ஒரு நாட்டின் அரசாங்கம் தங்களின் தோல்விகளை மறைக்கவும், முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைத் தடுக்கவும், அரசின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுவதற்குக் கையாளும் ஒரு தந்திரோபாயமே கவனத்தைத் திருப்பும் அரசியல் ஆகும். ஒன்றிய அளவில், பா.ஜ.க. அரசு இதனை மிகச் சாமர்த்தியமாக உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. மதம், ஜாதி, மொழி அல்லது தேசபக்தி போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களை திடீரென முன்னிறுத்துவது, முடிந்துபோன பழைய பிரச்சினை ஒன்றை மீண்டும் கிளப்பி அவதூறு செய்வது, அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கவனத்தைத் திருப்புவது,உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அண்டை நாடுகளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரோதான் காரணம் என சித்தரிப்பது, முக்கியப் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றை விவாதிக்காமல், பொழுதுபோக்கு அல்லது பரபரப்புச் செய்திகளுக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் தருவது இவற்றை வைத்தே கடந்த 12 ஆண்டுகளைக் கடத்தியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு இந்த கவனத்தைத் திருப்பும் அரசியல் உத்திகள்பற்றி தெளிவாகத் தெரிந்திருக்கும். கூட்டத் தொடர் முழுவதும், அந்த பட்ஜெட்டைப் பற்றிய விவாதங்களும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெறாமல் அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுமே, தொடர்பற்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி, அவையின் நேரத்தை வெகுவாகக் கடத்தினர். இதை பல்வேறு கட்சி உறுப்பினர்களும், ஊடகங்களும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தனர். தி.மு.க.வின் சொல்லப்படும் அவதூறுகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை இந்தக் கூட்டத் தொடரின் போது த.வெ.க.வினர் எடுத்து வைத்தனர். இதன் உச்சமாகவே, காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆற்றிய பதிலுரை அமைந்தது.
கடந்த 120 நாட்களில் ஆட்சியில் நடந்துள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், தி.மு.க. மீதும், முத்தமிழறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை, பொறுப்புவாய்ந்த முதலமைச்சர் பதவியில் இருப்பவரே எடுத்துவைத்ததும், அவரது உடல்மொழியும், பேச்சுகளும் கடும் கண்டனத்தை உருவாக்கின. இதனால் மறுநாள் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், கடைசி நாள் அவையின் போது, இரண்டு முக்கியமான சட்ட மசோதாக்கள் பெரிய விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒன்று “விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்ள, மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி தேவையில்லை” என்னும் மசோதா: விவசாய நிலத்தைக் கட்டடம் கட்டப் பயன்படுத்து வேண்டும் என்றால், தற்போதுள்ள நடைமுறைப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய், நீர்ப்பாசனத் துறையினர் ஆய்வு செய்வர். அவர்கள், அது தீவிர விவசாய நிலம் அல்ல எனச் சான்றளிக்க வேண்டும். ஆனால், புதிய மசோதாவின் படி, இந்த முன்அனுமதி தேவையில்லையாம்!
பரந்தூர் விமான நிலையத்தை விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது என்று காரணம் காட்டி, கைவிட்ட அதே அரசுதான், இப்போது இந்த மசோதாவையும் நிறைவேற்றியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு. விமானநிலையத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மீண்டும் விவசாயம் நடக்கப்போவதில்லை. அந்த இடத்தில் சிப்காட் தொடங்கப்படும் என்று அரசாணை வெளியிடப் பட்டுள்ளது எனில், பரந்தூர் விமான நிலையத்தைத் தடுத்ததில் அடிப்படை நியாயமோ, அவர்கள் வைத்த வாதத்தில் நேர்மையோ துளியும் உள்ளதா?
கல்வியில் தனியார் மயத்தை வளர்க்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான இடத் தேவையை வெகுவாகக் குறைக்கும் சட்டம் இடதுசாரிகள், பா.ம.க. ஆகியோரின் எதிர்ப்புடன் சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் பா.ஜ.க. சொல்வதன் மறு பதிப்பே இது! இதுவரை ஒரு தனியார் பல்கலைக்கழகம் அமைய வேண்டுமானால் 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்றிருந்ததை, சென்னை மாநகரத்திற்கு 12 ஏக்கர் என்றும், பிற மாநகராட்சிகள், நகராட்சிப் பகுதிகள் என்றால், 18 ஏக்கர் என்றும், மற்ற இடங்களுக்கு 25 ஏக்கர் என்றும் குறைத்துள்ளது இந்த மசோதா.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட இதே போன்ற தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதா, கடும் எதிர்ப்பைச் சந்தித்த நிலையில், மாற்றுக் குரல்களுக்கு மதிப்பளித்து அதனைத் திரும்பப் பெற்றது திராவிட மாடல் அரசு. அதனை வரவேற்று, 2025 அக்டோபர் 27 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில், “அரசே முழுமையாக கல்வித் துறையை நடத்தும்வரை, எல்லோருக்கும் கல்வி – கிட்டாக் கனியாக ஆகிவிடக் கூடாது என்பதால் தான், பொருளாதார வாய்ப்புள்ளவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவை கல்வி வளர்ச்சி என்னும் அளவில் பலன்களைத் தந்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எனினும், அதற்கு சமூகநீதியை விலையாகக் கொடுக்க முடியாது; அது கல்வி வணிகத்திற்கும் வழிவகுத்துவிடக் கூடாது என்பதே நம்மைப் போன்றவர்களின் கவலையாகும்” என்று சுட்டிக் காட்டியிருந்ததுடன், “கல்வியை எல்லோருக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளையும், அதில் சமூகநீதி நிலைநாட்டப்படு வதையும் விழிப்புடன் முன்னெடுப்போம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க.வை வெளியேற்றும் வகையில், தற்போதைய அரசியலுக்குத் தொடர்பற்ற ஒரு பிரச்சினையை எழுப்பி, அவதூறான செய்திகளைப் பேசி, உணர்ச்சிப் பூர்வமான சூழலை உருவாக்கி, அதன் பின்னணியில் இந்தச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, இதற்காகவே தான், சட்டமன்றத்தில் அத்தகைய விரும்பத்தகாத பேச்சுகள் பேசப்பட்டனவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதைத் தடுக்க முடியாதே! திசை திருப்பும் அரசியலைத் திறம்படச் செய்யக் கற்றவர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட வாய்ப்பு இல்லாமல் இல்லையே! இதனை மக்களும், கட்சிகளும் உணர்ந்து கொள்வதும், இந்த வேடங்களை, வசனங்களை, பின்னணியுடன் பொருத்திப் புரிந்துகொள்வதும் அவசியமே, அவசியமே!
