இரத்த வாந்தி: காரணங்கள், சிகிச்சைமுறைகள்!-மருத்துவர் சு.நரேந்திரன் இரைப்பைக் குடல் அறுவைச் சிகிச்சை வல்லுநர், தஞ்சாவூர்.

7 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மனிதனுக்கு அச்சமூட்டும் நோய்களில் இரத்த வாந்தியும் ஒன்றாகும். இரத்த ஒழுக்கு உடலில் எங்கு நிகழ்ந்தாலும் அதற்கு காரணமான இரத்த நாளங்கள் சுருங்கி அதில் இரத்த ஒழுக்குகள் ஒன்று சேர்ந்து அடைத்து கொள்வதால் இரத்த உறைவு ஏற்படுகிறது. இதுவே சில நோய்களாலும் மருந்துகளாலும் பாதிக்கப்பட்டு இயற்கையின் சக்தியை மீறிய நிலையில் இரத்த ஒழுக்குக்கு பிறகு இரத்த வாந்தி உண்டாக வழியமைக்கிறது.

ஒரு காலத்தில் முனி, காட்டேரி போன்றவை அடித்து இரத்த வாந்தி எடுத்து இறந்து விட்டதாகக் கருதும்நிலை போய் இப்பொழுது இரைப்பை உள்நோக்கி மற்றும் எக்ஸ்ரே உதவிகளுடன் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

குடல்புண்

இரத்த வாந்தி ஏற்பட முக்கியமான காரணம் “பெப்டிக் அல்சர்” என்று கூறப்படும் குடல் புண்ணே ஆகும். அதிலும் முன்சிறு குடலில் தோன்றும் புண்ணினால்தான் சுமார் 50 சதவீதம் பேருக்கு இரத்த வாந்தி ஏற்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக இரைப்பைப் புண்ணினால் இரத்த வாந்தி ஏற்படுகிறது.  இவ்விடங்களில் உள்ள சளி படலம் அரிக்கப்பட்டு சிதைந்து விடுவதால்தான். இவ்வகை அரிப்பு அல்லது புண் அதிக அமிலம் சுரப்பது அல்லது எககளிப்பு காரணமாக முன்சிறு குடலிற்கு மேலே பித்தநீர் செல்வதன் காரணமாக ஏற்படக் கூடும். இரைப்பைக் குடல் புண்கள் நாட்பட்ட நிலையில் அல்லாமல் திடீரென்று கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.

காரணம் என்ன?

தலைவலி என்றவுடன் ஆஸ்பிரின் மாத்திரைகளை உண்ணும் வழக்கம் நம்மிடையே சர்வ சாதாரணமாகும். இதைப் போலவே மூட்டு வலிக்கும் பூட்டோசோலிடின் இண்டோமெதசின் மருந்துகளும், ஆஸ்த்மா என்ற ஈளை நோய்க்கு கார்டிசோன் மருந்துகளும் வெகு சாதாரணமாக உட்கொள்ளப்படுகின்றன. இம்மருந்துகள் இரைப்பை முழுவதும் இரத்தக் கசிவை உண்டாக்கி இரத்த வாந்தி ஏற்படுத்தும் ஆற்றலையுடையன. சில சமயம் தெரிந்தோ தெரியாமலோ எடுத்துக்கொள்ளப்படும் காரம் அமிலங்களினாலும் இரைப்பை புண் ஏற்பட்டு இரத்த வாந்தி ஏற்படும்.

மது அருந்திய பின்  உணவுக் குழாயில் வெடிப்பு ஏற்படுதல், இரைப்பை இட மாற்றம் இரைப்பை ஏற்றம், உணவுக்குழல் அழற்சி, உணவுக்குழல் புற்று, இரைப்பைப் புற்று, இரைப்பை புண்ணிற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் புண், கணையப் புற்று, பாரம்பரிய இரத்த ஒழுக்கு நோய், இரத்த நாளடைப்பு ஆகியவை காரணமாக இரத்த வாந்தி ஏற்படும்.

சில சமயம் வயிற்றில் உள்ள போர்டல் சிறைகளில் அதிக அழுத்தம் ஏற்படும்போது உணவு குழாயில் உள்ள சிரைகள் வீங்கி தடித்து காணப்படும். இந்நிலையில் இருமல் அல்லது முக்குதல் காரணமாக சிறு அழுத்தம் ஏற்படும்பொழுது கூட கட்டுக்கடங்காத இரத்த வாந்தி ஏற்படுகிறது.  சளியுடன் வெளிவரும் இரத்தத்தையும், வாந்தியுடன் வரும் இரத்தத்தையும் வேறுபடுத்தி அறிதல் வேண்டும்.

உணவு மண்டலத்தில் ஏற்படும் இக்காரணங்களைத் தவிர்த்து தலையில் ஏற்படும் அடியின் காரணமாக மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் விரிவு ஏற்பட்டு கசியும் இரத்தம், ஈறு சில்லு மூக்கில் ஏற்படும் இரத்த ஒழுக்கு முதலியவை விழுங்கப்பட்டு உணவு குழாய்க்குள் செல்வதாலும் வயிற்றிலிருந்து மீண்டும் இரத்த வாந்தியாக வெளிவரும்.

காச நோய், ஈரிதல் வால்வு இறுக்கம் போன்ற நோய்களினால் சிலசமயம் நுரையீரல்களில் இருந்து இரத்தம் வெளிவருவதும் உண்டு. இது சளியுடன் கலந்து காணப்படும். நுரையீரலில் இருந்து வெளிவரும் இரத்தம் நுரையுடன் சளியுடனும் இருப்பதை அறிந்தால் இரத்தம் உணவு மண்டலத்தில் இருந்து வெளிவருவதை சுலபமாக வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்.

சளியுடன் காணப்படும் இரத்தத்தை இரத்த வாந்தியிலிருந்து வேறுபடுத்தி அறிவது அவசியம். ஏனெனில், இரண்டுக்கும் மருத்துவம் வேறு வேறு ஆகும்.

அறிகுறிகள்

இரத்த வாந்தி ஏற்பட்டவரின் உடலில் இரத்தக் குறைவிற்கான அறிகுறிகள் சுமார் 500 மில்லியில் இருந்து ஆயிரம் மில்லி ரத்தம் வெளியேறும் வரை தெரியாது. சிறிய அளவில் இரைப்பையில் இரத்தக் கசிவு இருப்பின் வாந்தியில் இரத்தம் கருநிறமாக இரைப்பை சுரப்பு நீருடன் கலந்து காணப்படும். இரத்தக்கசிவு அதிகமாக ஏற்பட்டால் சிரைகள் கழுத்தில் சரியாகத் தெரியாது. மருத்துவப் பயனாளிக்கு பலவீனம், மயக்கம், நாடித்துடிப்பு அதிகரிப்பு இரத்த அழுத்தக் குறைவு, வியர்வை, தாகம், வாந்தி ஏற்படும். உணர்வு கால் கைகள் குளிர்ந்த நிலை போன்ற அறிகுறிகள் உண்டாகும். எனவே இந்நிலை தோன்றிய பின் உடல்நிலை சீர்கெட்டு காணப்படும். இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் இதய சிறுநீரக கல்லீரல் பழுது இருப்பின் மருத்துவப் பயனாளிக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மது அல்லது மாத்திரை அருந்திய பின்பு இரைப்பையில் புண் அல்லது புற்று இருப்பதை அறிந்த நிலையில் உள்ள மருத்துவப் பயனாளிக்கு இரத்த வாந்தி ஏற்பட்டால் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. 50 வயதுக்கு மேல் இரத்த வாந்தி ஏற்பட்டாலும் மரணம் அதிக அளவில் ஏற்படும். ஏனெனில் இரத்தக் குழாயில் தடிப்புடன் இருப்பதுதான் காரணம். குடலில் இரத்தம் கசிந்து குடலுக்கு செல்லும் பொழுது சில மாறுதல்கள் நிகழும். இரத்தக்கசிவு குறைவாக இருந்தால் வாந்தியாக வராது. மலத்துடன் சேர்ந்து கருமலமாக வெளியேறும். ஆனால் இரத்தக்கசிவே இரத்த ஒழுக்காக மாறி அதிகமாக ஏற்படும் நிலையில்தான் வாந்தி ஏற்படுவதோடு மலம் கருநிறமாகவும் வெளிவரும். இரத்தம் உடலில் ஜீரணிக்கப்படும் பொழுது இரத்தத்தில் யூரியா என்ற பொருள் அதிகமாகி மேலும் கெடுதலை விளைவிக்கும்.

இரத்த வாந்தியின் மூல காரணத்தை கண்டுபிடிக்க உதவும் அறிகுறிகள்

குடல் புண்ணில் வயிற்று எரிச்சலும் போர்டல் இரத்த அழுத்த நோயில் கல்லீரல் வீக்கமும் வயிற்றில் நீரும் காணப்படும். உணவுக் குழாய் வெடிப்பு, மது அருந்தியதால் ஏற்பட்ட வாந்திக்கு பின் பொதுவாக ஏற்படும். இவற்றைத் தவிர தலைவலி, மூட்டுவலி, ஆஸ்த்துமா போன்ற நோய்களுக்கான மருந்து உட்கொண்டதை அறிந்து பேரியம் எக்ஸ்ரே எடுத்து பின் இரைப்பை உணவு குழாய் நோய்களை அறிந்து கொள்வது எளிது. மிகத் துல்லியமான முறையில் இரைப்பை உள்நோக்கி கருவி வாயினுள் நுழைத்து உணவு குழாய் இரைப்பை முன் சிறுகுடல் முதலியவைகளில் உள்ள நோய்களையும் நேரடியாக இரத்த ஒழுக்க நிகழும் இடத்தையும் அறிய முடியும்.

மருத்துவம்.

இரத்த வாந்தி ஏற்பட்டவுடன் மருத்துவப் பயனாளியை படுக்கையில் கிடத்தி ஓய்வெடுத்து கொள்ள செய்ய வேண்டும். தூக்க மருந்து சிறிதளவு கொடுக்க வேண்டும். இந்நிலையில் மருத்துவப் பயனாளி உணர்ச்சி வசப்படாமல் பயமின்றி இருக்க இது உதவும். பெரும் அளவில் ஏற்படும் இரத்த வாந்திக்கு மருத்துவம் மாற்று இரத்தம் செலுத்துவது ஆகும். ஆகவே மருத்துவமனையில் மருத்துவப் பயனாளியை அனுமதிப்பது அவசியம். அதாவது இரத்தம் உடலில் இருந்து எவ்வளவு வெளியேறி உள்ளது என்பதை அறிய உடன் இரத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடத்தில் ஒரு முக்கியமான கருத்தை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.

மருத்துவப் பயனாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் இரத்தம் கொடுக்கச் சொல்லும்போது அவர்கள் நீங்களே எப்படியாவது அதை வாங்கி போட்டு விடுங்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது. இரத்தம் என்பது கடைகளில் கிடைக்கும் பொருள் இல்லை. மேலும் இரத்தத்தைக் கொடுத்து காசு வாங்கும் பழக்கம் உள்ள நபரிடம் இரத்தம் பெற்றாலும் அவைகள் நல்ல நிலையில் இருப்பதில்லை. இரத்தம் நாம் நம் உறவினருக்கு இரத்தம் தேவைப்படும் பொழுது கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதனால் யாதொரு தவறும் இல்லை.மேலும் நாம் உயிரை காப்பாற்றினோம் என்ற மன அமைதி நமக்கு ஏற்பட்டு ஒரு மன மகிழ்வு ஏற்படும்.

இரத்த ஒழுக்கு இருந்து கொண்டே இருந்தாலும் ரப்பர் குழாய் கொண்டு உறிஞ்சி அறிந்த பிறகு சிறிது உப்புடன் அய்ஸ்நீரை கலந்து அதே குழாயின் மூலம் செலுத்தி இரைப்பையை குளிர் நிலையில் இருக்க செய்து மறுபடியும் நீரை உறிஞ்சி எடுப்பது மருத்துவர் வழக்கம். இதனால் இரைப்பையில் கசிந்த ரத்தமும் வெளியேறிவிடும். இரைப்பை புண்ணிற்கு திரவமாக அமில எதிர்ப்பு மருந்துகளையும் அக்குழாய் வழியாக செலுத்த முடியும். போர்டர் சிரை அழுத்ததினால் உண்டாகும் உணவுக் குழாய் சிறைப்புடைப்பு வெடிப்புக்கு செங்ஸ்டேக்கன் என்ற குழாய் மிகப் பயன்படுகிறது.இரைப்பை உள்நோக்கு கருவி கண்டுபிடிப்புக்குப் பிறகு உணவுக் குழாய் இரத்தப் புடைப்புக்கு நேரடியாக அதன் மீது ஊசிமூலம் மருந்தைச் செலுத்தி குணப்படுத்த முடிகிறது. இம் மருத்துவத்தின் மூலம் பெரிய அளவில் செய்ய வேண்டிய பல அறுவை சிகிச்சைகள் தடுக்கப்பட்டு மருத்துவப் பயனாளி கடந்த பத்து ஆண்டுகளாக அறிவியல் முன்னேற்றத்தினால் காப்பாற்றப்பட்டு வருகிறார். இம்மருத்துவம் மிகச் சுலபமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செய்யப்படுகிறது.

இரத்த வாந்தியில் இருந்து விடுபட்ட மருத்துவப் பயனாளிகள் குணமான பின் காபி, தேநீர், சிகரெட், மது போன்றவற்றை அருந்தக் கூடாது. மசாலா பொருட்களையும், சூடான பொருள்களையும் உணவில் இருந்து ஒதுக்கிவிட்டு வாழ்வது மறுமுறை இரத்த வாந்தி ஏற்படாமல் தடுக்க உதவும்.

அறுவைச் சிகிச்சை

மருந்துகளில் மூலம் குணம் ஆகாத நிலையில் பொதுவாக 45 வயதுக்கு மேல் அறுவை சிகிச்சை தேவைப்படும் இரத்த ஒழுக்குடன் வயிற்று வலி அல்லது தொடர்ந்து இரத்தக் கசியும் நிலை இரைப்பைப் புற்றுடன் கூடிய இரத்த ஒழுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் இரத்த ஒழுக்கு ஆய்வுகளுக்கு அறுவை சிகிச்சையே சிறந்ததாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *