சமூகநீதி பேசும் பட்ஜெட்டில் அருந்ததியர் உள்ளிட்ட
மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு!
சென்னை, ஆக. 29- தமிழநாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், அருந்ததியர் உள்பட பின்தங்கிய மக்களின் உரிமைகள் புறக்கணிப்புக்கு ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி குறித்து பேசப்பட்டாலும், பட்டியலின மக்களுக்குள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அருந்ததியர் சமூகத்தின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கிய 3 சதவீத உள் இடஒதுக்கீடு, கடந்த 17 ஆண்டுகளாக எந்த அளவிற்கு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை.
அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உள் இடஒதுக்கீட்டின் மூலம் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளனவா? அதன் உண்மை யான பயன்கள் அருந்ததியர் மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளன?
என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
எனவே, கடந்த 17 ஆண்டுகளாக அருந்ததியர் உள் இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
தீர்ப்பை செயல்படுத்தும்
அறிவிப்பு ஏன் இல்லை?
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், பட்டியலின மக்களுக்குள் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் சமூக மற்றும் கல்வி பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு உள் வகைப்படுத்தல் செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த முக்கியமான சட்ட வாய்ப் பைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின சமூகங்களின் உண்மையான சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு உரிய வகைப்படுத்தலின் மூலம் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கான எந்தவிதமான உறுதியான அறிவிப்பும் தற்போதைய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு புறம் இருக்க, அதை செயல்படுத்தும் அரசின் அரசியல் விருப்பம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது.
“ஆதிதிராவிடர்” என்ற பெயர் மட்டும் சமூகநீதி ஆகாது!
பொதுப்பிரிவின் பெயரை மட்டும் பயன்படுத்தி சமூகநீதி துறைக்கான பட்ஜெட்டை அமைப்பது உண்மையான சமூகநீதியை உறுதி செய்யாது.
ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வரும் “ஆதிதிராவிடர் நலத்துறை” என்ற பெயரை “சமூகநீதி நலத்துறை” என்று மாற்றி அனைத்து அரசு தளங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொதுப்பெயரை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் ஒவ்வொரு சமூகமும் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளை மறைத்து விட முடியாது.
பெயரில் சமூகநீதி அல்ல; உரிமைகளி லும், பிரதிநிதித்துவத்திலும், திட்டங்களின் பயன்களிலும் சமூகநீதி இருக்க வேண்டும்.
பொத்தாம்பொதுவான பட்ஜெட் – பின்தங்கிய மாவட்டங்களுக்கு தனிக்கவனம் எங்கே?
சமூகநீதி துறையின் திட்டங்கள் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சமமாக சென்றடைந் துள்ளனவா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, நிலம், தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களின் பயன்கள் குறைவாக கிடைக்கப்பெற்ற மாவட்டங்கள் எவை என்பதை கண்டறிந்து, அந்த மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்களும் கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இத்தகைய மாவட்டங்களின் தனித்துவமான பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு சிறப்பான நடவடிக் கைகள் அறிவிக்கப்படவில்லை.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பொத்தாம்பொதுவான பட்ஜெட் அமைப்பது சமூகநீதி அல்ல.
எங்கு அரசின் திட்டங்கள் குறைவாக சென்றடைந்துள்ளதோ, எங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பின்தங்கியுள்ளதோ, அங்குதான் அரசின் கவனமும் நிதியும் அதிகமாக செல்ல வேண்டும்.
தாட்கோ கடன் மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எங்கே?
பட்டியலின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்கள், நடைமுறையில் வங்கி கடன் கிடைக்காத காரணத்தால் பல நேரங்களில் பயனற்றதாகி வருகின்றன.
குறிப்பாக, தாட்கோ திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பட்டியலின மக்களுக்கு கடன் வழங்க மறுக்கும் அல்லது காலதாமதப்படுத்தும் பொதுத்துறை வங்கிகள் மீது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அரசு திட்டங்களை அறிவிப்பது மட்டும் போதாது.
அந்தத் திட்டங்களுக்கான கடன் உண்மையில் மக்களுக்கு கிடைக்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
ஆனால், பட்டியலின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ள வங்கி கடன் மறுப்பு பிரச்சினைக்கு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
பெயருக்கு சமூகநீதி – நடைமுறையில் புறக்கணிப்பா?
அருந்ததியர் உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலை குறித்து வெள்ளை அறிக்கை இல்லை!
பட்டியலின மக்களுக்குள் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் நிலையை ஆய்வு செய்து வகைப்படுத்துவது குறித்த அறிவிப்பு இல்லை!
அரசின் திட்டங்கள் குறைவாக சென்றடைந்த மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை!
தாட்கோ உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் வங்கி கடன் மறுப்பு குறித்து நடவடிக்கை இல்லை!
இத்தனை முக்கியமான கேள்வி களுக்கும் பதில் இல்லாத நிலையில், வெறுமனே “சமூகநீதி பட்ஜெட்” என்று கூறிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆதித்தமிழர் பேரவையின் கண்டனம்!
ஒடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் உண்மையான தேவைகளை கண்டறியாமல், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்யாமல், பொத்தாம்பொதுவான அறிவிப்புகளை மட்டும் வெளியிடும் தற்போதைய சமூகநீதி துறை நிதிநிலை அறிக்கைக்கு ஆதித்தமிழர் பேரவை தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக,
* அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கடந்த 17 ஆண்டுகளில் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* பட்டியலின மக்களுக்குள் சமூக, கல்வி மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து உரிய வகைப்படுத்தலுக்கான நடவடிக்கையை அறிவிக்க வேண்டும்.
* “ஆதிதிராவிடர் நலத்துறை” என்ற பெயரை “சமூகநீதி நலத்துறை” என்று மாற்ற வேண்டும்.
* அரசின் திட்டங்கள் குறைவாக சென்றடைந்த மாவட்டங்களை கண்டறிந்து தனிச்சிறப்பு திட்டங்களும் கூடுதல் நிதியும் ஒதுக்க வேண்டும்.
* தாட்கோ உள்ளிட்ட திட்டங்களில் பட்டியலின மக்களுக்கு கடன் வழங்க மறுக்கும் பொதுத்துறை வங்கிகள் மீது கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வார்த்தைகளில் சமூகநீதி வேண்டாம்!
பட்ஜெட்டில் சமூகநீதி வேண்டும்!
அறிவிப்புகளில் சமூகநீதி வேண்டாம்!
நடைமுறையில் சமூகநீதி வேண்டும்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை புறக்கணிக்கும் எந்த பட்ஜெட்டையும் ஆதித்தமிழர் பேரவை ஏற்றுக்கொள்ளாது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
