சென்னை, செப் 28 தவெக அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் தெளிவு இல்லை என்றும், அக்கட்சி தனது கொள்கைப் பாதையை வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: தவெகவின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையின் சாயலே (வாடை) மேலோங்கி நிற்கிறது. உழைக்கும் மக்கள் புறக்கணிப்பு: ஒன்றிய அரசைப் போலவே, சமூகத்தின் உண்மையான செல்வத்தைப் படைக்கும் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய வர்க்கத்தையும் தவெக கைவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப் பட்டுள்ள தீர்மானங்களில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஆதரவளிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது கல்வி மற்றும் பிற துறைகளைத் தனியார்மயமாக்குவதில் அக்கட்சி கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. தவெகவின் கொள்கைகளும் செயல்பாடுகளும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இல்லை. அவர்களின் பொருளாதாரப் பாதை தெளிவற்றதாக உள்ளதுடன், இதுவரை திட்டவட்டமான கொள்கைகளை அக்கட்சி அறிவிக்கவில்லை.
நாட்டை நல்வழிப்படுத்தும் இடதுசாரிகளின் பாதையா அல்லது நாட்டைப் பின்னுக்குத் தள்ளும் வலதுசாரிகளின் பாதையா என்பதை தவெக தலைவர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்று கே.சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
