இமயமலை பனிப்பாறைகளால் ஆனது! பல்லாயிரக் கணக்கில் பனிப்பாறைகள் அங்கு குவிந்து கிடப்பதும் உலகம் அறிந்த ஒன்றாகும். இந்தப் பனிப்பாறைகள் சரிவதற்குக் காரணம் என்ன? புவி வெப்பமடைதல் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதே – கெட்டிக் கோளமாக நிலை பெற்றிருந்த இந்தப் பனிப் பாறைகள் உருகி ஆறாகப் பெருகிப் பெருக்கெடுப்பதற்குக் காரணம் என்று அறிவியலாளர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். இந்த வெப்பத் தாக்குதலைப் இப் பனிப் பாறைகளினால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனால் உருகிப் பெருகும் பனிப் பாறைகள் பெருவெள்ளமாகப் பேருரு எடுக்கின்றன.
“சொகுசான வாழ்க்கையே சுகமானது” என்று முடிவெடுத்து விட்டுள்ள மனித சமூகம் இயற்கையைச் சிதைக்கப் பழகிக் கொண்டு விட்டது. இயற்கைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் காலில் போட்டு மிதிக்கின்றது. காடுகளை அழித்து – மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட இயற்கைத் தாவரங்களைப் பாழடிக்கின்றனர்.
