“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (4)

இணையவழி கையெழுத்து இயக்கம்

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

“நம் தேசாசாரப்படி ஸ்த்ரீகள், பதியை ஈஸ்வரனாக பாவித்து, அதன் மூலமாக மகா பெரிய பலனான ஜன்ம நிவிருத்தியை அடைய வேண்டுமானால் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதுதான் வழி! அதை விட்டுவிட்டு, பெண்கள் நிறையப் படிக்கிறார்கள். உத்யோகம் பார்க்கிறார்கள், தங்கள் மனசுப்படி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள், இதெல்லாம் நம் “progress” (முன்னேற்றம்)” என்று சொல்வார்கள். சொன்னாலும் எனக்கென்னவோ இந்தப் பெண்கள் இப்படி பலர் கண்களிலும் பட்டுக்கொண்டு, சித்த விகாரங்களுக்கு ரொம்பவும் ஆளாகிற சூழ்நிலையிலே மாட்டிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ஓயாத கவலையாக, பயமாகக் கூட இருக்கிறது” என்கிறார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்கின்ற காஞ்சி மடத்தின் மகா பெரியவா! பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, போனால் பலர் பார்வையும் பட்டு தவறாக நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். அதை நினைத்து அவர் கவலையும், பயமும் அடைகிறாராம். எப்படி இருக்கிறது?” வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் இந்த விந்தை மனிதரின் பேச்சு பார்த்தீர்களா?

“கட்டுப்பெட்டிகளாக இருந்து கொண்டு இப்படி பெண்களைக் கட்டுப்பாடு பண்ணி, பால்ய விவாஹம், பால்ய வைத்யம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே என்று சீர்திருத்தக்காரர்கள் கோபித்துக் கொண்டு, பெண்களுடைய சமூக உரிமை போகிறது என்று அழுதால், எனக்கோ இவர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் நம் பெண்களின் மகத்தான குலதனமான கற்புக்கு ஹானி உண்டாகும்படியான ஹேத்துக்களை ஏற்படுத்துகிறார்களே என்று அதைவிட கோபம் வருகிறது. அழுகை வருகிறது. ஸ்திரீகள் கெட்டுப் போனால் லோகமே போய்விடும். எல்லோரும் நரகத்திற்கு போக வேண்டியதுதான். “ஸ்த்ரீஷு துஷ்டாஷு வார்ஷ்ணேயம் ஜாயதே வரண ஸங்கர, ஸங்கரோ நரகாயவ” என்று அர்ஜுனனுக்கு அழுகை வந்த மாதிரி எனக்கும் வருகிறது” என்று மகா பெரியவா துக்கம் தொண்டை அடைக்கப் பேசுகிறார். சீர்திருத்தக்காரர்கள் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் கற்பு போய்விடுமாம். அதனால் நாம் நரகத்திற்குப் போய் விடுவோமாம். அதனால் இவருக்குக் கோபமும், அழுகையும் வருகிறதாம். பெண்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் (அவர்கள் அவரணஸ்தர்கள்தானே!) என்பதில் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள்.

கட்டுரை, ஞாயிறு மலர்

“இக்காலப் பெண்கள் இதற்கு சம்மதித்திருக்கிறார்களே! பெற்றவர் களும் அங்கீகரித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறார்களே! என்பதுதான் மனசைச் சுடுகிறது. எல்லாப் புரோக்ரசையும், எல்லா அட்வான்சையும் விட நம் பெண் குழந்தைகள் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதுதான் எனக்குப் பெரியதாக அதே கவலையாகவும் இருக்கிறது. படிப்பதாலும், உத்யோகம் பார்ப்பதாலும் அப்படியொன்றும் சித்தம் கெட்டுவிடவில்லை என்று எனக்கு ஆறுதல் சொல்கின்றனர். எனக்கும் அந்த நம்பிக்கை போகவில்லை. ஆனாலும் இப்படி கண்டபடி திரிகிறார்களே, கெட்டுப் போவதற்கு நிறைய சான்ஸ் இருக்கிறதே, கெடுப்பதற்கென்றே சினிமாவும், நாவலும், பத்திரிக்கைகளும் இருக்கிறதே என்று பயப்படுகிறேன்!” என்று கவலைப்படுகிறார் மகா பெரியவாள்(?) பெண்கள் படிப்பதும், வேலைக்குப் வெளியே போவதும் அவரைப் பொறுத்தவரை “கண்டபடி திரிவது” என்கிறார். அப்படிச் சுற்றினால் அவர்கள் கெட்டு விடுவார்களாம். மகா பெரியவா மட்டுமல்ல, நடுப் பெரியவா, இளைய பெரியவா, ஏன் எல்லா பார்ப்பனர்களுக்குமே இதே எண்ணம்தான்.

“அவ்வப்போது கன்னா, பின்னா என்று நடந்து விடுகிற சங்கதிகளும் வருகின்றன. தப்பு நடந்த பிறகு அதை என்ன பண்ணி மாற்றுகிறது? இப்படி ஒன்று, இரண்டு கேஸ்கள் கூட இந்த தேசத்தில் விடலாமா? என்று மனசு கொதிக்கிறது. தாயார் தகப்பனார்களுக்குத் தங்கள் பெண்களைப் பற்றி இருக்க வேண்டிய பயம், கவலை எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான் தான் பயப்படுகிறேன் போலிருக்கிறது. எல்லோரும் கெட்டுப் போக வேண்டாம். ஆனால் ஒரு பால்ய விதவை உண்டானால் கூட களங்கம் என்று சீர்திருத்தக்காரர் சொன்னால், ஒரே ஒரு பெண் கெட்டுப் போனால் கூட அதைவிட ஆயிரம் மடங்கு களங்கம் என்று நான் பயப்படுகிறேன்” என்று ‘ஊர் கவலை’யில் அழுது வடிக்கிறார் மகா பெரியவா! எப்படியோ பெண்கள் வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டும் வெளியே போனால் கெட்டு விடுவார்கள் அதனால் வீட்டிலேயே ஆண்களிடம் அவர்களை அடிமைகளாக வைத்திருந்து சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து வேறு ஆண்களிடம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்து அவர்கள் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் இந்த பார்ப்பனக் கும்பல் எவ்வளவு கருத்தாக இருக்கிறது பார்த்தீர்களா?

“வேதம் ஓதிய வேதியர்க் கோர் மழை! நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை! மாதர் கற்புடையோர்க்கோர் மழை, மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே” (‘நீஷபாஷை’ ஆன தமிழ் பாடலையெல்லாம் சொல்கிறார் மகா பெரியவா? என்று சொல்லியிருக்கிறது. இதில், ‘நீதி மன்னர் நெறி’ என்று ஜுரிஸ்டிக்ஷனில் (அதிகார வரம்பிற்குள்) இல்லாத விஷயம். அதனால் நான் அதைப்பற்றி கவ லையோ, சந்தோஷமோ படுவதற்குப் பொறுப் பாளி இல்லை. ஆனால் வேதியரை வேதம் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறகூடிய சான்ஸ்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், புகு முன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனசு கொஞ்சம் கூட சலிக்காத பதிவ்ரதயத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான்! இந்த இரண்டிற்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டும், ஏதாவது திட்டங்கள் போட்டுக் கொண்டும் இருக்கிறேன்” என்கிறார் மகா பெரியவா! குழந்தைத் திருமணம்தான் பெண்ணின் மனதை பேதிலிக்காமல் இருக்கச் செய்யுமாம்! அதற்கு சிறந்த வழி குழந்தைத் திருமணம் தான் என்றும், அதற்கான திட்டங்களை தீட்டுகிறாராம். பார்ப்பனர்கள் எப்பேர்பட்ட காரியவாதிகளாக இருக்கிறார்கள்.

“Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகிப் போய் கொண்டே இருக்கிறது அதற்காக இந்த ரேஸில் ஓய்ந்து விடவும் கூடாது. போனது போனதுதான் சீர் செய்வது சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற “கலிப் பிரவாஹத்தை” தடுத்து மாற்றுவது நடக்காத காரியம் என்று விட்டுவிடுவதற்காக என்னை இங்கே (பீடத்தில்) உட்கார்த்தி வைத்திருக்கவில்லை. அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டு ஆயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வருவதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீ தர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக் கொண்டு, வாரிக் கொடுத்து விட்டு “ஜகத்குரு” பட்டம் சூட்டிக் கொண்டு சாட்சாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதை விட பெரிய தோஷம் இல்லை” என்று “பெரியவா” சொல்கிறார். “பெண்கள் வீட்டை விட்டு வெளியே போய் கெட்டுப் போவதை பார்த்துக் கொண்டு காஞ்சி மடத்தின் பீடத்தில் உட்கார்ந்து என்ன பயன்?” என்று மிகவும் துக்கத்தோடு கேட்கிறார் அவர் கையை மீறி சீர்திருத்தக்காரர்கள் பெண்களை வெளியே போக வைத்ததால் அதை பழைய நிலைக்கு மாற்றும் முயற்சி கடுமையானதாக இருந்தாலும், தான் அதை விடப் போவதில்லை என்கிறார் காஞ்சி மடாதிபதி.

“பகவான் (கீதையில்) சொன்ன மாதிரி ஜனபாக்யம் (கர்மா) அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல் என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும். ரிசல்ட் என்னுடைய ஸின்ஸியாரிட்டியையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இது வரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸியாரிட்டி போதவில்லை, என் மனசு சுத்தமாக வில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். உலகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது” என்கிறார் மகா பெரியவா. பெண்கள் படிப்பதையும், வேலைக்குப் போவதையும் அவ்வளவு பெரிய சங்கடத்தை உண்டாக்குவதாகவும், அதைத் தடுக்க முயன்றும், அது முடியாததால், தன் தவ வலிமையிலேயே குறை இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.

(இன்னும் நிறைவடையவில்லை)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *