சென்னை, செப். 28- சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச உணவுத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக நாள்தோறும் ரூ.50 உணவுப்படியாக வழங்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கு இந்த உணவுப்படியை வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்களின் கோரிக்கை
இலவச உணவாக வழங்குவதை விட, அதற்கான தொகையை உணவுப்படியாக வழங்க வேண்டும் என்று 92 சதவீதத் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே இம்மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இனித் தூய்மைப் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 வீதம் தங்களது விருப்பத்திற்கேற்ப உணவைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது உணவுப்படியாகப் பெற்றுக்கொள்ளவோ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர் களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
