புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழாவில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சிறப்புரை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன பகுத்தறிவுக் கைத்தடிதான் ஆசிரியர்!
தந்தை பெரியார் என்கிற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47 தான் ஆசிரியர்!
நடமாடும் ‘திராவிடப் பல்கலைக்கழகம்’ ஆசிரியர்!
இந்த வயதிலும் நம் எதிரிகளுக்கு மட்டும் அதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறார் நம்முடைய ஆசிரியர்!

சென்னை, செப்.30 தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன பகுத்தறிவுக் கைத்தடிதான் ஆசிரியர் அய்யா அவர்கள்! தந்தை பெரியார் என்கிற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47  தான் ஆசிரியர் அவர்கள். திராவிடம் என்கிற கப்பல் வலிமையாக இருக்கிறது. அதைச் செதுக்கிற மாலுமியாக தளபதி அவர்கள் இருக்கிறார்கள், வழிகாட்டுவதற்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கப்பலை யாரும் அசைக்க முடியாது, எந்தப் புயலும் வீழ்த்தவே முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு பெரும்படையின் வடிவமாக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். இந்த வயதிலும் நம் எதிரிகளுக்கு மட்டும் அதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறார் நம்முடைய ஆசிரியர். ஆசிரியரைப் பற்றி நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கலாம். நாவுக்கரசர், நற்றமிழ் வித்தகர், நடமாடும் திராவிடப் பல்கலைக்கழகம் நம்முடைய ஆசிரியர் அவர்கள் என்றார் மேனாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்கள்.

Contents

‘இனமானம் காத்த ஏந்தல்
தந்தை பெரியார்’ புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழா!

கடந்த 21.9.2026 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பும் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ என்ற புத்தக அறிமுக விழா, திராவிட இயக்க ஆய்வாளரான அருமைத் தோழர் க. திருநாவுக்கரசு அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பாராட்டுவிழாவில், நூலினை வெளி யிட்டு,  ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

புதுச்சேரி தேர்தல் பணியிலிருந்து முடித்து வரு வதற்கு சற்று காலதாமதம் ஆயிற்று. அதற்காக ஆசிரி யரிடமும், உங்களிடமும் மன்னிப்புக் கோரி, இந்த இனிய நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றி அமர்ந்திருக்கிற பாவலர் மீனாட்சி சுந்தரம் அவர்களே, அறிமுக உரை ஆற்றியிருக்கிற என்னுடைய அருமை அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இங்கு விருதி னைப் பெற்று ஏற்புரை யாற்றி அமர்ந்திருக்கிற திராவிட இயக்கத்தினுடைய கலைக்களஞ்சியமாக திகழ்கிற என்னுடைய ஆருயிர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களே, உரையாற்றி அமர்ந்திருக்கிற என்னுடைய அருமைத் தம்பி நா. எழிலன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு செய்து கொண்டி ருக்கிற பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் நன்றி கலந்த வணக்கம்.

ஆசிரியர் எனக்குச் சொந்தக்காரர்,
பக்கத்து வீட்டுக்காரர்!

நான் மணக்கோலம் பார்க்க வந்தவன், என்னை மணமகனாக ஆக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் எதைப் பேசுவது, எதைத் தொடுவது, எதை விடுவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆசிரியர் எனக்குச் சொந்தக்காரர், பக்கத்து வீட்டுக்காரர். அதனால் அந்த அடிப்படையிலேதான் என்னைக் கூப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.

 ‘‘மதம், மனிதனுக்கு அபின் போன்றது’’ எனது கல்லூரி நாள்களில் சுவரெழுத்து எழுதியவன்!

இங்கே என்னுடைய அருமை அண்ணன் அவர்கள் சொன்னார், திருநாவுக்கரசு சொன்னார், ‘‘தம்பி விருது கொடுத்திருக்கார்’ என்று.  இந்த விருது கொடுப்பதற்கு எனக்கு நல்ல தகுதி இருக்கிறது. 1969 ஆம் ஆண்டு சென்னையில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சாய்பாபா  எல்லா இடங்களிலும், லிங்கம் வரவழைப்பது, விபூதி கொடுப்பது போன்றபெரிய வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்தார்.  கல்லூரியில், கருப்புச் சட்டை அணிந்து  நாங்கள் மிக வேகமாக இருப்போம்.  இலங்கையிலிருந்து டாக்டர் கோவூரை அழைத்து வந்து, விழா நடத்தினோம். அவர் கடவுள் மறுப்பாளர், மிகத் தீவிரமானவர்.  நாங்களும் அதற்குச் சளைக்காத அளவிற்கு, ‘‘மதம், மனிதனுக்கு அபின் போன்றது’’ என்று  சுவரில், இரவு நேரம்  12 மணிக்கு மேல் தார்ச் சட்டியை எடுத்துக்கொண்டு போய், ரயில்வே ஸ்டேஷன் ஓரமாக இருக்கிற சுவரில் எழுதுவோம்.

டாக்டர ்கோவூரை அழைத்துவந்து,
கல்லூரியில் விழா நடத்தினோம்!

அப்போது கோவூர் அவர்கள் பங்கேற்ற விழாவிற்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்தோம். மாணவர்கள் பலரும் அங்கே அமர்ந்திருந்தோம். அப்பொழுது டாக்டர் கோவூர் சொன்னார், ‘சாய்பாபா லிங்கம் எடுக்கிறார்; தம்பி இங்கே வா’’ என்று  என்னை அழைத்தார். ‘‘உனக்கு லிங்கம் எடுக்கப் பிடிக்குமா? விபூதி கொடுக்கப் பிடிக்குமா?’’ என்று கேட்டார். ‘‘லிங்கம் எடுப்பதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று சொல்லிட்டு, விபூதி கொடுங்கள்’’  என்றேன். எனக்கு விபூதி கொடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். இன்றைக்குக்கூட, நான் உங்கள் எல்லோருக்கும் விபூதி கொடுப்பேன். எனக்கு எல்லாம் தெரியும்.

டாக்டர் கோவூர் சொன்னார், ‘‘விபூதி கொடுக்கலாம், லிங்கம் கொடுக்கலாம், என்ன நீங்கள் எல்லாம் போய்க் கேட்கணும் என்றால், ஒரு மோட்டார் சைக்கிள் கேளுங்கள். சரி அது கூட வேண்டாம், ஒரு பூசணிக்காய் கொடுக்கச் சொல்லுங்கள். இதை மட்டும் நீங்கள் போய்க் கேளுங்கள்’’ என்று சொன்னார்.

மிக மிக மிக மிகத் தீவிரமாக இந்த இயக்கத்திலே இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த நான், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவர் அமைப்பாளராக இருந்தேன்.

மின்னலை விழுங்கி, மின்சாரத்தைக் கொப்பளிக்கும் தந்தை பெரியாரின் இதயத் துடிப்புகளே!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என்கிற இந்த மூன்று பேரிடத்திலே பயின்றவன் நான். இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

முத்துக் கடல் பதித்து

மூன்று நெறி வளர்த்து

கற்றுக் கலை மிகுந்த தாயகமே,

கத்துங்கடல் மீது

களங்களில் விளையாடும்

காவலன் தென்பாண்டி மண்டலமே,

நதியில் விளையாடு

தென்னக மடியில் தவழ்ந்த

தமிழ்த்தாயின் தலைவர்

ஆசிரியர் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சேர, சோழ, பாண்டிய வம்சத்தில் வந்த அன்பு சொந்தங்களே, வரலாற்றுத் தங்கங்களே, சிகரங்களைச் செதுக்குகிற சிங்கங்களே, காற்றோடு கைகொடுக்கும் கடல் நெருப்புகளே, மின்னலை விழுங்கி மின்சாரத்தைக் கொப்பளிக்கும் தந்தை பெரியாரின் இதயத் துடிப்புகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.

அடலேறு மொழி தமிழா,

இன்ப கடலேறு தனித்தமிழாய்,

சோலை மடலேறு சுவைத் தமிழாய்,

உடலேறி உயிரேறி வந்திருக்கிற உங்களை எப்படி வணங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

தந்தை பெரியார் என்கிற சூரியப் பிரதேசத்தை ஒரு மின்மினி வார்த்தைகளால் அடியேன் பேச வந்திருக்கிறேன். ஏனென்றால் நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம். இந்தத் தத்துவத் தலைவனை ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சி எப்படிப் பாருங்கள். கடுமையான மழை, நான் வரும்போது நிறைய முறை கைப்பேசியில் தொடர்பு கொண்டேன். ‘‘மழையாக இருக்கிறது, மழையாக இருக்கிறது’’ என்று நான் சொன்னேன்.

மழையோ, காற்றோ நிகழ்ச்சி நடந்தே தீரும் என்று சொல்லி, இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வானம், வானவிலுக்கு வளைகாப்பு நடத்துகிற ஒரு வசந்த காலத்தில், அய்யா அவர்கள் இந்த நிகழ்ச்சி இங்கு அற்புதமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இந்த ஒரு நூல் போதும்!

செந்தமிழ், செம்மாப்புடைய மாலை நேரம், அத்தனை பேர் நெஞ்சிலும் தந்தை பெரியார் நிறைந்தி ருக்கிறார்களே. பெரியாரைப் பற்றிய இந்த நூலை பார்த்தீர்கள் என்றால், இது மாதிரி ஒரு நூல் வந்து, 1000 நூல்கள் வந்தாலும், இந்த நூலுக்கு ஈடாகாது. ஏனென்றால், தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இந்த ஒரு நூல் போதும்.

இந்த ஒரு நூல் போதும், அவ்வளவு செய்திகளையும் நம்முடைய தங்கத்தலைவர், தமிழ்நாட்டின் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் அள்ளித் தந்துள்ளார்கள், கொட்டித் தந்துள்ளார்கள். பெரியாரைப் பற்றி எது வேண்டுமானாலும் ஒரு சாதாரணமானவன் பார்த்தால் கூட ‘கேட்வே ஆஃப் புக்.’ இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்லலாம். அப்படிப்பட்ட தலைவர் தந்தை பெரியாருடைய இதயத் துடிப்பை இந்த நூலிலே என்னால் பார்க்க முடிந்தது.

400 கோடி மக்களுக்கு வேண்டியதை,
8 கோடி மக்களின் மொழிகளில் பேசிய
ஒரு தத்துவத் தலைவர் தந்தை பெரியார்!

இதுதான் ரொம்ப மகிழ்ச்சி. 100 ஆண்டுகள் முந்தைய தமிழ்நாட்டின் வரலாறு இதிலே இருக்கிறது. அதெல்லாம் நாம் மறந்து போய்விட்டோம். நேற்றைய செய்தியை இன்றைக்கு நாம் மறந்து போய்விடுகிறோம். அப்படி இல்லை, 100 ஆண்டுக் காலம், நாம் எப்படி எல்லாம் இருந்தோம்? இந்தத் திராவிட இயக்கம் எதற்குத் தேவை? என்பதை இந்த நூலை நாம்,  வரிக்கு வரிப் படித்தாலே நமக்குப் புரியும்.  நான் முழுவதையும் படித்துப் பார்த்தேன். ஏனென்றால்,  தந்தை பெரியார் போன்று உலகத்தில் பார்க்கவே முடியாது. 400 கோடி மக்களுக்கு வேண்டியதை, 8 கோடி மக்களின் மொழிகளில் பேசிய ஒரு தத்துவத் தலைவர் தந்தை பெரியார். சொல்லிக்கொண்டே  இருக்கலாம்,

இந்த நூலைப் பார்த்தீர்கள் என்றால், ஒரு தொண்டனாகப் படித்தேன், ஒரு வாசகனாகப் படித்தேன், ஒரு விமர்சகனாகப் படித்தேன், ஒரு ஆசிரியர் என்பதால், ஒரு மாணவனாக இதைப் படித்தேன். இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் படிக்கிற பொழுதெல்லாம்  ஒவ்வொரு செய்தியும் கொட்டிக் கிடக்கிறது.

அதில் ஓரிடத்தில் சொல்கிறார், ஒரு நான்கு, அய்ந்து  செய்திகள், ‘‘கோயில் தெருவில் நாய் நடக்கலாம், தமிழன் நடக்கக்கூடாது’’ என்றபோது, ‘‘நான் நடப்பேன்’’ என்று முதல் அடி வைத்தவனுடைய கதை. ‘‘குளத்தில் நீர் எடுக்க மாடு வரலாம், மனிதன் வரக்கூடாது’’ என்றபோது, ‘‘நான் எடுப்பேன்’’ என்று குடத்தைத் தூக்கியவனின் கதை. ‘‘பெண் என்பவள் பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல, அவள் சரிபாதி அவள் தலைவி’’ என்று சொன்னவன் கதை. ‘‘தாலி என்பது மஞ்சள் கயிறு அல்ல, அது அடிமைச் சங்கிலி என்று அறுத்து எறிந்தவனின்’’ கதை. இப்படி ஒவ்வொன்றும், ஒவ்வொரு செய்திகளையும் இதில் படித்தோம் என்றால், நமக்கு வியப்பைத் தருகிற பல்வேறு வகையான நல்ல செய்திகளை எல்லாம் இதில் தந்திருக்கிறார்கள்.

நடமாடும் திராவிடப் பல்கலைக்கழகம்
நம்முடைய ஆசிரியர் அவர்கள்

ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்; இது ஒரு புத்தகம் இல்லை, ஒரு வரலாற்று ஆவணம். நம்மை பற்றி, நம்முடைய தலைமுறைக்கு, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுகிற ஒரு பெரிய நூலாக இந்த நூலை இங்கே தந்திருக்கிறார்கள், நம்முடைய ஆசிரியர் அவர்கள். ஆசிரியரைப் பற்றி நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கலாம். நாவுக்கரசர், நற்றமிழ் வித்தகர், நடமாடும் திராவிடப் பல்கலைக்கழகம் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன பகுத்தறிவுக் கைத்தடிதான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்!

காலால் நடக்கும் உலகை, தன் நாவால் நடந்த பெருமை!

நாக்குக்குச் சலங்கைக் கட்டி நளினமாக வழங்கி வருகிறார்கள் இன்றைக்கும்;

எண் அளந்து, எழுத்து அளந்து, இலக்கண இலக்கியம் அளந்து,

முன்னளந்து, பின்னளந்து, மூவாத் தமிழளந்து,

பெருந்தகை நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

கல்லடிபட்டாலும், சொல்லடிபட்டாலும் தன் காலடி மாற்றாத கருத்தின் தலைவர் தந்தை பெரியார், அந்தத் தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன பகுத்தறிவுக் கைத்தடிதான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள். தன்னுடைய 10 ஆம் வயதிலே பேசத் தொடங்கியவர். இந்தப் பெருமகனார்  83 ஆண்டுகள் கடந்து 93 ஆம் வயதிலேயும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

குத்தூசி குருசாமி அண்ணன் அவர்களுக்குப் பிறகு, ‘விடுதலை’யின் ஆசிரியராகப் பொறுப்பேற்று. கடந்த 64 ஆண்டுகளாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

விண்ணைத் துளைத்து, விடியலைப் பார்க்கத் துடிக்கும் ஒரு வேங்கைத் தமிழனாக நம்முடைய ஆசிரியர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழனுடைய இதயத்திற்கு. உதயத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிற பெருந்தகை!

இந்த வயதில் எப்படி இப்படி இருக்க முடியும் என்று தெரியவில்லை.  நானும், துரைமுருகனும் ஒவ்வொரு நாளும் இவரைப் பற்றி, ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டுத் தான் தூங்குவோம். எங்களுக்கு மூச்சிரைக்குது, நடக்க முடியவில்லை, இந்த வயதில். ஆனால், ஆசிரியர் ஓடுகிறார். எப்படி என்றுதான் தெரியவில்லை.  அதுவும் நாங்கள் நாள் முழுவதும் சாமி கும்பிட்டுக் கொண்டி ருக்கிறோம், எங்களுக்கெல்லாம் மூச்சு வாங்குகிறது, ‘சாமியே இல்லை’ என்று சொல்கிற இவர், எப்படி இவ்வளவு வேகமாக நடக்கிறார், அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழனுடைய இதயத்திற்கு. உதயத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிற பெருந்தகை,

கல்லைப் பிளந்து நீரெடுத்து. காற்றைப்பிழிந்து சாறெடுத்து, எரிமலைக்குச் சரிபரியாய் எழுந்து நிற்கிறார் நம்முடைய ஆசிரியர்,

தந்தை பெரியார் என்கிற
பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47  தான் நம்முடைய ஆசிரியர்
!

கிழக்கு வெளுக்கச் செய்து, கீழ்வானத்தைச் சிவக்கச் செய்து, விடியலைத் தந்து கொண்டிருக்கிற பெருந்தகை தந்தை பெரியார் என்கிற பீரங்கி பெற்றெடுத்த ஏ.கே.47  தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

இந்தத் தலைமுறை வள்ளுவரோடு வாழ்ந்ததில்லை, பெரியாரைப் பார்த்ததில்லை, அண்ணாவைக் கேட்டதில்லை, கலைஞரைக் கண்டதில்லை, அத்தனையும் ஒட்டுமொத்தமாக நம்முடைய தமிழர் தலைவர்  அவர்கள்  இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

திராவிடப் பெரும்படையின்
எழுச்சியாக இருக்கிறார் ஆசிரியர்!

திராவிடம் என்கிற கப்பல் வலிமையாக இருக்கிறது. அதைச் செதுக்கிற மாலுமியாக தளபதி அவர்கள் இருக்கிறார்கள், வழிகாட்டுவதற்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கப்பலை யாரும் அசைக்க முடியாது, எந்தப் புயலும் வீழ்த்தவே முடியாது. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு பெரும்படையின் வடிவமாக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள். திராவிடப் பெரும்படையின் எழுச்சியாக இருக்கிறார்கள், மனிதநேயச் சிந்தனையின் மலர்ச்சியாக இருக்கிறார்கள், அரசியல் துறையிலும், சட்ட அறிவிலும் முதிர்ச்சியாக இருக்கிறார்கள், இந்த வயதிலும் நம் எதிரிகளுக்கு மட்டும் அதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *