மாணவர்களின் போராட்ட உரிமை : உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்கத் தீர்ப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மாணவர்கள் தங்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் அறவழியில் போராட்டம் நடத்துவது ஜனநாயக அடிப்படையிலான இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை. அநீதிக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான இத்தகைய போராட்டங்கள் தான் உரிமைகளை மீட்கவும், நீதியை நிலை நாட்டவும் உதவியிருக்கின்றன. ஆனால், அத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவோரைக் குறிவைத்து அரசுகளும், அரசுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்து, அவர்களை மிரட்டுகின்றன. அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன. காலத்தையும், பொருளையும், உழைப்பையும் கொட்டிப் படிக்க வைக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குரியாவதை ஏற்க முடியாத பெற்றோரும், ‘தங்கள் பிள்ளைகள் அரசியல் அறிவு அற்றவர்களாக, சமூக உணர்வு அற்றவர்களாக, அடிப்படை அறச் சீற்றம் அற்றவர்களாக வளர்வது பாதுகாப்பானது’ என்று கருதும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது நாட்டின் எதிர்காலத்திற்கும், வளர்ச்சிக்கும், ஜனநாயகத்துக்கும், கருத்துரிமைக்கும் நல்லதல்ல. அண்மையில் புதுடில்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள், மாணவர்களை ஒன்றிய அரசு கடுமையாக மிரட்டியது; அவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் தொனியில் அச்சுறுத்தியது. ஆனால், உச்சநீதிமன்றம் அப்போதும் தனது குரலைப் பதிவு செய்து, அவர்களின் போராட்ட உரிமையை நிலைநாட்டியது.

தற்போது, அதே போன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மாண்பமை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும். மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் பங்கேற்பதை எதிர்த்த நல்சார் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்ட இந்தியப் பார் கவுன்சில் மேற்கொண்ட முயற்சியைக் கண்டித்தது.

இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்பு ஒரு வழக்கில் போராடும் மாணவர்களைக் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டார் என்பதால், மாணவர்கள் பல இடங்களிலும் அதனைக் கண்டித்துப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் தெலங்கானாவில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. இது தொடர்பாக இந்தியப் பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்கள் மாணவர்களின் பேச்சுரிமை மற்றும் சங்கங்களை அமைப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது ஒருவித அச்ச உணர்வை அல்லது முடக்கத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் தான், அரசியலமைப்புச் சட்டத்தின்படி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பயன்படுத்திய அந்த மாணவர்களை மிரட்ட முயன்றது தவறு என்று உச்ச நீதிமன்றம், (செப்டம்பர் 3, 2026) இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

இதன்படி, சட்ட மாணவர்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது தண்டிக்கவோ இந்திய வழக்குரைஞர்கள் கவுன்சிலுக்கோ அதன் தலைவர் மனன் குமார் மிஷ்ராவுக்கோ அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.  மாணவர்கள் மீது விசாரணை நடத்துமாறு நல்சார் நிர்வாகத்திற்கும், அவர்களின் தொழில்முறைப் பதிவைத் (enrolment) தடுக்குமாறு மாநில வழக்குரைஞர்கள் கவுன்சில்களுக்கும் இந்திய பார் கவுன்சில் அனுப்பியிருந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியிட்ட கடிதங்களை  ஒரு மணி நேரத்திற்குள் அது திரும்பப் பெற்றிருந்த போதிலும், பார்கவுன்சிலின் அதிகார வரம்புகளைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

நல்சார் மாணவர்களின் பதிவு மீதான தடையை சில மணிநேரங்களிலேயே பார் கவுன்சில் திரும்பப் பெற்றதுடன் 2026-ஆம் ஆண்டு பட்டதாரிகள் அனைவரும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. பல்கலைக்கழகச் சூழலையும், எதிர்காலத்தில் அத்தகைய சூழலை மீற முயற்சிக்கும் செயல்களுக்கு எதிராக மாணவர்கள் தங்கள் கருத்து வேறுபாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் உரிமையையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல், “மாணவர்கள் விவகாரத்தில் பார் கவுன்சிலுக்கு எந்த அதிகார வரம்போ அல்லது சட்டப்பூர்வ தகுதியோ இல்லை. அது அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது,” என்று  குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இப்பிரச்சினையை ஆழமாகப் பரிசீலித்ததில், 1961-ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டம், சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை அல்லது தண்டனை நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவொரு அதிகாரத்தையும் இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்கோ அல்லது மாநில வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்கோ வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கவில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வருகிறோம்,” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்தது.

இது இந்திய பார் கவுன்சிலுக்கு மட்டுமல்ல; ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பும் அனைத்து கல்வி நிறுவனத்தினருக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சரியான குட்டு ஆகும்.

இருப்பினும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்படும் அமைப்புகளால் மாணவர்களின் உரிமைகள் மீறப்படும் சூழல் எதிர்காலத்தில் ஏற்பட்டால், நீதிமன்றம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இவ்வழக்கைத் தொடுத்த நல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் மாணவன் திரு. பரமேஷ்வரின் கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஏற்பட்டுள்ள மாற்றமும் அதன் அடிப்படையிலான அந்த அமர்வின் தீர்ப்பும் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல,  இனி வரும் காலங்களிலும் நீதித்துறை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றுமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *