சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ள லாம் என்றும், தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப் பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இந்தியாவில் போலி வழக்குரைஞர்கள்
7 லட்சம் பேர்
மேனாள் நீதிபதி பாரதிதாசன் தகவல்
சென்னை செப் 06 இந்தியாவில் போலி வழக்குரைஞர்கள் மிகுந்திருப்பதாக மேனாள் நீதிபதி பாரதிதாசன் கூறினார். அவர் கூறியுள்ளதாவது:
எதிர்காலத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் நிலை வரலாம். மாணவர் சேர்க்கையின்போது தகுதி அடிப்படையில்தான் பெண்கள் வருகின்றனர். வழக்குரைஞர் தொழிலையும் நன்றாக செய்கின்றனர். கீழமை நீதிமன்றங்களில் 60 சதவீதத்துக்கு மேல் நீதிபதி களாக பெண்கள் உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் உள்ளனர். இது மகிழ்ச்சியான செய்தி!
வழக்குரைஞர் தொழில் மீது அதிகளவு புகார் உள்ளது. வழக்குரைஞரை யாரும் மதிப்பதில்லை. அந்த அளவுக்கு தொழில் சென்றுவிட்டது. இதற்கு காரணம், எங்கெங்கோ படித்துவிட்டு வழக்குரைஞராக வந்து விடுகின்றனர். இது இல்லாமல் போலி வழக்குரைஞர்களும் உள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் 30 முதல் 40 சதவீதம் போலி வழக்குரைஞர்கள் உள்ளனர் என்று பார்கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 18 லட்சம் வழக்குரைஞர்களில் 6 லட்சம் முதல் 7 லட்சம் போலி வழக்குரைஞர்கள் உள்ளனர். மோச மடைந்துள்ள இத்தொழிலை காப்பாற்ற வேண்டும். இதற்கு நேர்மையாக, கடினமாக, கட்சிகாரர்களுக்கு உண்மை யாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
25 விழுக்காடு சிறப்பு ஊதிய உயர்வுகோரி
ரேஷன் கடை ஊழியர்கள்
கருப்பு வில்லை அணிந்து போராட்டம்
கருப்பு வில்லை அணிந்து போராட்டம்
சென்னை, செப்.06 சிறப்பு ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு வில்லை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்கள் பொது விநியோகத் திட்டத்துடன், ஆதார் சரிபார்ப்பு, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதில் அரசு திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்க்க வேண்டும், கூடுதல் பணியாளர்கள் மற்றும் பிஓஎஸ் கருவிகள் வழங்க வேண்டும், எடையாளர்களை நியமிக்க வேண்டும், 25 சதவீதம் சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு வில்லை அணிந்து அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், செப்.10-ஆம் தேதி வரை இப்போராட் டத்தில் ஈடுபட உள்ளதாகவும், முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110ஆம் விதியின் கீழ் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
