எங்கள் இயக்கம் வளர வேண்டுமானால், எதிர்ப்பு என்ற உரம் போட வேண்டும்!
எதிர்ப்பு உரம், வளர வளர, இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும்!
இது ஆயிரம் காலத்துப் பயிர்; திராவிடத்தை, சுயமரியாதை இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது!
மதுரை, செப்.10 எங்கள் இயக்கம் வளர வேண்டுமானால், எதிர்ப்பு என்ற உரம் போட வேண்டும். அந்த உரம், வளர வளர, இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆயிரம் காலத்துப் பயிர்; திராவிடத்தை, சுயமரியாதை இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு – ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா
்கடந்த 21.08.2026 அன்று மாலை 5.30 மணிக்கு, மதுரை மாநகர் – புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு’’ மதுரை ஓபுளா படித்துறை அருகில் நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகளான கு.துரைராஜ், பே.தேவசகாயம், அன்னத்தாயம்மாள், வழக்குரைஞர்கள் சி.மகேந்திரன், மு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு::
அறிவுப் புரட்சி இயக்கம்!
திராவிடர் கழகம் என்ற ஓர் அறிவுப் புரட்சி இயக்கத்திற்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு என்பதை மக்களுக்கு எடுத்து விளக்கக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியாக இருக்கக்கூடிய மதுரை மாகாண கருப்புச் சட்டைப்படை மாநாடு இதே மண்ணிலே 80 ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றங்கரையிலே இரண்டு நாள் சிறப்பாக நடைபெறுவதற்காக உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.
கருப்புச் சட்டைப்படைத்
தயார்! தயார்! தயார்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மிகப்பெரிய தலைவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டு, அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை தளபதி அழகிரி போன்றவர்கள், நடிகவேள் எம்.ஆர்.இராதா போன்றவர்கள், அதேபோல பாவலர் பாலசுந்தரம் போன்றவர்கள் எல்லோரும் ஊர்வலமாக வந்த அந்த நிகழ்ச்சியைக் கண்டு, முதல்நாள் வெற்றிகரமாக மிகப்பெரிய ஓர் அரங்கத்தில் 50ஆயிரம் பேருக்கு மேலே கூடி இருக்கக்கூடிய அந்த மாநாட்டை சகிக்க முடியாத அளவுக்கு, ஆரியம் திட்டமிட்டு, அந்த மாநாட்டுப் பந்தலையே கொளுத்தி, அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கருஞ்சட்டைப்படைத் தோழர்களை எல்லாம், வேண்டுமென்று இட்டுக்கட்டிய பொய் பிரச்சாரத்தின் மூலமாக, நகரத்துக் காலிகளையும், கூலிகளையும் கொண்டு தடுக்கலாம் என்று நினைத்ததற்கு மாறாக, எப்படி பெரியார் கொள்கை அறவழியிலே பிரச்சாரம் செய்து, அடக்கு முறைகளையும் சந்தித்து, அவதூறுகளை எல்லாம் தூள்தூளாக்கி மிகப்பெரிய அளவிலே வெற்றி பெற்றது என்ற வரலாற்றை நினைவூட்டி, அதேபோலத்தான் எவ்வளவு எதிர்ப்புகள், ஏளனங்கள், ஏகடியங்கள் எத்தனை வந்தாலும், எதிர்நீச்சல் அடிக்க இந்த இயக்கம், இன்றைக்கும் அந்த கருப்புச் சட்டைப்படைத் தயார்! தயார்! தயார்! என்று சொல்வதற்கான அறிவிப்புக்காகத்தான் அற்புதமான இந்தத் திறந்தவெளி மாநாடு!
எந்தவிதமான கைமாறும் கருதாத,
ஓர் எளிய தொண்டர் துரைராஜ்!
திராவிடர் கழகத்திற்கு மதுரையிலே எப்போதும் ஒரு பெரிய உதவியாக இருந்து, தூண் போல இருந்து இயக்கம் வளர்வதற்கு அரும்பாடுபட்டவர்கள் எத்த னையோ பேர் உண்டென்றாலும், குறிப்பாக தேவசாயம் போன்றவர்கள், அன்னத்தாய் போன்றவர்கள், அண்மையிலே மறைந்த வழக்குரைஞர் சித்தார்த்தன் போன்றவர்கள் இருந்தார்கள். இந்த ஓபுளா படித்துறை கூட்டம் என்று சொன்னால், பல நேரங்களில் அந்தக் கூட்டம் சிறப்பாக இந்தப் பகுதியில் நடைபெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து எந்தவிதமான கைமாறும் கருதாத, ஓர் எளிய தொண்டராக இருந்துப் பணிகளைச் செய்த துரைராஜ் அவர்களுடைய பெயரால் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த நினைவரங்கம்.
ஓர் அற்புதமான சிறந்த வழக்குரைஞர் மகேந்திரன்!
அதேபோல எங்களுடைய இயக்கத்திற்கு ஒப்பற்ற ஓர் அற்புதமான சிறந்த வழக்குரைஞர் என்று சொன்னால், அவர் மறைந்தும், மறையாமல் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற, எங்களால் உருவாக்கப்பட்ட, மாணவர் கழகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட அருமை வழக்குரைஞர் மகேந்திரன் அவர்கள் ஆவார்கள். ஆகவே, அத்தனைப் பேரையும் நினைவூட்டுகின்ற மேடையாக இந்த மேடை இருக்கின்றது. நீங்கள் எல்லாம் ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள், ஊடகவியலாளர்கள், சகோதரர்கள் உள்பட. அனைவரையும் வருக! வருக! வருக! என்று ஒரு பெரியார் தொண்டன் என்ற முறை யிலே உங்களுக்கு வரவேற்பு அளிப்பது என்னுடைய கடமை.
பெரியார் தொண்டர்களுக்குத் தொண்டன் என்ற முறையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன்!
எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கக்கூடிய செயல்வீரர் அருமை நண்பர் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்; நானும், உங்களை வரவேற்கிறேன்! பெரியார் தொண்டர்களுக்குத் தொண்டன் என்ற முறையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன். ஏனென்றால் இன்றைய கூட்டம் வரலாற்றுப் பெருமை மிகுந்த ஒரு கூட்டம். இதே ஓபுளா படித்துறையிலும் சரி, இதே மதுரை மாநகரிலும் சரி, எத்தனையோ கூட்டங்களில் நான் பேசக்கூடிய நிலை இருந்திருக்கிறது. தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்றாலும், இன்றைக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி, எனக்கு, என் வாழ்நாளில் மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சிகரமானதாக நம்முடைய தோழர்களைப் பார்க்கும்போது, அவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது இருக்கின்ற பல இளைஞர்களுக்குத் தெரியாத ஒரு வரலாறு – இன்றைக்கு நீங்கள் பார்க்கிறீர்கள்; இன்றைக்குத் திராவிடர் கழகக் கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. தொந்தரவின்றி நடைபெறுகின்றது. இன்னும் ஒருபடி மேலே சொன்னால், காவல் துறையினரின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது. இப்போதெல்லாம் அறிவியலுடைய நுட்பத்தாலே காணொலி வசதி இருக்கிறது. அதன்படி எல்லா தோழர்களும் இங்கே வந்திருக்கிறவர்கள், வருகிறவர்கள் போக, இந்தக் கூட்டமும், இங்கே இருக்கிறவர்களுக்காக மட்டுமல்ல; உலகத்தினுடைய எல்லா பகுதியில் இருக்கிறவர்களும் இந்தக் கூட்டத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வசதி அறிவியலினாலே பரப்பப்பட்டிருக்கிறது. ஆகவே, எங்கிருந்து கேட்டாலும், கேட்கின்ற அருமைத் தோழர்களே, நண்பர்களே, பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
பெரியார் என்றாலே, எதிர்நீச்சல் என்று அர்த்தம்; எதிர்நீச்சல் என்றால் பெரியார்!
இந்தக் கூட்டத்திற்கு என்ன தலைப்பு வைத்திருக்கிறோம் என்று சொன்னால், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்!’’ அதுதான் இந்தக் கூட்டத்தினுடைய தலைப்பு. பெரியார் என்றாலே, எதிர்நீச்சல் என்று அர்த்தம். எதிர்நீச்சல் என்றால் பெரியார். பெரியார் மட்டு மல்ல, பெரியாரிடத்திலே குருகுலத்திலே பயின்றவர்கள் ஆனாலும், பெரியாரிடத்திலே இருந்தபோது, இன்றைக்கு அரசியல் பிரிவாக, திராவிட இயக்கமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, அதேபோல மற்ற மற்ற அமைப்புகளாக இருக்கக்கூடியவற்றிலே இருக்கின்ற பலரில், யாராக இருந்தாலும், அவர்களும் எதிர்ப்பைச் சந்தித்தவர்கள்தான். எல்லா விதமான செய்திகளும் உண்டு. அப்படிப்பட்ட எதிர்ப்பைச் சந்தித்தது மட்டுமல்ல; வரலாற்றை வென்றார்கள். அந்த வரலாற்றை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். ஓர் இயக்கம், ஒரு லட்சியம், அந்த லட்சியத்தினுடைய பாதை – ஈரோட்டுப் பாதை என்று சொன்னால், அந்தப் பாதை இன்றைக்குச் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இன்றைக்கும் எதிர்ப்பு இருக்கிறது; என்றைக்கும் எதிர்ப்பு இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், எங்கள் இயக்கம் வளர வேண்டுமானால், எதிர்ப்பு என்ற உரம் போட வேண்டும். அந்த உரம், வளர வளர, இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும். இது ஆயிரம் காலத்துப் பயிர்; இந்தத் திராவிடத்தை, சுயமரியாதை இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்பதற்கு, உங்களுக்கு தெம்பூட்ட வெறும் பேச்சு அல்ல; வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மதுரையிலே இந்த திறந்தவெளி மாநாடு; எதிர்நீச்சலில் வென்ற தந்தை பெரியார் என்ற சிறப்பான இந்த தலைப்பு.
தனிப்பட்ட முறையிலே எங்களுக்கு யாரும் எதிரிகள் கிடையாது!
அருமைத் தோழர்களே, இரண்டு, மூன்று செய்தி களைச் சொல்ல வேண்டும். அதில், வரலாறு ஒரு பாகம்; திராவிட இயக்க வரலாறு – எப்படிப்பட்ட பாதையைக் கடந்திருக்கிறோம்? என்று. உங்களுக்குத் தெரியும், வரலாறு. சங்கம் வளர்த்த மதுரை – அந்த மதுரையில் உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரிமா நோக்கு என்று ஒன்று உண்டு. அரிமா நோக்கு என்றால், சிங்கம் தான் நடந்து சென்ற பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும். அப்படித் திரும்பிப் பார்க்கின்ற அரிமா நோக்கு மாதிரி, இந்த நிகழ்ச்சிகளிலே, அந்தப் பாதையில், எதிரிகள் யார் இருந்திருக்கிறார்கள்? அந்த பார்வையிலே எதிரிகளைப் புரிந்துகொண்டது மட்டுமல்ல, இன்னும் யார் யார் எங்கே புதைந்திருக்கிறார்கள்? யார், யார் எதிரிகள்? எந்த ரூபத்தில இருக்கிறார்கள்? இந்தக் கொள்கைக்கு எதிரிகள் – தனிப்பட்ட முறையிலே எங்களுக்கு யாரும் எதிரிகள் கிடையாது. நாங்களும அவர்களுக்கு எதிரிகள் கிடையாது. எங்களுக்கு ஆதிக்கக் கொள்கைகள் தான் எதிரிகள். தனி நபர்கள் ஒருபோதும் எதிரிகள் அல்ல. இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லும்போது, தனிப்பட்ட ஆரியர்களாக, பார்ப்பனர்களாக இருக்கக்கூடியவ பலர் எங்களுக்கு நண்பர்களாகக் கூட இருப்பார்கள். நட்பு வேறு; கொள்கை வேறு. அந்த வகையிலே தான், தந்தை பெரியார், இந்த இயக்கம், எப்படிப்பட்ட காலகட்டங்களை எல்லாம், எப்படிப்பட்ட நெருப்பு ஆறுகளை எல்லாம், அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். ஓர் இயக்கத்தை, ஒரு கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், இது எல்லா கட்சிகளுக்கும் பாடம். இன்றைக்குப் பதவியைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் ஓடுவார்கள். அது முக்கி யமல்ல; ஆனால், கொள்கையைப் பற்றி நினைக்கிற வர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குக் கொள்கை உண்டு. அவர்கள் அதற்கு விலை கொடுப்பார்கள்.
கொள்கையை அடைய வேண்டுமானால்,
நல்ல விலை கொடுக்க வேண்டும்!
தந்தை பெரியார் போல, ஓர் அற்புதமான பகுத்தறிவு பகலவனைப் பார்க்க முடியாது. நாங்கள் அடிபடும் போது, நாங்கள் உதைபடும் போது, நாங்கள் வதைப்படும் போது, அய்யா அவர்கள் சொன்னார்கள், ‘‘இதற்காக அச்சப்பட வேண்டாம்; இதற்காக வருத்தப்பட வேண்டாம். கொள்கையை அடைய வேண்டுமானால், நல்ல விலை கொடுக்க வேண்டும்’’ என்றார்.
எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கினால், அதற்குப் பயனில்லை. நல்ல விலை கொடுத்து வாங்கினால் தான், அதற்கு மரியாதை. காரணம். இவர்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது. உற்பத்தி செய்யக்கூடிய சக்தி அவர்களுக்கும் இருக்கிறது என்று எல்லோருக்கும் புரியும். ஆகவேதான், அதை செய்யக்கூடிய ஓர் அற்புதமான ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது என்பதற்காகத்தான், இந்த எதிர்நீச்சல் பற்றிச் சொல்லுகிறோம்.
1946 ஆம் ஆண்டு நடைபெற்றவை எவை?
எதிர்நீச்சல் என்று சொல்லும்போது, உங்களில் சிலருக்குத் தெரியும். எல்லோருக்கும் தெரியாது. 1946 ஆம் ஆண்டு நடைபெற்றவை எவை? இன்று 80 வயது ஆகிறவர்களுக்குக் கூட தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர்கள் அப்போது ஒரு வயது குழந்தையாக இருந்திருப்பார்கள். அதிலொன்றும் சந்தேகம் இருக்க முடியாது. ஆகவேதான், வயது இன்னும் கூடுதலா இருக்கவேண்டும்.
(தொடரும்)
