5 மாதத்தில் 5 முறை பின்வாங்கிய த.வெ.க. அரசு… முதலமைச்சர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் போதவில்லையா?

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 30- தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து இன்னும் அய்ந்து மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அரசு பிறப்பித்த அய்ந்துக்கும் மேற்பட்ட முக்கியமான அரசாணைகள் மற்றும் துறை சார்ந்த உத்தரவுகள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒரு அரசு முடிவெடுத்து வெளியிடும் உத்தரவுகளை, மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப் பின் உடனுக்குடன் திரும்பப் பெறுவது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதியதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லையா, அல்லது அதிகாரிகளின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டதா என்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகின்றன.

தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரம்: வெடித்த சர்ச்சை

இந்த விவகாரத்தில் அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது, தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) தொடர்பான முடிவுதான்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், பொதுத்துறைக்கு உட்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஆர்டிஅய் (RTI) சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. அதாவது, சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய தகவல்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்பதே இதன் பொருள்.

இந்த விவகாரம் செப்டம்பர் 27 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. முதலில் இதற்கு விளக்கம் அளித்த மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஜாதி மற்றும் மத மோதல்கள் தொடர்பான மிக முக்கியமான ரகசிய தகவல்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நியாயப்படுத்தினார்.

ஆனால், இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தவெகவின் கூட்டணிக் கட்சிகளே இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் வேறு வழியின்றி, அந்த அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெற்றது.

அய்ந்து மாதங்களில் பின்வாங்கிய 5 முக்கிய முடிவுகள்

விஜய் அரசு பொறுப்பேற்ற மே மாதத்திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக பல முடிவுகளை அரசு திரும்பப் பெற்றுள்ளது:

  1. ஜோதிடர் நியமனம்:கடந்த மே 12-ஆம் தேதி தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே, ஜோதிடரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) நியமிக்கப்பட்டார். பொதுவெளியில் பெரும் விமர்சனம் எழுந்ததால், அடுத்த நாளே அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.
  2. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பட்டியல் சர்ச்சை:ஆகஸ்ட் 18 அன்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் எம்.அய்யாசாமி என்பவர், அந்த தாலுகாவில் உள்ள சிபிஅய் மற்றும் சிபிஎம் கட்சியினரின் பெயர், முகவரியைச் சேகரிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்ச்சை வெடித்த உடனே அன்றைய நாளே அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அந்த அதிகாரி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  3. கல்லூரி மாணவர்கள் போராட்டம் தடை உத்தரவு:அதே ஆகஸ்ட் மாதத்தில், இடதுசாரி அமைப்புகள் மற்றும் பிற அரசியல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என உயர் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என எதிர்ப்பு கிளம்பியதால், ஆகஸ்ட் 19 அன்று அதுவும் திரும்பப் பெறப்பட்டது.
  4. செய்யாறு சிப்காட் நில எடுப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா கிராமத்தில், சிப்காட் தொழிற்பூங்கா 3-ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக 22.16 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த செப்டம்பர் 1-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படாது என விஜய் தேர்தல் காலத்திலும், ஆட்சிக்கு வந்த பிறகும் பலமுறை உறுதியளித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 18 அன்று இந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது.
  5. சட்டம்-ஒழுங்கு ஆர்டிஅய் விலக்கு: அய்ந்தாவதாக, சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஆர்டிஅய் விலக்கு அளித்த முடிவை அரசு திரும்பப் பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *