால் கூட, அதனுள்ளே கேஸ் இருக்குமா என்பது சந்தேகம்தான். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆகவேதான் நண்பர்களே! நீங்கள் தெளிவாக சிந்தித்துப் பாருங்கள். ஆட்சி என்பது வெறும் காட்சியாக இருக்கக்கூடாது. ஆட்சி என்பது மக்களுடைய மீட்சியாக இருக்க வேண்டும். அந்த உணர்வைத்தான் ஜனநாயக அடிப்படையிலே சொல்கிறோம். அப்படிப்பட்ட நிலையிலே, எங்களுக்காக ஓட்டுப் போட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் சுயமரியாதையை, உங்களை அலட்சியப்படுத்தி, உங்களை ஏமாற்றினார்கள் அல்லவா, அதற்காக நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்; அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுங்கள்; அந்தத் தண்டனை கொடுங்கள், இந்தத் தண்டனைக் கொடுங்கள் என்று சொல்லவில்லை.
உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நீங்கள், ஒரு விரல் புரட்சி இருக்கிறது பாருங்கள், முதலில் போய் அழுத்திவிட்டோம் என்று சொன்னீர்களே, அதை மறுபடியும் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், நேராக வாக்குச் சாவடிக்குப் போங்கள்; வாக்குப் பெட்டியில், சுகன்யா என்ற பெயரும், பக்கத்திலேயே உதய சூரியன் சின்னம் இருக்கும். அதைப் பார்த்து, பொத்தானை அழுத்துங்கள். பச்சை விளக்கு எரியும், கையை எடுத்துவிடாதீர்கள்; ஏனென்றால், ஏற்கெனவே பச்சை விளக்கு எரிகிற மாதிரி காட்டிவிட்டு, என்னவோ செய்திருக்கிறார்கள்.
நீங்கள் தெளிவாக உதயசூரியனுக்கு வாக்களித்தால், அங்கே மட்டும் விளக்கு எரியாது தோழர்களே, தாய்மார்களே உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். இருட்டும் போகும், மீண்டும் உதயசூரியன், மீண்டும் உதய சூரியன், மீண்டும் வரும் என்பதைக் கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்!
மறவாதீர், உங்கள் வேட்பாளர் சுகன்யாவை!
–இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.
