புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை!

12 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வருமான வரித்துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை; இவற்றை வைத்து
திராவிட இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள்!
ஆயிரம் நெருக்கடி காலத்தைப் பார்த்து வளர்ந்து, அதையும் தாண்டி நெருப்பாற்றிலே நீந்திய இயக்கம் திராவிட இயக்கம்!

 

Contents

சென்னை, செப்.28  வருமான வரித்துறை; இன்னொன்று சி.பி.அய்.; மூன்றாவது அமலாக்கத் துறை. இவற்றை வைத்து  திராவிட இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆயிரம் நெருக்கடி காலத்தைப் பார்த்து வளர்ந்து, அதையும் தாண்டி நெருப்பாற்றிலே நீந்திய இயக்கம் திராவிட இயக்கம். எதிர்நீச்சலில் வெற்றி கொள்வது எப்படி? என்ற தத்துவத்திற்கு விளக்கம் இங்கே வெளியிடப்பட்ட புத்தகம்.  சாதாரணமாக யாரையோ பாராட்டி இருக்கிறார்கள்; பெரியாரை, கலைஞர் பாராட்டியிருக்கிறார் என்பது அல்ல நண்பர்களே, உங்கள் வாழ்க்கையில், நியாயமான விஷயங்களைச் சொல்லுகிறபோது, எதிர்ப்பு வந்தால், அந்த எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இது பாடப் புத்தகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’
புத்தக அறிமுக விழா – விருது வழங்கும் விழா!

கடந்த 21.9.2026 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பும் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ என்ற புத்தக அறிமுக விழா, திராவிட இயக்க ஆய்வாளரான அருமைத் தோழர் க. திருநாவுக்கரசு அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பாராட்டுவிழாவில், விருதினை வழங்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை உரை வருமாறு:

 ‘‘திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது!’’

இது திராவிடர் கழகம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பும் இணைந்து நடத்தும் சீரியதொரு விழாவாகும். பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிறப்பு வாய்ந்த, முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ என்ற புத்தக அறிமுக விழா, திராவிட இயக்க ஆய்வாளரான அருமைத் தோழர் க. திருநாவுக்கரசு அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – பாராட்டு என்ற இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வரவேற்புரையாளர் பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் அவர்களே, அறிமுக உரையாற்றிய திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, அதேபோல, ‘‘திராவிட வரலாறு – பண்பாட்டு ஆய்வறிஞர் விருது’’ என்னுமோர் விருதினைப் பெற்றுக்கொண்டு சிறப்பான ஏற்புரையை இங்கு நிகழ்த்திய அருமை எழுத்தாளர், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞரின் இந்த சிறப்பான நூல் – ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய ஓர் அருமையான தொகுப்பு.

13 வயதிலே தந்தை பெரியாரிடத்திலே
தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்!

கலைஞர் அவர்கள், தனது 13 ஆம் வயதிலே தந்தை பெரியார் அவர்களிடத்திலே தன்னை ஒப்ப டைத்துக் கொண்டவர், கொள்கை ரீதியாக. அந்தக் கால கட்டத்திலிருந்து அவர்களின் எழுத்துத் தொடர்ந்து எப்படி இருந்தது? தந்தை பெரியார் என்ற அந்த மூலச் சரக்கு, அந்தத் தத்துவம், அவை எப்படி எல்லாம், அவர் பல்வேறு நிலைகளை அடைந்தாலும் கூட, எந்தக் காலகட்டத்திலும் அதை விடாது, அவைதான் எனது மூச்சுக்காற்று என்ற அளவில் வைத்திருந்தார். அவற்றில், இலக்கியம் உண்டா? திராவிடர் கழ கத்துக்காரர்களுக்கு, திராவிட இயக்கத்தவர்களுக்கு இலக்கியம் உண்டா? என்று கேட்கிற நேரத்திலே, இது எப்படிப்பட்ட ஒரு திராவிட இலக்கியம்? எப்படிப்பட்ட உயர்ந்த எண்ணங்களுடைய தொகுப்பு? என்று நம்மை வியக்கச் செய்கின்றது. இலக்கியம் என்பதற்கு ஏதோ ஒரு பெரிய உயர்ந்த கோபுரம் என்று நினைத்துக்கொண்டு, பலபேர் அதற்கு ஒரு புதிய விளக்கங்களைத் தந்து, பெரியார் எழுத்தா? பெரியார் ஒரு இலக்கியவாதியா? அண்ணா ஒரு இலக்கியவாதியா? கலைஞர் ஒரு இலக்கியவாதியா? என்று கேட்டுக்கொண்டு குதர்க்கம் பேசுகிறவர்களுக்கெல்லாம், காலம் பதில் சொல்வதற்கான தொகுப்புதான் இந்தச் சிறப்பான ‘இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்’ புத்தகமாகும்.

தமிழ் உலகத்தைப் பாதுகாக்கக்கூடியவர் ஜெகத்ரட்சகன்!

அப்படிப்பட்ட இந்த நூலை, தகுதியுள்ள ஒருவரால், சிறப்பாக இங்கே வெளியிடப்பட வேண்டும் என்ற நினைத்த நேரத்திலே, அதற்கு நமக்காகக் கிடைத்தவர்தான் மிகப்பெரிய தொண்டறச் செம்மலாக இருக்கக்கூடிய அன்புச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆவார்கள். ஜெகத்ரட்சகன் என்று சொன்னால், உலகத்தைப் பாதுகாக்கிறவர் என்று அர்த்தம். தமிழ் உலகத்தை அவர்தான் பாதுகாக்கிறார். ஒரு சிறந்த மனிதர், மாமனிதர், எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று திராவிட இயக்கத்திலே, நாம் பெருமையோடு கொண்டாடக்கூடிய ஒருவராவார் அவர்.

திராவிட இயக்க ஆய்வாளர் அய்யா திருநாவுக்கரசு
85 வயது நிறைந்த இளைஞர்!

அதையெல்லாம் விட எங்களுக்கு இடையே மிக நெருக்கம் என்னவென்றால், ‘பேட்டை வாசிகள்’ – என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்.  பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பது சென்னையில் வாழும்போது. பக்கத்து மாவட்டத்துக்காரர், சொந்த ஊரைப் பொறுத்தவரையில். ஆகவே, என்றைக்கும் நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள், அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். சற்று தாமதமான அவரது வருகைக்கு காரணம் என்னவென்றால், புதுச்சேரி அரசியலை முடித்துவிட்டு வந்திருக்கிறார். புதுச்சேரி அரசியலை, அவ்வளவு சீக்கிரம் யாரும் முடிக்க முடியாது. அதற்குப் பிரெஞ்சு வார்த்தை ஒன்று இருக்கிறது.  ‘பொல்திக்’ என்பதுதான் அது. ‘பாலிடிக்ஸ்’ என்பதைத்தான் பிரெஞ்சு உச்சரிப்பில், ‘பொல்திக்’ என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையிலும், இன்றைக்கு அவர் இங்கே வந்து, நீங்கள் இவ்வளவு நேரம் இருக்கிறீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி அடையும் போது பேச வேண்டிய அவசியம் இல்லை. அய்யா நம்முடைய புரட்சி எழுத்தாளர், திராவிட இயக்க ஆய்வாளராக இருக்கிற அய்யா திருநாவுக்கரசு அவர்கள் 85 வயது நிறைந்த இளைஞர்.

அதே மாதிரி அய்யா திருநாவுக்கரசு அவர்கள், ஜெகத்ரட்சகன் அவர்களுடன் எல்லாவற்றுக்கும் சிறப்பாக துணையாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, அவர் இவ்வளவு தூரம் வளர்ந்து, இன்னும் கூட உயரத்திற்குப் போயிருப்பார். ஆனால், அவருடைய சுயமரி யாதைப் பாதையில், என்றுமே அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. அதனால், எந்தக் கருத்தாக இருந்தாலும், மனதில் பட்டதை ஒளிக்காமல், யார் முன்னால் சொல்கிறோம், அவர் என்ன நினைப்பார் என்பதைப்பற்றிக்  கவலைப்படாமல் சொல்லக்கூடியவர். ஆகவேதான், அவர் ஓர் எதிர்நீச்சல் வீரர்!

அதைவிடவும் இன்றைக்கு நம்முடைய பாராட்டுதலுக்குரிய அருமைச் சகோதரர் டாக்டர் ஜெகத்ரட்சகன் – அவரது நேரிடையான தொண்டு, கல்வித்தொண்டு, தமிழ்த்தொண்டு, திராவிடத் தொண்டு எல்லா வகையிலும் சிறந்து இருக்கக்கூடிய அளவிலே, பல்வகைத் தொண்டறச் செம்மலாக இருக்கக்கூடியவர்கள்.

எல்லா வகையிலும் பெரியாருக்காக,
அவர் செய்த பணிக்கு நன்றி!

அவருக்கு நாம்  நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், பெரியாருடன் நேரடியாக, அவர் காலத்தில் தன்னை இணைத்துக் கொண்டவராக இல்லாவிட்டாலும், இன்றைக்கு மட்டுமல்ல, எல்லா வகையிலும் பெரியாருக்காக, அவர் செய்த பணிக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அருமையான நூலை அவர் வெளியிட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நம்முடைய ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் நடித்த, கலைஞர் அவர்களுடைய சிறப்பான அறிவுரை மேற்பார்வையில் தயாரான ஒரு திரைப்படம் ‘பெரியார்’ திரைப்படம்.

உலகம் முழுவதும் ‘பெரியார்’ திரைப்படம் வெளியிடப்பட்டது!

பெரியாருடைய வாழ்க்கையிலே ஏராளமான சம்பவங்கள். அவற்றையெல்லாம் காட்சிகளாக வைத்த போது அந்தப் ‘பெரியார்’ திரைப்படம் 100 நாள்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடியது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். 100 காட்சிகள் நடத்துவதே இப்பொழுது யாருக்கும் சுலபமாக முடியாது. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ‘பெரியார்’ திரைப்படம் வெளியிடப்பட்டது. அன்றைய காலகட்டத்தில், அந்தத் துறையில், ஒன்றிய இணை அமைச்சராக இருந்தவர் நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள். அந்தத் திரைப்படத்திற்கு விருது வழங்கக்கூடிய விழாவில் பங்கேற்றிருந்தார்.

 திராவிட இயக்கத்தினுடைய வெற்றி!

‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ சார்பில், வீ.அன்புராஜ் அவர்கள் அந்த விருதினை வாங்கினார். இவர் ஒன்றிய அமைச்சராக இருந்து, அந்த விருதினைப் பெறுகின்ற நேரத்தில், ‘‘என் சகோதரருடைய மகன் இவர்’ என்று அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமல்ல, அப்போது கலைஞர் அவர்கள், ஜெகத்ரட்சன் அவர்களைத்  தட்டிக் கொடுத்துச் சொன்னார்,  ‘‘நீங்கள் ஒன்றிய அமைச்சராக இருக்கும்போது ‘பெரியார்’ திரைப்படத்திற்குச் சிறப்பு வந்தது பாருங்கள், அதுதான் திராவிட இயக்கத்தினுடைய வெற்றி’’ என்று மிகப்பெரிய அளவுக்குப் பாராட்டினார்கள். அப்படி ஒரு சிறப்பான பணியை என்றைக்கும் செய்து கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள்.

ஜெகத்ரட்சன் அவர்களுக்குக் கலைஞர் கொடுத்த பட்டம் ‘திராவிட ஆழ்வார்!’

எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் அவர்களோடு, நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெகத்ரட்சகன் அவர்களைப்பற்றி பேச வேண்டிய அவசியம் வந்தால், என்னைப் பார்த்துச் சொல்வார், ‘‘அதான்ய்யா, உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்காரே, அவர்தான் ‘திராவிட ஆழ்வார்’’’ என்று சொல்வார். கலைஞர் கொடுத்த பட்டமே ‘திராவிட ஆழ்வார்’ என்பதாகும். ஆழ்வார்கள் திராவிடர்களாக இருப்பதும் ரொம்ப மகிழ்ச்சிதான். ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பான நிகழ்ச்சி இது. திராவிட இயக்கத்தை, வரலாற்றையே கொச்சைப்படுத்த நினைப்பார்கள். அப்படியானாலும், சிறப்பு என்னவென்று சொன்னால், என்ன செய்தாலும், இன்னமும் பெரியார் மற்றவர்களை மிரட்டக்கூடிய உருவமாக இருக்கிறாரே தவிர, பெரியாரை மறந்தவர்கள் யாரும் கிடையாது.

ஆகவே, தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து கள் பல ரூபத்திலே இருக்கும். அது ஒரு பேரங்காடி. சிலர் நினைக்கலாம், ‘இவர் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாரே’ என்று. எல்லாவற்றையும் பெரியாரிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது.  ‘நான் ஒரு பூரண பகுத்தறிவாளி’ என்று தந்தை பெரியார் சொன்னார். அதைத்தான் கலைஞர் அவர்கள், எந்தெந்த வகையிலே தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை யைத் தன்னகத்தே எடுத்துக்கொண்டு எப்படி வளர்ந்தோம் என்று சொல்லக்கூடிய இந்த நூல் ஓர் அற்புதமானது.

சிறிய புத்தகங்களாகப் போடவேண்டும்; மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்: தந்தை பெரியார்!

அதுமட்டுமல்ல, ஒவ்வொருவரும் கேள்வி கேட்டு, அதன்படிச் சிந்திக்க வேண்டும். கேள்வி கேட்டால் தான், தெளிவான பதில் கிடைக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.  பிறந்தநாள் விழாக்களில், பெரிய புத்த கங்களை வாங்குவார்கள்; ஆனால், படிக்க மாட்டார்கள். ஆகவே, தந்தை பெரியார் சொல்வார், ‘‘சிறியதாகப் போடவேண்டும்; மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்’’ என்று.

எல்லோருடைய கேள்விகளுக்கும் பெரியார் பதில் சொன்னார்; பெரியார் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை!

பெரியாரிடம் கேட்காத கேள்விகளே இல்லை. பெரியாரிடம் எல்லோரும் கேள்வி கேட்டார்கள். ஆனால், அய்யா கேட்ட கேள்விகளுக்கு யாரும் சுலபமாகப் பதில் சொல்ல முடியாது. யார் கேள்வி கேட்டாலும், கேள்வி கேள் என்று சொல்லி, எழுதிக் கொடுக்கிறவருடைய பேனா முள்  உடைந்து போனாலும்கூட. தன்னுடைய பேனாவை எடுத்துக் கொடுத்துக் கேள்வி கேளுங்கள், எழுதுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

‘நான் சொல்வதாக இருந்தாலும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்ன சொல்லுகிறது என்று கேள்’’ என்று சொன்னவர் பெரியார். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் கேட்ட கேள்விகளை 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா என்பதை வைத்துக்கொண்டு, 148 கேள்விகள் இந்தப் புத்த கத்தில்  இருக்கின்றன. இது மருந்து கேப்சூல் மாதிரி. இதைப் படித்துப் பார்த்தால், இந்த இயக்கம் எவ்வளவு தேவை? இந்த இயக்கத்தினுடைய தொண்டு எவ்வளவு தேவை?  தந்தை பெரியாரைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறவர்கள், பிழையாக புரிந்து கொண்டிருக்கிறவர்கள் கூட, விளக்கங்கள் பெறக்கூடிய அளவுக்கு இருக்கும். ஆகவேதான், தந்தை பெரியாருடைய சிந்தனைகளை அவ்வப்போது தொகுத்து வருகின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் வெளியிடப்படுகிறது!

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். எதையும் தனித்தன்மையோடு சொன்னவர் அறிஞர் அண்ணா அவர்கள். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர் சொன்னதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் பெரியாருடைய பிறந்த நாள் மலரை வெளியிடுகிறோம். 65 ஆம் ஆண்டு மலருக்காக ஒரு கட்டுரை எழுதினார் கலைஞர் அவர்கள்.  அய்யாவினுடைய 65 ஆம் ஆண்டு பிறந்த நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் வெளியிடப்படுகிறது.  65 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்காக, நம்முடைய கவிஞர் அவர்கள், நேரடியாகச் சென்று, கலைஞரிடம் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியும், அம்மலரில் இடம்பெற்றிருக்கிறது.

அம்மலரில் எழுதிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய கட்டுரையில், ‘‘இதுவரையில், பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை பெரியாரையும், கலைஞரையும்பற்றி இன்றைக்கும் வரலாற்றை மாற்றிச் சொல்வார்கள். நடந்த சம்பவங்களையே, நடக்காத சம்பவங்கள் என்று சொல்லி, வரலாற்றை மாற்றிக் கொண்டிருக்கிற காலகட்டம் எல்லாம் இன்றைக்கு வந்துவிட்டது, இருக்கிறது.

ஒரு நடமாடும் திராவிட இயக்க ஆவணம் – திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு

எனவேதான், இந்த எழுத்தாளர்கள் தேவை, ஆய்வாளர்கள் தேவை. திராவிட இயக்கத்தின் சார்பாக இப்படிப்பட்ட ஆய்வாளர்கள் – நம்முடைய அருமைச் சகோதரர் தோழர் திருநாவுக்கரசு போன்றவர்கள் ஒரு நடமாடும் திராவிட இயக்க ஆவணம். எந்தத் தகவலானாலும் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல, வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை நடைபெற்ற தேதிபற்றிய சந்தேகம் என்றால், நம்முடைய கவிஞரைத்தான் கேட்க வேண்டும். கலைஞரே சொல்லுவார், ‘‘ஏதாவது சந்தேகம் இருந்தால், திராவிடர் கழகத்தவர்களிடம் கேளுங்கள்;  அவர்கள் தகவல்களைச் சரியாக வைத்திருப்பார்கள்’’ என்று.

நாள்தோறும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவர் நம்முடைய ஜெகத்ரட்சகன்!

எனவேதான், ஆவணப்படுத்தக்கூடியவையாக இந்தப் புத்தகங்கள் இருக்கின்றன. வாங்கிச் சிறப்பான வகையிலே இதைப் பரப்பவேண்டும்.  எதிர்நீச்சல் தான் எல்லாருக்கும். இங்கு இருக்கிறவர்களைப் பார்த்தீர்கள் என்றால், எல்லா வகையிலும் நாள்தோறும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருப்பவர்கள்தான். நம்முடைய ஜெகத்ரட்சகன் அவர்கள், வேறு துறையில் வளர்ந்தவர். கல்வித்துறையில், தொழில் துறையில், மற்ற துறைகளில் எல்லாம் அவருக்கு ஒப்பீடு யாரும் இருக்க முடியாது. இத்தனைக்கும் எளிய குடும்பத்திலே பிறந்தவர் அவர்.

அதுமட்டுமல்ல, தன்னுடைய சொந்தக் காலிலே நின்று வளர்ந்தவர். எத்தனையோ பேர் வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சமுதாயச் சிந்தனை கிடையாது. ‘ஜெகத்ரட்சகன்’ என்று அவருக்குச் சரியாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். அவரை வேண்டுமானால், சிலர் கொள்கை எதிரியாக நினைப்பார்கள். ஆனால், அவர் யாரையும் எதிரிகளாகக் கருதுவதில்லை. அதுதான் அவருடைய தனித்தன்மை. எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், அவர் முகம் சுளிக்காமல் பழகும் பண்பு வாய்ந்தவர்.

‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்று வள்ளுவர் குறள் இருக்கிறது. அதன்படி வாழ்பவர் அவர்.

ஆயிரம் நெருக்கடி காலத்தைப் பார்த்து வளர்ந்து, அதையும் தாண்டி நெருப்பாற்றிலே நீந்திய இயக்கம் திராவிட இயக்கம்!

அப்படிப்பட்ட ஒருவர், அவரை வீழ்த்த முடியவில்லை என்றவுடன், இன எதிரிகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இரண்டு, மூன்று திரிசூலங்கள் இருக்கின்றன. அந்தத்  திரிசூலங்களை விட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். திராவிட இயக்கத்தவர்களை கொச்சைப்படுத்துவது, திடீரென்று சோதனை என்பது; அந்த் திரிசூலங்கள் எவை என்று நான், பல பொதுக்கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். ஒன்று, வருமான வரித்துறை; இன்னொன்று சி.பி.அய்.; மூன்றாவது அமலாக்கத் துறை. இவற்றை வைத்து  திராவிட இயக்கத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆயிரம் நெருக்கடி காலத்தைப் பார்த்து வளர்ந்து, அதையும் தாண்டி நெருப்பாற்றிலே நீந்திய இயக்கம் திராவிட இயக்கம்.

எதிர்ப்பு வந்தால், அந்த எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்நூல் பாடப் புத்தகம்!

எதிர்நீச்சலில் வெற்றி கொள்வது எப்படி? என்ற தத்துவத்திற்கு விளக்கம் இந்த புத்தகம். வெறும் சாதாரணமாக யாரையோ பாராட்டி இருக்கிறார்கள்; பெரியாரை, கலைஞர் பாராட்டியிருக்கிறார் என்பது அல்ல நண்பர்களே, உங்கள் வாழ்க்கையில், நியாயமான விஷயங்களைச் சொல்லுகிறபோது, எதிர்ப்பு வந்தால், அந்த எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இது பாடப் புத்தகம் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, சிறப்பான வகையிலே வந்து, மகிழ்ச்சியைத் தந்த அத்துணை பேருக்கும் நன்றி! அனைவரும் சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று அவருடைய மொழியிலேயே சொல்லி, முடித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *