“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
எனப் போர்ப் பரணி முழக்கமிட்ட புரட்சிப் பாவலரின் பாடல் வரிகளுக்கு இணங்க தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவம், யாரும் அறியாப் பால பருவத்திலும் அடங்கா இளம் காளையாகத் தனது அத்தையாரின் வீட்டில் விடுதலைப் பறவையாய் இளமை வாழ்வு அமைந்தது என்றே கூறலாம்.
அரிதாய்ப் பயில வேண்டிய ஆரம்பக் கல்வியைக் கூட முற்றாய் முடிக்காத காலச் சூழல் அது. ஒத்த வயதுடைய இளைஞர்களுடன் கட்டுப்பாடில்லாமல் காலத்தினை மகிழ்வுடன் கழித்தார். பெற்றோர்கள் கண்டிப்புடன் வளர்க்க வில்லை என்பதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.
ஒருமுறை தாதம்பட்டி ஆற்றில் குளித்துவிட்டு கரையேறுகின்றார். அப் பகுதியில் ஒரு பெரும் தனவந்தர் மறைவு எய்தி, 16ஆம் நாள் தடபுடலான கருமகாரியம் நடைபெற்றது. பத்துப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து புண்ணியாதானம் செய்து கொண்டிருந்தனர். இருநூறுக்கும் மேற்பட்ட உறவினர்களும், ஊர்ப் பெரியவர்களும் சூழ்ந்து பார்ப்பனரின் சடங்கு, சம்பிரதாயங்களைச் செய்து கொண்டிருந்தனர்.
மறைவெய்திய பணக்காரப் பெரியவரின் பிள்ளைகளும் சடங்குகளை செய்துகொண்டு இருந்தனர்.
இளைஞரானப் பெரியார் இந்நிகழ்வுகளை கண்ணுற்றார். இதற்கு முன்பு நடந்த இதேபோன்ற சடங்கில் பயன்படுத்தப்பட்ட புதிய பானை ஓடு அந்தப் பகுதியில் கிடந்தது. அதனை எடுத்து ஆற்று நீரை கரைப் பகுதிக்கு இறைத்துக் கொண்டிருந்தார். அருகில் புண்ணியக் காரியத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிவந்து, “என்ன காரியம் செய்து கொண்டு இருக்கிறாய்? பெரிய வீட்டுப் பிள்ளை ஆயிற்றே! மனம் பாதித்து விட்டதா?” என அருகில் சென்று கேட்டனர்.
“இரண்டு கல் தொலைவிலுள்ள எங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலுள்ள தென்னை மரங்களுக்கு இங்கிருந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருக்கின்றேன்” என்று இளைஞர் எவ்விதப் பதட்டமும் இல்லாமல் கூறினார்.
காரியத்திற்கு வந்த அனைவரின் பார்வையும் இவர்களின் பக்கம் திரும்பியது. அதில் ஒருவர், “இங்கிருந்து ஓட்டின் மூலம் தண்ணீரை இறைத்தால் இரண்டு கல் தொலைவு தென்னந்தோப்பிற்கு தண்ணீர் எப்படி போய்ச் சேரும்?” என்றார்.
“இறந்தவரின் ஆத்மா இங்கிருந்து பார்ப்பனர் மாவிலையால் மந்திரம் சொல்லி தண்ணீரை தெளித்து மேல் லோகம் போகும்போது ஏன் நான் இறைக்கின்ற தண்ணீர் இரு கல் தொலைவிலுள்ள தென்னந்தோப்பிலுள்ள தென்னை மரங்களுக்குப் போய்ச் சேராதா?” என்று கேட்டார் இளைஞர் பெரியார்.
ஊர் மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இந்த மூடநம்பிக்கை நிறைந்த செயல் இன்று வரை கைவிடப்பட்டு, தாதம்பட்டி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்குப் பார்ப்பனர்களை வைத்து புண்ணியதானம் கொடுக்கும் செயல் நடைபெறுவதே இல்லை.
இதிலிருந்து தனது இளமைப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கண்ணோட்டம் கொண்டு சிந்திக்கின்ற மனப்பான்மை இளைஞரானத் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது.
தனது பெற்றோர்களால் ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்க அனுப்பப்பட்ட பெரியாரிடம் துடுக்குத்தனம் நிறைந்த ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்கும் எண்ண ஆற்றல் இளமையிலேயே வேர் ஊன்றிக் காணப்பட்டது.
நாம் அடையாளத்தை நெற்றியில் போட்டு வைஷ்ணவ சடங்கினைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தினர் எவரிடமும் நெருங்கிப் பழகவோ, உணவு அருந்தவோ மாட்டார்கள். சக மாணவர்களிடம், திண்பண்டங்களையோ, உணவினையோ வாங்கிச் சாப்பிடக் கூடாது என்ற பெற்றோர் கட்டளையை ஏற்காமல் அருகிலுள்ள பின்தங்கிய மக்கள் வாழ் பகுதியிலுள்ள வீட்டில் தண்ணீர் குடிப்பதை மேற்கொண்டார்.
இதனால் என்ன பின் பிளைவுகள் நிகழும் என்ற கேள்விகளைக் கேட்கும் ஆற்றலால் அனைவரும் சரிநிகர் சமமானவர்கள் என்ற மனப்பான்மை தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது. இதனால்தான் தந்தை பெரியாரை பிறவி நாத்திகர் என அழைக்கின்றோம்.
– இரா.முல்லைக்கோ, பெங்களூரு
